No icon

கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சகா

டிசம்பர் 3 இல் வத்திக்கானில் கிறிஸ்மஸ் குடில், மரம்

வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலும், மின்விளக்குகளால் அழகுற ஒளிரும் கிறிஸ்மஸ் மரமும் பொது மக்களுக்குத் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மூன்றாந்தேதி இத்தாலி நேரம் மாலை 5 மணிக்கு கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்திருக்கும் மின்விளக்குகள் எரியவிடப்படும் நிகழ்வோடு கிறிஸ்மஸ் குடிலும் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் நாட்டின் நிர்வாகத்துறையின் தலைவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சகா அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் இந்நிகழ்வில், அத்துறையின் பொதுச் செயலர் அருள்சகோதரி ரஃபெல்லா பெட்ரினி அவர்களும், இவையிரண்டையும் நன்கொடையாக வழங்கியுள்ள இத்தாலியின் சூட்ரியோ, மற்றும் ரோசெல்லோ நகராட்சிகளின் பிரதிநிதிகளும், குவாத்தமாலாவின் பிரதிநிதிகளும் பங்கேற்பர். வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், 2023 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி வரை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

கிறிஸ்மஸ் குடில்

2022 ஆம் ஆண்டின் கிறிஸ்மஸ் குடிலை, வட இத்தாலியின் ஃப்ரியூலி-வெனிசியா கியுலியா பகுதியிலுள்ள ஊதினே மாநிலத்தின் சூட்ரியோ என்ற கிராமம் வழங்கியுள்ளது என்று, வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் துறை அறிவித்துள்ளது. மரவேலைப்பாடுகளுக்குப் புகழ்பெற்ற சூட்ரியோ கிராமத்தினர் அமைத்த இக்குடில் முழுவதும் மரத்தால் ஆக்கப்பட்டுள்ளது. இக்குடிலுள்ள திருவுருவங்கள் எல்லாம் கேதார் மரத்தாலானவை மற்றும் இவை சுற்றுச்சூழல் முழுமையாக மதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் மரம்

மேலும், முப்பது மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், மத்திய இத்தாலியின் அப்ருஸ்ஸோ மாநிலத்தின் ரோசெல்லோ மலைக்கிராமத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் 182 பேர் மட்டுமே வாழ்கின்றனர். மத்திய காலத்தில் உருவான பழமையான ரோசெல்லோ கிராமம், மத்திய காலத்தில் வாழ்ந்த வெர்டேவில் உள்ள சான் ஜியோவானி பெனடிக்ட் ஆழ்நிலை தியான துறவியரின் பிறப்பிடம் என்று பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இம்மலைக் கிராமத்தில், 54 மீட்டர் உயரமுள்ள சில்வர் ஃபிர் மரம் உட்பட உயரமான ஒயிட் ஃபிர் மரங்கள் பல உள்ளன.

இவ்வாண்டு இந்த கிறிஸ்மஸ் மரத்தை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வளிக்கும்லா குவாட்ரிஃபோக்லியோமையத்தின் இளையோர் அலங்கரிக்கின்றனர். மேலும், மற்றொரு கிறிஸ்மஸ் குடில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அரங்கத்தில் வைக்கப்படும். இதனை குவாத்தமாலா நாடு அமைக்கவுள்ளது.                   

Comment