No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்து

திருஅவையில் பெண் துறவிகளும் அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்டிரும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி உரைப்பதாகவும், இந்த பிப்ரவரி மாதத்தில் அவர்களுக்காகச் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அனைவரையும் வேண்டுவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாத செபக் கருத்துடன், காணொளிக் காட்சி ஒன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்துறவிகளும் திருஅவைக்கென தங்களை அர்பணித்துள்ள பொதுநிலை பெண்களும் இன்றி, திருஅவையை நாம் புரிந்துகொள்ள இயலாது என்றும் அதில் கூறியுள்ளார்.

திருஅவையில் தங்களை அர்ப்பணித்துள்ள பெண்கள் அனைவரும், இன்றைய உலகம் கண்டுவரும் சவால்களை எதிர்நோக்கி ஆற்றிவரும் பணியில், தங்கள் பணிவாழ்வுக்கு எது சிறப்பானதோ, அதனையே தேர்ந்து தெளிவுபெற்று கையிலெடுக்க வேண்டும் எனத் திருத்தந்தை தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஏழைகள், வாழ்வில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோர், கடத்தலில் ஈடுபட்டுள்ளோரால் அடிமைகளாக்கப்பட்டோர், ஆகியோருக்காகப் பணிபுரியும்போது, அதில் குறிப்பிடத் தகுந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், பிப்ரவரி மாதச்  செபக் கருத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் விண்ணப்பித்துள்ளார்.

மறைக்கல்வி ஆசிரியர்களாக, இறையியலாளர்களாக, ஆன்மிக வழிகாட்டிகளாக இவர்கள் ஏற்று நடத்தும் பணியில் கடவுளின் அன்பிலிருக்கும் அழகை வெளிப்படுத்த வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ள திருத்தந்தை அவர்கள், சரியான முறையில் நடத்தப்படாதபோது அதை எதிர்த்துப் போராடவும் முன்வரவேண்டும் எனவும் அர்ப்பண வாழ்வு வாழும் பெண்களிடம் எடுத்துரைத்தார்.

Comment