No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கடல்களில் இடம்பெறும் உரிமை மீறல்கள் முடிவுக்கு வர

மீனவர்களின் நலவாழ்வு, உரிமைகள் மற்றும் பணிபுரியும் சூழல் ஆகியவைகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து ஆராயும் நோக்கத்தில், திருப்பீடத்தின் ஸ்டெல்லா மேரிஸ் அலுவலகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டக் கூட்டத்தில், மீனவர்கள் பல ஆண்டுகளாக சந்தித்துவரும் சிரமங்கள் குறித்து கர்தினால் பீட்டர் டர்க்சன் எடுத்துரைத்தார்.

நவம்பர் 21 ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக மீனவர் தினத்தையொட்டி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீடஅவையினால் ஏற்பாடுச் செய்யப்பட்டக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் அதிகாரிகளுக்கு அத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள், துவக்க உரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.

மீனவர்கள் பல ஆபத்து நிறைந்த பணிகளில் கட்டாயப்படுத்தப்படுவது, பலமணி நேர வேலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது, அவர்களின் நலனில் அக்கறை காட்டப்படாதது என, பல்வேறு உரிமை மீறல்களுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுவதை எடுத்துரைத்து, அவர்களின் அபயக்குரல்களுக்கு செவிமடுக்கவும், உதவவும் வேண்டிய சமுதாயத்தின் கடமையை வலியுறுத்தினார்.

கோவிட் பெருந்தொற்றால், மீனவர்களின் வாழ்வும், தொழிலும், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், மீன் பிடித்தல்  என்பதை, வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல், அது சமுதாயத்திற்கு ஆற்றப்படும் ஒரு பணியாகவும் நோக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் பெருமளவு வருவாயை சமுதாயத்திற்கு கொணர்வதுடன், பலருக்கு வேலை வாய்ப்புகளையும், சமுதாயத்திற்கு உணவையும் கொணரும் மீனவர்களை சிறப்பிக்கும் வகையில் இடம்பெறும் உலக மீனவர் தினத்தின்  இவ்வாண்டு தலைப்பு, கடல்களில் இடம்பெறும் உரிமை மீறல்களை முடிவுக்குக் கொணர அழைப்பு விடுப்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நம் அனைவரின் ஒன்றிணைந்த அர்ப்பணத்திற்கு இது அழைப்புவிடுப்பதாக கோரிக்கை விடுத்தார்.

Comment