No icon

Easter Special

ஈஸ்டர் - வதந்தியும் வரலாறும் வாழ்வும்

                “இநநாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது” (மத் 28:15)

என்னும் அருள்வாக்கியத்தை நான் வாசிக்கும் போதெல்லாம் நம்முடைய கிறிஸ்தவ மதம் வதந்தியின்மேல் கட்டப்பட்ட ஒரு மதமோ அல்லது நெறியோ என்று நிறைய நாள்கள் எண்ணியதுண்டு. ஆனால், திருத்தூதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், தொடக்க கிறிஸ்தவர்களுடைய புதிய வாழ்க்கைமுறை, தங்களுடைய சமகாலத்துக் கலாச்சாரத்திற்கான எதிர்சான்று போன்ற நிகழ்வுகளை விவிலியத்தில் வாசிக்கும்போது ஈஸ்டர் என்பது வதந்தி அல்ல. மாறாக, அது வாழ்வு என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வதந்தி வாழ்வாக மாறிய நிகழ்வை ஆராய்வதோடு ஈஸ்டர் திருநாளின் வரலாற்றையும் தேடுதல் இக்கட்டுரையின் நோக்கம்.

1. ஈஸ்டர் பெயர் விளக்கம்

                உங்கள் விவிலிய அகராதி, ‘ஈஸ்டர்’ என்ற சொல் ஒரு ஆங்கிலோ-சாக்ஸன் சொல்லாடல் என்றும், இதன் மூலம் ‘ஈஸ்த்ரா’ என்ற வசந்தகாலத் தேவதையின் பெயர் என்றும், இந்த தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டின் பாஸ்கா காலத்திலும் பலிகள் செலுத்தப்பட்டன என்றும், ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பெயர் கிறிஸ்துவின் உயிர்ப்பை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்றும் வரையறுக்கிறது.

2. மறுபிறப்பின் அடையாளம் ஈஸ்டர்

                குளிர்காலத்தில் ‘இறக்கின்ற’ கதிரவன் வசந்தகாலத்தில் ‘மறுபிறப்பு’ எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும்  திசையான ‘ஈஸ்ட்டிலிருந்து’ (கிழக்கு) கிறிஸ்து எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை ‘ஈஸ்டர்’ என்று அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை ‘குளிர்காலத்திற்கும்,’  இயேசுவின் உயிர்ப்பை ‘வசந்த காலத்திற்கும்’ ஒப்பிடுகின்றனர்.

                முனைவர் டோனி நுஜென்ட், ‘ஈஸ்டர் கதையாடல், தம்முஸ் மற்றும் அவருடைய மனைவி இஷ்தார் என்னும் கதைமாந்தர்களைத் தாங்கிய “இனன்னாவின்  இறக்கம்” என்ற கிமு 2100 ஆம் ஆண்டின் சுமேரிய புராணக்கதையின் தழுவல்’ என்கிறார். இக்கதையின்படி, தன் கணவன் தம்முஸ் இறந்தவுடன், மிகவும் வருத்தமுற்ற இஷ்தார் அவரோடு இணைந்து பாதாளத்திற்குச் செல்கின்றாள். ஏழு வாயில்களைத் தாண்டி அவள் நுழையும்போது அவள் தன்னுடைய ஆடை அணிகலன்களை இழக்கிறாள். இழிவுபடுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட அவள் கொல்லப்பட்டு எல்லாரும் பார்க்குமாறு தொங்கவிடப்படுகிறாள். அவளுடைய இல்லாமையில் பூமி தன்னுடைய வளமையை இழக்கிறது. தாவரங்கள் வளர இயலாமலும், விலங்குகள் பலுக இயலாமலும் நிற்கின்றன. இஷ்தாரைக் காணாத அவளுடைய பணிப்பெண் மற்ற கடவுளர்களின் துணையை  நாடிச் செல்கிறாள். இறுதியில் என்க்கி வாழ்வின் தாவரம், வாழ்வின் தண்ணீர் என்னும் இரண்டைப் படைத்து பாதாளத்திற்குள் அனுப்புகின்றார். இவை தம்முஸீக்கும் இஷ்தாருக்கும்உயிர்கொடுத்து அவர்களை சூரிய ஒளியாக மீண்டும் பாதாளத்திற்குச் செல்ல, தண்ணீர் கடவுள் அவர்களை மீண்டும் மேலே அனுப்புகின்றார். இப்படியாக மாறி மாறி வருபவை தான் குளிர்காலத்தின் இறப்பும் வசந்தகாலத்தின் பிறப்பும். இஷ்தார் என்ற தேவதையே கானான் நாட்டில் அஸ்தார்த் என்றழைக்கப்பட்டார். அஸ்தார்த்தின் ஆலயம் இருந்த இடத்தில்தான் இயேசுவின் புனித கல்லறை இருந்ததாக 4 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் கண்டறிந்து அங்கே ஆலயம் கட்டுகிறார்கள்.

                இக்கதையைப் போன்றவைதான், எகிப்தியக் கடவுள் ஹோரஸின் உயிர்ப்பு, மித்ராஸின் கதை, பாட்டியால் உயிர்ப்பிக்கப்பட்ட டைனிசியுஸ் கதை. இக்கதையாடல்களில் வளமை, உயிர் உருவாக்கம், இருளுக்குள் இறங்குதல், ஒளி இருள்மேலும் நன்மை தீமைமேலும் வெற்றிகொள்தல் போன்ற கருத்துருக்கள் காணக்கிடக்கின்றன.

3. வசந்தகாலத் தேவதையின் திருநாள் ஈஸ்டர்

                வசந்தகாலத் தேவதையான ‘ஈஸ்தரா’ (‘எயோஸ்தர்’, ‘ஒஸ்தாரா’, ‘அவ்ஸ்த்ரா’) திருநாள் மார்ச் மாதத்தின் 21ஆம் நாள், வசந்த காலத்தின் உத்தராயணம் (இரவும் பகலும் சமமான நாள், சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்துசெல்லும் நாள்) அன்று கொண்டாடப்பட்டது. நீண்ட இருள்சூழ் பனிக்காலத்திற்குப் பின் வெளிச்சத்தைக் கொண்டுவரும் இத்தேவதையை முயல் அடையாளப்படுத்தியது. ஏனெனில், முயல் என்பது வசந்தகாலத்தையும் வளமையையும் குறித்தது. க்ரிம் என்ற ஜெர்மானிய புராண ஆய்வாளரின் கூற்றுப்படி, ‘உயிர்ப்பு என்னும் கருதுகோள் ஈஸ்த்ரா திருநாளில் மையம் கொண்டுள்ளது. ஏனெனில், வைகறையின் கடவுளாம், வசந்தத்தையும், வளமையையும் அறிவித்து, மகிழ்ச்சியையும் ஆசீரையும் கொண்டுவரும் ஈஸ்த்ராரை தங்களுடைய கடவுளில் கிறிஸ்தவர்கள் கண்டார்கள்.’  சில ஐரோப்பிய மொழிகளில் ‘ஈஸ்டர்’ என்பது ‘பாஸ்கா’ (யூதர்களின்பெருவிழா) என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலோ-சாக்ஸன் குடும்ப மொழிகளில் ‘ஈஸ்டர்’ என்ற சொல்லே வழங்கப்படுகிறது.

4. ஈஸ்டரும் பாஸ்கா பெருவிழாவும்

                அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச் மாத உத்தராயணத்தைத் தொடர்ந்து வரும் பௌhர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது ‘நகரும் திருவிழா’ என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் ‘ஈஸ்டர் கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325 ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே - கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15)  - அடையாளப்படுத்துகின்றன.

5. ஈஸ்டர் வழக்கங்களின் தொடக்கம்

                உலகெங்கும் இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்களில் முயலும் முட்டையும் இடம் பெறுகின்றன.. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டபடி, ‘முயல்’ என்பது வளமையின் அடையாளமாக இருக்கிறது. மேலும் ‘முட்டை’ வசந்தகாலத்தையும், வளமையையும் புதுப்பித்தலையும் குறிக்கிறது. ஜெர்மானிய புராணம் ஒன்றின்படி, அடிபட்ட பறவை ஒன்றை ‘ஈஸ்த்ரா முயலாக மாற்றி நலம் தந்தார் என்றும், அதற்கு நன்றியாக அந்த முயல் முட்டையிட்டது என்றும் சொல்லப்படுகிறது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், ‘பண்டைக்கால எகிப்தியர்களும் பாரசீகர்களும் வசந்தகாலத்தில் வளமையின் அடையாளமான முட்டையின்மேல் வண்ணம் தடவியும், உண்டும் கொண்டாடினர்’ என்று குறிப்பிடுகிறது.  மேலும், எகிப்திய இலக்கியங்களில் முட்டை சூரியனையும், பாபிலோனிய இலக்கியங்களில் யூப்பிரத்திசு நதியில் விழுந்த இஷ்தார் தேவதையின் எழுச்சியையும் குறிக்கிறது. இதன் பின்புலத்தில்தான் முட்டை இயேசுவின் கல்லறைக்கு ஒப்பிடப்பட்டு, முட்டையை உடைத்துக்கொண்டு வரும் குஞ்சுபோல கல்லறையைத் திறந்துகொண்டு இயேசு வருகிறார் என்று நாம் முட்டைகளை அலங்கரிக்கவும் பரிமாறவும் செய்கின்றோம்.

6. ஈஸ்டர் என்னும் வாழ்வு

                ‘ஈஸ்டர்’ என்பது வதந்தி போலக் காணப்பட்டாலும் இயேசுவின் திருத்தூதர்களுக்கு அது வாழ்வியல் நிகழ்வாகவும் அனுபவமாகவும் இருந்தது. உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள் புதிய மனிதர்களாக மாறுகின்றார். பயம், தயக்கம், கோபம் மறைந்து, நம்பிக்கை துணிச்சல், மற்றும் மன்னிப்பு அவர்கள் உள்ளங்களில் பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின் உள்ளங்களில் உயிர்க்கிறார்’ என்று கூறுகின்றார். இறையியலாளர் ஷில்லிபெக்ஸ். ‘கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும்  உள்ளே சென்றார். கண்டார், நம்பினார்’ (யோவா 20:8) என்று வெற்றுக்கல்லறையை உயிர்ப்பின் சான்றாகப் பதிவுசெய்கிறார் யோவான். ‘கல்லறையின் கல் அகற்றப்பட்டது இயேசுவை வெளியேற்றுவதற்காக அல்ல, மாறாக, திருத்தூதர்களை உள்ளே அனுப்புவதற்காகவே’ என இந்த நிகழ்வை வர்ணிக்கிறார் புனித அகுஸ்தினார். உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடைகளாகப் பெற்றுக்கொள்கின்றனர் (காண். லூக் 24;36, 52). “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி 15:14) என்று கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிநாதமாக உயிர்ப்பை முன்வைக்கிறார் புனித பவுல். “கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்” (பிலி 3:10) என்பதே இவருடைய பேராவலாகவும் இருக்கிறது.

                கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து இன்று நம்முடைய வாழ்வை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தன்னுடைய கொடூரக் கரங்களை வைத்து மானுடத்தை நெறிக்கத் துடிக்கும் இந்நாள்களில் கிழக்கிலிருந்து எழும் கதிரவன்போல் எழும் கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்முடைய வாழ்வாகவும் அனுபவமாகவும் மாற எல்லாம் வல்ல இறைவன் அருள்கூர்வாராக! வதந்தி போல வந்து மனித வரலாற்றைப் புரட்டிப் போட்டு வாழ்வைச் சீரழிக்கும் வைரஸ் போன்றதல்ல ஈஸ்டர்.

(துணைநில் பதிவுகள்: : https://www.ancient-origins.net/myths-legends/ancient-pagan-origins-easter-001571;

https://www.britannica.com/topic/Easter-holiday;

https://www.ucg.org/bible-study-tools/booklets/holidays-or-holy-days-does-it-matter-which-days-we-observe/easter-masking; accessed on 24 March 2020)

 

Comment