No icon

ஆசிரியர்.

பணி விருப்ப ஓய்வுபெற்ற பாசமிகு சேலம் ஆயர் மேதகு சிங்கராயன்

சேலம் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக 2000 ஆம் ஆண்டு பொறுப்பேற்று கடந்த 20 ஆண்டுகளாக தம் மறைமாவட்ட இறைமக்களை வழிநடத்திய மேதகு ஆயர். சிங்கராயன், அவர்கள் தம் 68 ஆம் வயதில் சேலம்
மறைமாவட்ட நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து பணிவிருப்ப ஓய்வு பெற்றுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் தமது ஓய்வுப் பெறுவதற்கான விண்ணப்பத்தை ஆயர் அவர்கள் சமர்ப்பித்திருந்தார். அதிலுள்ள காரணங்களை அலசி ஆராய்ந்து திருத்தந்தை அவர்கள் ஓய்வை ஏற்றுக் கொண்டதாக மார்ச் மாதம் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு அறிவித்தார். 


மேதகு ஆயர் சிங்கராயன் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி 1952 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள எலத்தகிரி என்னும் ஊரில் பிறந்தார். தனது குருத்துவக் கல்வியில் பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் படித்து முடித்து மே 27, 1978 ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டத்திற்காக குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். 


மேய்ப்புபணி இறையியலில் முதுகலை பட்டமும் இறையியலில் முனைவர் பட்டமும் உரோமையில் பெற்ற இவர் தமிழில் முதுகலைப் பட்டமும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றும் பல்துறை⊃1; வித்தகராக விளங்கினார்.
கோவை நல்லாயன் குருகுலத்தில் பேராசிரியராக விளங்கிய இவர் அக்.18 2000 அன்று சேலம் மறைமாவட்டத்தின் 4வது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். எளிமையான வாழ்க்கை முறையாலும் ஜெபம் நிறைந்த ஆன்மிக வாழ்வாலும் மக்களின் ஆயராக கொண்டாடப்பட்ட இவர் பழகுவதற்கு இனியவர். நேர்மையாளர், நீதிமான், ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் நடத்துவதில் வல்லவர்.நல்ல ஓட்டுநர். பொதுப் போக்குவரத்தை பெரிய அளவில் தன் பயணத்திற்காகப் பயன் படுத்தியவர். தன் வேலைகளைத் தாமே செய்துகொள்ளக் கூடிய நல்ல பண்பாளர். பொதுவாகவே ஓர் ஆயர் தம் 75 வயதில் பணிநிறைவு பெறுவார். உடல் நலக் குறைபாடு காரணமாக நம் ஆயர் அவர்கள் தமது விருப்ப பணி நிறைவை 68 ஆம் வயதில் திருத்தந்தையிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது சேலத்திற்கு அருகிலுள்ள கருப்பூர் என்னும் குக்கிராமத்தில் தங்கி அங்குள்ள இறைமக்களோடு தமது பணிவாழ்வைத் தொடர்கிறார்.


சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நம் வாழ்வு வாசகர்கள் பெருக சேலம் ஆயர் இல்லத்தை மையமாகக் கொண்டு நம் வாழ்வு கிளை அலுவலகம் செயல்பட ஆயர் அவர்கள் அனுமதி வழங்கி, அரவணைத்து வழிநடத்தினார். முன்னாள் துணை ஆசிரியர் அருட்தந்தை மெல்கிஸ் அவர்களும் இந்நாள் ஆசிரியராகிய நானும் அங்கு தங்கி பணியாற்ற அனுமதி வழங்கி ஊக்குவித்தார். என்னுடைய எழுத்துகளை மெருகேற்றியவர்களில் ஆயர் அவர்களும் ஒருவர்.
நம் வாழ்வு பணி சிறக்கவும் வாசகர்களுடைய எண்ணிக்கை பெருகவும் பரந்த உள்ளத்தோடும் சிறந்த சிந்தனையோடும் எம்மை நெறிப்படுத்தினார். சோர்ந்து போகிற நேரங்களிலெல்லாம் ஆறுதல் மிக்க வார்த்தைகளைக் கூறி எம்மை வழிநடத்தினார். அவர்தம் எளிமையும் ஜெப வாழ்வும் பார்க்கும் எவரையும் கவர்ந்திழுக்கும். அவர்தம் நேர்மையும் அறமும் உடன்பயணிப்பவரை நெறிப்படுத்தும்.


அவர்தம் வார்த்தைகளிலும் உயிர்ப்பு இருக்கும். போதனைகளில் உயிர் இருக்கும். அவர்தம் அறிவுரைகளின் ஞானம் நிறைந்து இருக்கும். ஆலோசனைகளில் எதிர்காலம் குடியிருக்கும். தமிழக ஆயர் பேரவையில் பல்வேறு பணிக்குழுக்களின் தலைவராக இருந்து வழிநடத்திய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அவர்தம் ஓய்வு அவருடைய உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வு தந்திடட்டும். மக்களுக்காக, மக்களோடு தம்மைக் கரைத்து வாழும் அவர்தம் ஆன்மிகம் எல்லாருக்கும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டட்டும். தற்போது சேலம் மறைமாவட்டத்தின் பரிபாலகராக தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறார். பணிவிருப்ப ஓய்வு பெற்றுள்ள மக்கள் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களை வாழ்த்துவோம்! அவருக்காக செபிப்போம்!!    

Comment