No icon

திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி

புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின் தேர்த்திருவிழா

கோவை மறைமாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின் 382 ஆம் ஆண்டுத் தேர்த் திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2 ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. மறைமாவட்ட பொருளாளர் அருள்திரு. ஜோ பிரான்சிஸ் அவர்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் தினமும் நடைபெற்றன. செப்.30 ஆம் தேதி வெள்ளி மாலை கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ் அவர்களுக்கு வரவேற்பும் அதனைத் தொடர்ந்து மேதகு ஆயர் தலைமையில் திருப்பலியும் நடைபெற்றது. ஆயர் அவர்களே சனிக்கிழமை காலையும் திருப்பலி தலைமையேற்று நிறைவேற்றி ஆசீர் வழங்கினார். மாலை சேலம் ஆயர் மேதகு இராயப்பன் அவர்களின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

முத்தாய்ப்பாக, செபமாலை அன்னையின் பெருவிழா அன்று, முதல் முறையாக, திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்கள் இப்பசிலிக்காவிற்கு வருகைத் தந்து, தலைமையேற்று திருப்பலி ஒப்புக்கொடுத்து இறையாசீர் பெற்றுத் தந்தார். தமிழக ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி உதகை, திருச்சி மறைமாவட்ட ஆயர்களும், பணிநிறைவுப்பெற்ற ஆயர்கள் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ், மேதகு சிங்கராயன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர். அன்று மாலை சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுத்து ஆசீர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, செபமாலை அன்னையின் திருச்சுருபம் தாங்கிய மின் அலங்கார தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது. அக்டோபர் 3 ஆம் தேதி அன்று காலை 6.00 மணி முதல் ஜெபமாலை அன்னையின் நினைவு திருப்பலியை முதன்மை குரு, பொருளர் தந்தை, அதிபர் தந்தை, பங்குத்தந்தை மற்றும் ஏராளமான பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டு, ஒப்புக்கொடுத்து இறையாசீர் பெற்றுத் தந்தனர்.

 இவ்விழா நிகழ்வுகளை அதிபர் அருள்திரு. ஜெரோம், பங்குத்தந்தை ஆரோக்கிய ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை கிளாட்வின், ஆன்மீகத் தந்தை சாமி மற்றும் பங்கு மக்கள், பக்த சபையினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மும்பை, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருத்தூதரின் வருகையையொட்டி கோவை மறைமாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் திருத்தூதர் மேதகு பேராயர் ஜிர்ரெல்லி அவர்கள் தூய மிக்கேல் அதிதூதர் மறைமாவட்டப் பேராலயம், புலியகுளம் - புனித அந்தோணியார் திருத்தலம், கோவைப்புதூர் - அற்புத குழந்தையேசு திருத்தலம், நல்லாயன் குருத்துவக் கல்லூரி, காட்டூர் - கிறிஸ்து அரசர் ஆலயம், சௌரிபாளையம் - புனித சவேரியார் ஆலயம் ஆகிய இடங்களுக்குச் சென்று தரிசித்து இறையாசீர் அளித்தார்.

 

Comment