No icon

குடந்தை ஞானி

ஒன்றரைக் கோடி கொடுத்து உதவிக்கரம் நீட்டிய காரித்தாஸ் இந்தியா

இந்திய அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளை தாயுள்ளத்தோடு ஆற்றிவரும் கத்தோலிக்க ஆயர்களின் சேவை அமைப்பான காரித்தாஸ் இந்தியா, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் இரண்டாம் அலையின்போது, தமிழகத்தில் உள்ள 13 மறைமாவட்டங்களுக்கும் 6764 கொரோனா தற்காப்பு மருந்துகளையும் உபகரண பெட்டகங்களையும் மருத்துவமனைகளுக்கான 12 உயிர்காக்கும் கருவிகளையும், ஏறக்குறைய ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் உதவியுள்ளது. அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, சென்னை மயிலை சமூகப் பணி மையத்தின் இயக்குநர் அருள்திரு. எம்.வி.ஜேக்கப் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழக சமூகப் பணி மையத்தின் இயக்குநர் அருள்பணி. ஆல்பர்ட் தம்பிதுரை மற்றும் காரித்தாஸ் இந்தியாவின் இயக்குநர் அருள்முனைவர் பால் மூஞ்செலி ஆகியோரின் முன்னிலையில், சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் உயர் மறைமாவட்ட மறைப்பணி நிலையத்தில் நடைபெற்றது. திரளான எண்ணிக்கையில் பயனாளர்களும் அவர்கள்தம் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

காரித்தாஸ் இந்தியாவின் இயக்குநர் அருள்முனைவர் பால் மூஞ்செலி கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு நல்ல சமாரியனாக காரித்தாஸ் செய்த சமூக, மனிதநேய பணிகளைப் பட்டியலிட்டார். தமிழக சமூகப் பணி மையத்தின் இயக்குநர் அருள்பணியாளர் ஆல்பர்ட் தம்பிதுரை அவர்கள், இவ்வமைப்பின் கீழ் செயல்படும் 27 சமூகப் பணி மையங்கள் வழியாக ஆற்றிய கொரோனா நிவாரண பணிகளையும் மருத்துவச் சேவைகளையும் மக்களுக்கு விளக்கிக் கூறினார். மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், காரித்தாஸ் இந்தியா ஆற்றிவரும் சமூகப் பணிகளையும் மனிதநேய பணிகளையும் பாராட்டி, ஒரு சிறந்த நல்ல சமாரியனாக பணியாற்ற வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்வுகளுக்குப் பிறகு, தமிழகத்தின் 13 மறைமாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 6764 மருந்து பெட்டகங்கள் அடையாள முறையில் ஒப்படைக்கப்பட்டன. மேலும் வென்டிலேட்டர் எனப்படும் எட்டு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களில், நான்கு அரசு மருத்துவமனைகளுக்கும் நான்கு கிறிஸ்தவ மருத்துவமனைகளுக்கும் ஒப்படைக்கப்பட்டன. முனைவர் ஜான் ஆரோக்கிய ராஜ் அவர்களும், முனைவர் ஜி.சி.சிலுவை அவர்களும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, இவ்விழாவில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு மனித உரிமை பயிற்சியையும் நல்ல சமாரியனாக பணியாற்றுவதற்கான தேவையையும் கருத்துரையாளர் வழக்குரைஞர் அருள்பணி. ராஜாமணி அவர்கள் அளித்தார்

Comment