No icon

அருள்பணி. ஜேம்ஸ் பீட்டர், கிறிஸ்துவின் சேனை

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

தாவீது

சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் (திபா 23:4).

நம் வாழ்வின் எல்லா பொழுதிலும், குறிப்பாக, வேதனை அனுபவிக்கும் வேளைகளில், நம் சொந்த பந்தங்கள், நண்பர்கள் உடனிருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

இயேசு, தான் தேர்ந்துகொண்ட திருத்தூதர்கள் 12 பேர் தன்னோடு இருந்தாலும், அவருக்குள் இருந்த மனநிறைவு: “என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை” (யோவா 8:29).

இதோ காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும், நான் தனியாக இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16:32).

ஆனால், கெத்சமனியில் இயேசு மிகவும் துயரமடைந்து மன்றாடக் காரணம் - சிலுவையில் தொங்கும்போது, உலகத்தின் பாவ சாபங்களையெல்லாம் சுமப்பதால், பாவமே அறியாத இயேசு, பாவநிலை ஏற்பதால், தந்தை தன் முகத்தை மறைத்துக்கொள்வாரே, கைவிட்டு விடுவாரே என்பதனால் தான். அந்த கொஞ்ச நேரப்பிரிவை அவரால் தாங்கவே முடியாமல்என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று கதறினார்.

சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கைக் கடந்து சென்று வெற்றி பெற்றதால். ‘உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆனால் திடன் கொள்ளுங்கள். ஏனென்றால், நான் உலகை வென்றுவிட்டேன்என்றார் (யோவா 16:33).

பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் மூவர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ - அரசன் செய்த பொற்சிலையை வணங்க மறுத்தனர்.

நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும், அந்த பொற்சிலையை வணங்கியபொழுது, மறுப்பதால், எத்தகைய பயங்கர தண்டனை எனத் தெரிந்திருந்தாலும், எரிகிற தீச்சூளையில் எரியப்படுகிற ஆபத்தை அறிந்திருந்தாலும் மறுத்துவிட்டார்கள்.

அரசரைப் பார்த்து அவர்கள் சொன்னதென்ன? ‘இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார்.

அப்படியே அவருக்கு மனமில்லாமற் போனாலும், “அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம். இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” (தானி 3:16-18, எசா 43:2).

அரசன் வெகுண்டெழுந்தான். வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாக தீச்சூளையை சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூவரையும் இறுகக்கட்டி, தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.

அப்பொழுது ஆண்டவர் அரசனது கண்களைத் திறந்தார். தன் அமைச்சரிடம், மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம். இதோ கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வமகன் ஒருவர்போல் தோன்றுகிறாரேஎன்றான்.

அரசன் உண்மைக் கடவுளைப் பணிந்தான்.

உயிருக்கு பயந்து, தாவீது காட்டுக்குள் ஓடும்போது எத்தனை எத்தனை இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.

சவுல் எப்படியாவது வந்து பிடித்துக் கொல்வானோ என்ற பயம்! கொடிய வன விலங்குகளால் ஆபத்து! எதிரி நாட்டு மன்னர்களால் பேரச்சம்!

நாள்தோறும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் பயணம்தான். ஆனாலும், தாவீது தைரியமாகவே இருந்தார்.

கடவுளோடு தனிப்பட்ட ஐக்கியம் கொண்டிருந்தார். தாவீதின் ஒவ்வொரு திருப்பாடலிலும் அந்த உறவைக் காண முடிகிறது.

எந்த ஒரு திருப்பாடலை வாசித்தாலும், அது நம் மனதைத் தேற்றுவதாக உள்ளது. காரணம், தாவீது தனக்கு எதிராக எழும் எல்லா தீங்குகளையும் நண்பனிடம் உறவாடுவதுபோல் உறவாடினார். தன் பாரங்களையெல்லாம் இறக்கி வைத்தார்.

ஆண்டவர்மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்” (திபா 55:22) என்று பாடினார்.

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்என்றார் (திபா 27:1-3).

Comment