No icon

அருள்பணி. எம். ஏ. ஜோ, சே.ச.

தேடுங்கள் கிடைக்கும் – 23 முதல் விளக்கம்       

சத்யா: இரண்டு நாளைக்கு முன்னால என் ஃபிரென்ட் வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போயிருந்த நேரத்தில...

சுந்தர்: என்ன நடந்துச்சு ?

சத்யா: யாரும் எதிர்பாராத ஒரு காரியம் நடந்தது. என்ன சொல்றது, எப்படி நடந்துக்கறதுன்னு ரொம்ப குழம்பிப் போய்ட்டேன்.

சுந்தர்: என்ன நடந்துச்சுன்னு தெரியாம நாங்களும் தான் குழம்பிப் போயிருக்கோம். அதனால எங்களை இன்னும் குழப்பாம என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு, சத்யா.

சத்யா: என் ஃபிரண்டோட தங்கை. பேரு மதுமிதா. ஸ்கூல்ல செவென்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறா. திடீர்னு பாத்ரூமிலிருந்து அவ அலறினா.‌ அதைக் கேட்டு என் ஃபிரண்டு ஓடினா. ரெண்டு நிமிஷத்துல அவளும் அழுதுகிட்டே வெளியில வந்தா. அவங்க அம்மா பக்கத்து வீட்டு அம்மாவோட கடைக்குப் போயிருந்தாங்க. அப்பா வேலைக்கு போய்ட்டாரு. அதனால நாங்க மூணு பேரு தான் இருந்தோம். “என்னடி ஆச்சு? ஏன் அவ அலறினா? நீ ஏன் அழுகிறே?”ன்னு கேட்டேன். “மதுமிதா பெரிய மனுஷி ஆயிட்டான்னு சொன்னா. “இதுக்கு ஏன்டி அழறே?”ன்னு கேட்டேன். ஒன்னும் சொல்லாம அவ என்னையே பார்த்தா. ஆனா, அந்த சின்னப் பொண்ணு மதுமிதாக்கிட்ட இதை எப்படி நல்ல முறையில பாசிட்டிவா விளக்கி சொல்றதுன்னு அந்த நேரத்தில புரியல.

ஆசான்: இந்த ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர் யார் தெரியுமா?

சத்யா: ம்.. தெரியும். நான் வாசிச்சேன். ம்.. அம்பைன்ற பெண் எழுத்தாளர். சரியா?

ஆசான்: அம்பை என்பது தமிழில் எழுதும் போது இவர் பயன்படுத்தும் புனைப்பெயர். இயற்பெயர் சி.எஸ். லட்சுமி. முனைவர் பட்டம் பெற்று, ஆங்கிலத்திலும் எழுதும் பெண்ணியச் சிந்தனையாளர், ஆய்வாளர். பெண்களின் வேதனைகளை, அவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை, அவர்களின் உணர்வுகளை நுணுக்கமாய் உணர்ந்து எழுதுபவர் அம்பை.

அவர் எழுதிய ஒரு கதை இருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுமி தான் கதை சொல்லுகிறாள். அதுவரை இந்த ஆண்டுகளில் வாய்த்த அனுபவங்களால் தன் தாய் மீது ஆழ்ந்த அபிமானமும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறாள். ஆனால், தன் நிறமும் அம்மாவின் நிறமும் மாறுபட்டு இருப்பது அவளின் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. “ஏம்மா, நீ மாத்திரம் இவ்வளவு வெளுப்பு? நான் ஏன் கருப்பு?” என்று கேட்கிறாள். அவளது அப்பா இவளைகருப்பிஎன்று அழைக்கிறார். சிரித்த அம்மா, “போடி, உன் அழகு யாருக்கு வரும்?” என்கிறாள்.

அவளது பாவாடைகள் குட்டையாகப் போய்விட்டன என்று அம்மா அவற்றையெல்லாம் நீளமாக்குகிறாள். ஒரு நாள் மாலை அம்மா மடியில் படுத்துக்கொண்டு, “அம்மா, பருவம்ன்னா என்னம்மா?” என்று கேட்கிறாள். அதற்கு உடனே பதில் ஏதும் சொல்லாத அம்மாநீ இப்படியே இருடிம்மாஎன்கிறாள்.

தீபாவளிக்கு கத்தரிப்பூ சாட்டின் துணியில் இவளுக்குப் பாவாடை எடுத்து இருக்கிறாள் அம்மா. தைக்கும் முன் அளவு எடுத்துவிட்டுஇரண்டு இன்ச் பெருசாயிடுச்சு இந்தப் பொண்ணுஎன்கிறாள்.

தன் தங்கையின் மகள் ராதுவை பெண் பார்க்க வருவதால் தன் தங்கையின் குடும்பத்திற்கு உதவி செய்ய அம்மா கிளம்பி ஊருக்கு போய் விடுகிறாள். வீட்டில் இருப்பது அப்பாவும்கல்லூஸ்என்று இவள் அழைக்கும் அக்கா கல்யாணியும் தான்.

தீபாவளி அன்று தீபாவளிக்கு எடுத்த பாவாடை, வெல்வெட் சட்டை போட்டுக்கொண்டு, பட்டாசை எடுத்து முன்னறையில் வைத்துவிட்டு, பூப்பறிக்க செண்பக மரத்தில் ஏறுகிறாள். இவள் சாட்டின் பாவாடை வழுக்குகிறது. உச்சாணிக் கொம்பில் ஏற முடியவில்லை. ஏதோ ஒரு பக்கத்து வீட்டில் பட்டாசு சத்தமாய் வெடிக்க, இவள் மரத்திலிருந்து குதிக்கிறாள். வீட்டிற்குள் வந்ததும் மரத்தின் அடியில் வைத்த பூக்கூடை ஞாபகம் வர, அதை எடுக்க ஓடிப் போய் குனியும்போது புதுப் பாவாடையில் அங்குமிங்கும் கறைகள் இருப்பதைப் பார்க்கிறாள். வீட்டுக்குள்ளே வந்து அக்காவை அழைக்கிறாள்.

பாவாடை எல்லாம் அழுக்காக்கிட்டேண்டி. அம்மா வைவாளா?” என்று இவள் கேட்க, அக்கா கல்யாணி இவளது பாவாடையை ஒரு நிமிடம் பார்த்து விட்டு அதிர்ச்சியில்அப்பா!” என்று கூவிக் கொண்டே ஓடுகிறாள்.

என்ன நடந்துவிட்டது என்று இவளுக்குப் புரியவில்லை. “பகவானே! எனக்கு ஒன்னும் ஆயிடலையே?” என்று பதைபதைக்க, அழுகை வருகிறது. அம்மா அருகில் இல்லாமல் போய் விட்டாளே! அவளது தோளில் தலைசாய்த்து, “பயமா இருக்கு!” என்று சொல்லி அழ வேண்டும் போல் இருக்கிறது.

அக்கா கல்யாணி வெளியே போய் முறுக்கு பிழிய வரும் மொட்டைப் பாட்டியைக் கூட்டிக் கொண்டு வருகிறாள். இவள் அழுவதைப் பார்த்து பாட்டிஎன்னடீம்மா அழறே? என்னாயிடுத்து இப்போ? லோகத்திலே இல்லாதது ஆயிடுத்தா?” என்று கேட்கிறாள்.

பாட்டி என்ன சொல்கிறாள் என்று இவளுக்குப் புரியவில்லை. மனம் அம்மாவைத் தேடுகிறது. ஐந்து வயதில் பெரிய பூங்கா ஒன்றில் அப்பா, அம்மாவைத் தவற விட்டுவிட்டு வழி மாறி வந்து, பயந்து போய், பிறகு அப்பா இவளைத் தேடிக் கண்டுபிடித்த பின் அம்மா அருகில் வந்ததும், ஏன் என்று தெரியாமலேயே இவள் அழுததும், அம்மா இவளை ஆதரவாய்த் தடவி, “ஒன்னும் ஆகலியே! எல்லாம் சரியாப் போயிடுத்தே!” என்று சொல்லி தன் முகத்தை அவள் முகத்தில் வைத்ததும் நினைவுக்கு வருகின்றன.

இப்போதும் காணாமல் போய்விட்டது போன்ற ஒரு உணர்வு. ஏதோ முடிந்துவிட்டது போலத் தோன்றுகிறது. திடீரென்று இருட்டியது போல பயமாயிருக்கிறது. இவள் அமர்ந்து முழங்கால்களில் தன் தலையைப் புதைத்துஅம்மா!” என்று அழுகிறாள். அம்மா என்று அவள் அழுவதைப் பார்த்ததும் கல்யாணி அக்காவுக்கு தான் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. நடந்ததைச் சொல்லி அம்மாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் எனவே, இன்னும் ஒரு வாரத்தில் அம்மா வந்து விடுவாள் என்றும் அவள் சொல்கிறாள்.

பக்கத்து வீட்டுப் பெண்கள் வருகிறார்கள். ஒருத்திதாவணி போடலையா?” என்கிறாள். “எல்லாம் அம்மா வந்த பிறகு தான். இது அடங்காப் பிடாரி. அம்மா சொன்னா தான் கேட்கும்என்கிறாள் கல்யாணி.

இனிமேல் எல்லாம் சரியாயிடும். இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும்என்கிறாள் இன்னொருத்தி. இவளுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை. ‘தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்? ஏன் அடக்க ஒடுக்கம்?’

இனிமே பாத்ரூமிலேயே டிரஸ் பண்ணிக்கணும். தெரிஞ்சுதா?” என்கிறார் அப்பா. அம்மா எப்போது வருவாள்? அம்மாவின் விளக்கத்தை எதிர்பார்த்து இவள் காத்திருக்கிறாள். பள்ளியில் வகுப்புகள் முடிந்த பிறகும் தன்னை மறந்து பள்ளியிலேயே அமர்ந்திருக்கிறாள். தோட்டக்காரன் எழுப்பிய பின் மெல்ல வீட்டுக்குப் போகிறாள். தாமதமாக பள்ளியிலிருந்து வரும் இவளைப் பார்த்து அக்கா கல்யாணி, “ஏண்டி இவ்வளவு லேட்? எங்கே போனே?” என்று கத்துகிறாள். “எங்கேயும் போகல. மரத்தடியில் உட்கார்ந்து இருந்தேன்என்கிறாள் இவள். தனியாக அமர்ந்து இருந்தாள் என்று தெரிந்ததும், “ஏண்டி, நீ இன்னும் சின்னப் பொண்ணா? ஏதாவது ஆகிட்டால்...” என்று கோபப்படுகிறாள் அக்கா கல்யாணி.

முகம் சூடேற செவிகளைக் கையால் மூடிக் கொண்டுநான் அப்படித்தான் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலஎன்று வீறிட்டுக் கத்துகிறாள் இவள். மறுநாள் காலையில் டாக்ஸியில் அம்மா ஊரிலிருந்து வந்து இறங்குகிறாள். தங்கையின் மகளுக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று போன அம்மாவிடம், “என்ன ஆச்சு?” என்கிறார் அப்பா. “பொண்ணு கருப்பாம்.‌ வேண்டாம்னுட்டான் கடங்காரன்என்கிறாள் அம்மா. “பாவம்.. உன் தங்கை என்ன சொல்றா?” “வருத்தப்படறா. பாவம்.” “நமக்கும் ஒரு கருப்பு பொண்ணு உண்டுஎன்கிறார் அப்பா.

அம்மா வரட்டும், வரட்டும் என்று அவளை எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் வந்து விட்டது என்பதால் இவள் போய் அம்மாவின் முன் நிற்கிறாள். ‘அவள் கழுத்தில் முகம் பதித்து எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். அம்மா என்னை அணைத்துக்கொண்டு நடந்ததற்கெல்லாம் விளக்கம் சொல்வாள்என்று நினைக்கிறாள். அம்மாவோ இவளை எரிச்சலோடு பார்க்கிறாள். “உனக்கு இந்த இழவுக்கு என்னடி அவசரம்? இது வேற இனிமே ஒரு பாரம்என்று அம்மா எரிந்து விழுகிறாள். யாரை அம்மா குற்றம் சாட்டுகிறாள் என்று புரியாமல் இவள் மௌனமாக அழுகிறாள்.

மொட்டுகளும் மலர்களும் கூட கருகிப் போயினஎன்று கதை முடிகிறது.

சுந்தர்: கதையோட பெயர் என்ன?

ஆசான்: வித்தியாசமான பெயர். ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’. தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது, தன் உடலில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் என்ன என்று புரியாமல் தவிக்கும் ஒரு அப்பாவிச் சிறுமியின் இளம்மனதை அந்தத் தாய் நோகடித்து, சாகடித்துவிடுகிறாள்.

வயது வந்ததும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சியின் அறிகுறிகள். மலர்ச்சியின் அடையாளங்கள். இவை நிகழும் முன்பும் நிகழும் போதும் இவற்றை அன்பார்ந்த சூழலில், நேர்மறையான முறையில், இதமாய், இனிதாய் விளக்கிச் சொல்ல வேண்டியது தாய், தந்தை அல்லது அவர்களின் இடத்தில் இருப்போரின் கடமை. இந்த மாற்றங்களால் விளையும் சிரமங்கள், இவை அந்த நபர் மீது சுமத்தும் பொறுப்புணர்வு, பெற்றோருக்கு கொண்டுவரும் கடமைகள், அவை தோற்றுவிக்கும் கவலைகள் இவற்றை மட்டுமே பார்த்து, கோபப்பட்டு இந்த அம்மா செய்தது போல ஏதாவது எதிர்மறையாக, எரிச்சலோடு சொல்லிவிட்டால் அது மலர்கின்ற ஒரு மொட்டை நெருப்பில் கருகச் செய்வதற்குச் சமம்.

வளரும் போது ஏற்படும் உடல் மாற்றங்கள், பாலியல் உறுப்புகள், பாலுறவு போன்றவை பற்றிய முதல் விளக்கம் எந்தச் சூழலில், யாரால் எப்படி அளிக்கப்படுகிறது என்பதே அவற்றைப் பற்றிய ஒரு நபரின் கண்ணோட்டம் ஆரோக்கியமானதாக, ஆக்கப்பூர்வமானதாக அமையுமா இல்லையா என்பதைப் பெருமளவுக்கு தீர்மானிக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்.

சத்யா: நன்றி. அடுத்த முறை எங்காவது இப்படி நடந்தால் நான் எப்படி நடந்துக்கணும்னு இப்போ புரியுது.

தொடரும்

Comment