No icon

​​​​​​​அருள்பணி. எம். ஏ. ஜோ, சே.ச.

உங்கள் கையில்தான் உள்ளது

சத்யா: நீ கெட்டிக்காரன். ஈசியா பதில் சொல்லிடுவ. எங்கே, சொல்லு பார்க்கலாம்.

சுந்தர்: கேள்வி என்னன்னு சொல்லுங்க, அறிஞரே!

சத்யா: இது மட்டும் இல்லேன்னா நம்ம பள்ளிகள், கல்லூரிகள், சமுதாயத்தில பல குற்றங்கள் நடக்காது.

சுந்தர்: அந்த இது எதுன்னு கேட்கிறியா?

சத்யா: நாடு முழுவதும், உலகம் முழுவதும் பல குற்றங்கள் நடக்காது. பலருக்கு பல துயரங்கள் நிகழாது. பலருடைய மானம் போகாது. ஏன், பலரோட உயிர் போகாது.

சுந்தர்: இவ்வளவும் போறதுக்குக் காரணம் இந்த இதுதான்றியா?

சத்யா: ஆமா.

சுந்தர்: இதுன்னு சொல்றே. இவர் இல்ல. அப்படின்னா இது ஒரு பொருள். கரெக்டா?

சத்யா: கரெக்ட்.

சுந்தர்: இத வச்சு தீமைகள், குற்றங்கள்தான் செய்ய முடியுமா... இல்ல, இதனால நல்லதும் பண்ண முடியுமா?

சத்யா: ம்... நல்லதும் பண்ணலாம்.

சுந்தர்: இது ஆண்கள் பயன்படுத்தற பொருளா, இல்லபெண்கள் பயன்படுத்துற பொருளா?

சத்யா: ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர், ஏன், குழந்தைகள் கூட பயன்படுத்துற பொருள்.

சுந்தர்: குழந்தைகள் கூட பயன்படுத்துறதுனா இது ஹெவியான பொருளா இருக்க முடியாது...ம்.. கண்டுபிடிச்சிட்டேன்! செல்ஃபோன்! சரியா?

சத்யா: சரிதான்.

ஆசான்: ஸ்மார்ட்ஃபோன் என்றழைக்கப்படும் இந்தத்திறன்பேசிஇத்தனை குற்றங்களுக்கும் இவ்வளவு துயரங்களுக்கும் காரணமாக ஆகியிருப்பது இது பல கருவிகளை உள்ளடக்கியது என்பதனால் தான். இதுதான் இதன் மூலம் நல்லவை சிலவும், தீயவை பலவும் நிகழ்வதற்குக் காரணம்.

2017இல் விஜய் சேதுபதி நடித்தபுரியாத புதிர்எனும் தமிழ் திரைப்படம் வந்தது. எத்தனை இழப்புகளுக்கும், எத்தனை பேருடைய அவமானங்களுக்கும், துயரங்களுக்கும் இந்தக் கைபேசி காரணமாக அமையக்கூடும் என்பதை இந்தப் படம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் காட்டியது.

நாயகன் கதிர். இசைக் கருவிகள் விற்கும் கடை நடத்துபவர்.

சுந்தர்: விஜய் சேதுபதிதான் கதிரா?

ஆசான்: ஆம், கதிருக்கு இரு நண்பர்கள். டி.ஜே.ன்னு ஒருத்தன். வினோத்னு ஒருத்தன். இந்த இரு நண்பர்களும் பெண்களை கவர்ச்சிகரமாகக் காட்டும் வீடியோக்களை தேடிக் கண்டுபிடித்து, பிறரோடு பகிர்ந்து கொள்வதில் வெறித்தனமாக ஈடுபடுபவர்கள்.

மீராவும் மிருதுளாவும் ஒரே விடுதி அறையில் தங்கிப் படிக்கும் சினேகிதிகள். இருவரும் கல்லூரி மாணவிகள். மீரா கதிரை விரும்புகிறாள். ஆனால், அவனைச் சந்திப்பதில் ஆர்வம் இல்லாதவள் போல பாவனை செய்கிறாள். விடுதி அறையில் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும்போது, இது வெறும் நடிப்பு என்பதைச் சுட்டிக்காட்டி, மீராவும் கதிரும் சந்தித்து, காதல் வளர்த்து, திருமணம் நிச்சயம் ஆனதும் மீரா கதிரிடம் எப்படிப் பேசுவாள் என்பதை மிருதுளா வேடிக்கையாக நடித்துக் காட்டுகிறாள். அவள் குளிப்பதற்காக உடையை மாற்றி குளியல் அறைக்குள் செல்ல இருந்தாலும், அதை மீண்டும் ஒருமுறை நடித்துக் காட்டச் சொல்கிறாள் மீரா. அவளின்  நச்சரிப்பினால் மிருதுளா மீண்டும் ஒருமுறை நடித்துக் காட்ட, மீரா அதைத் தன் கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்கிறாள்.

வெளியாட்களும் கலந்து கொள்ளும் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு கதிரும் அவனது இரு நண்பர்களும் வருகின்றனர். மீரா தன் கைபேசியை ஓர் அறையில் வைத்துவிட்டுப் போவதை கதிரின் இரு நண்பர்களும் பார்க்கின்றனர். அதை அவர்கள் எடுத்துப் பார்க்க விரும்புகின்றனர். ஆனால்அது சரியல்ல என்கிறான் கதிர். ஆனால், அவர்கள் தொடர்ந்து நச்சரிக்க, அந்த அறைக்குள் போய் அங்கிருந்த மீராவின் கைபேசியை அவன் எடுத்து வந்து தர, நண்பர்கள் இருவரும் அதிலிருந்த இந்தக் காணொளியை தங்கள் கைபேசிக்கு அனுப்பிவிடுகின்றனர். அதன் பிறகு அதைத் தங்களின் மற்ற நண்பர்களுக்கு அனுப்ப, அவர்கள் தங்கள் தோழர்களுக்கு அனுப்ப, கல்லூரி முழுவதும் அதைப் பற்றி பரபரப்பாகப் பேச, மிருதுளா கல்லூரிக்கு வரும்போது, அனைவரும் அவளையே உற்றுப் பார்த்து கிண்டல் அடிக்கின்றனர்.

 கல்லூரி முதல்வர் மிருதுளாவின் பெற்றோரை வரச் சொல்லி, இப்படி நடந்து கொள்ளும் ஒரு மாணவிக்கு தங்கள் கல்லூரியில் இடம் இல்லை என்று சொல்லி விடுகிறார். இது யாரோ ஒரு ஆணிடம் அவள் நிஜமாகவே பேசியது என்று நினைத்துக்கொள்ளும் அவளது தந்தை கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக அவளைக் கடுமையாகத் திட்டி, “எங்காவது போய் செத்துப் போஎன்று கத்திவிட்டுப் போய் விடுகிறார்.

இது வெறும் வேடிக்கை விளையாட்டு என்று நினைத்து தான் நடித்துக் காட்டியதை காணொளியாக பதிவு செய்த சினேகிதி மீராவின் மீது பெரும் கோபமும் வருத்தமும் கொள்கிறாள் மிருதுளா. மறந்து வைத்துவிட்டுப் போன தன் கைபேசியை எடுத்து கதிரும் அவனது இரு நண்பர்களும்தான் அந்தக் காணொளியை தங்கள் கைபேசிக்கு மாற்றி, மற்ற அனைவருக்கும் அனுப்பி இருக்க வேண்டும் என்பது மீராவுக்குப் புரிகிறது.

கல்லூரியிலும் வீட்டிலும் தனக்கு நேர்ந்த பெரும் அவமானத்தை தாங்க முடியாமல் மிருதுளா கல்லூரிக் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். சினேகிதியின் தற்கொலையும் அதற்குக் காரணம் அவளை நச்சரித்து தான் எடுத்த காணொளிதான் என்ற உண்மையும் மீராவைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகின்றன.

மீராவும் கதிரும் நண்பர்களாகி, பிறகு காதலர்களாக மாறுகின்றனர். ஆனால், இருவர் வாழ்விலும் புரிந்துகொள்ள முடியாத வினோத நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகின்றன.

கதிரின் நண்பன் வினோத் தன் முதலாளியின் மனைவியோடு வைத்திருந்த தொடர்பைக் காட்டும் காணொளி அவன் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வருகிறது. எள்ளி நகையாடும் தன் தோழர்களைச் சந்திக்க மனம் இன்றி வினோத் தற்கொலை செய்து கொள்கிறான். கதிரின் இன்னொரு நண்பன் டி.ஜே. போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டது போலக் காட்டும் இன்னொரு காணொளி காவல்துறையினருக்குப் போக, அவன் கைது செய்யப்படுகிறான்.

இந்தக் காணொளிகளை எடுப்பது யார், எதற்காக அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பி தொல்லைகள் விளைவிக்கிறார்கள் என்பதெல்லாம் கதிருக்குப் புரியவில்லை. கதிரின் காதலி மீரா துணிக் கடையில் உடை மாற்றும் காணொளி, அவள் குளிக்கும் காணொளி என்று அவளது அந்தரங்கத்தை அரங்கேற்றும் காணொளிகள் கதிருக்கு வருகின்றன. ‘இவை எல்லாருக்கும் பகிரப் படாமல் இருக்க வேண்டுமானால் நீ இதைச் செய்ய வேண்டும்’  என்று கதிருக்கு ஒரு செய்தி வருகிறது.

சுந்தர்: என்ன செய்தி?

ஆசான்: ‘உள்ளாடைகளைக் களைந்துவிட்டு, வெறுமனே ஒரு ரெயின்கோட் மட்டும் அணிந்து கொண்டு, கொட்டும் மழையில் இரயில் நிலையம் போய் நீ நிற்க வேண்டும்என்ற செய்தி வருகிறது.

சத்யா: யாரிடமிருந்து?

ஆசான்: இந்தக் காணொளிகளை அனுப்பும் நபரிடமிருந்து. தன் காதலியின் மானத்தைக் காக்க வேறு வழியில்லை என்று கதிர் அதனைச் செய்கிறான். ஆனால், மழையில் நின்ற சிறிது நேரத்தில் ஊடுருவிக் காணக்கூடிய ஒன்றாக அவன் அணிந்திருந்த ரெயின் கோட் மாறிவிடுகிறது. அதை அவன் புரிந்து கொண்ட மறுகணம் அவனுக்கு அதே நபரிடமிருந்து இப்படியொரு செய்தி வருகிறது.

சுந்தர்: என்ன செய்தி?

ஆசான்: ‘ஒருவர் நிர்வாணமாய் இருப்பதை மற்றவர்கள் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் ஒருவரின் கைபேசியில் இருப்பவற்றைத் திருடி எல்லாருக்கும் அனுப்பி அத்தனை பேரும் பார்க்கும் போது இருக்கும்‘.

இதன் பிறகு தான் இவை அனைத்தையும் செய்வது தன் காதலி மீராவாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு வருகிறது. மீரா அருகில் இல்லாத நேரத்தில் அவளது நாட்குறிப்பை படித்த பிறகு எல்லாம் அவனுக்குப் புரிய வருகிறது.

தன் சினேகிதி மிருதுளாவின் தற்கொலைக்குக் காரணம் தன் கைபேசியைத் திருடி அதில் இருந்த வீடியோவைக் களவாடி அனுப்பிய கதிரின் நண்பர்களே என்பதால், அவர்களின் இரகசியங்களை அம்பலமாக்கி ஒருவனைத் தற்கொலைக்கும்  இன்னொருவனைச் சிறைக்குள்ளும் தள்ளியது தன் காதலி மீராதான் என்பதை கதிர் புரிந்து கொள்கிறான்.  ‘ஆனால், அந்தக் கைபேசியை எடுத்து என் நண்பர்களிடம் கொடுத்ததே நான் தானே? அதுவும் மீராவுக்குத் தெரியுமே? என்னை அவள் எப்படி பழி வாங்கப் போகிறாள்?...’ என்றெல்லாம் எண்ணிக் கலங்குகிறான் கதிர்.

இந்தக் கேள்விக்கும் மீராவின் நாட்குறிப்பில் பதில் இருந்தது. கதிரை அது பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மிருதுளாவின் சாவுக்கு முன் மீரா கதிரை விரும்பியது உண்மை தான். ஆனால், தன் சினேகிதி அவமானப்பட்டு, மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டதற்குப் பிறகு அதற்குக் காரணமான மூவரையும் பழி வாங்குவதே அவளது வாழ்வின் முதல் நோக்கமாகிவிட்டது.

சுந்தர்: அதாவது கதிரையும் அவனது இரண்டு நண்பர்களையும்.

ஆசான்: ஆம். இரண்டு நண்பர்களையும் வெவ்வேறு விதங்களில் பழி தீர்த்தபின் கதிரை எப்படி தண்டிக்க நினைத்தாள்? அதற்கு காதல் எனும் ஆயுதத்தை  பயன்படுத்த அவள் தீர்மானித்தாள். தன்னை அவன் காதலிக்க வைத்து, இனி அவளின்றி தனக்கு வாழ்வு இல்லை என்று கதிர் நினைக்கும் அளவுக்கு அவனைக் கொண்டு வந்துவிட்ட பிறகு அவனுக்கு தரக்கூடிய மிகப் பெரிய தண்டனை என்ன? அவளின்றி வாழ அவனை நிர்ப்பந்திப்பது தான்.

சுந்தர்: ஐயையோ...அப்போ இவளும்....

ஆசான்: ஆம். கதிர் தான் செய்த தவற்றிற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டு, அதற்கு வேறு என்ன தண்டனை கொடுத்தாலும் தான் ஏற்க தயார் என்று சொல்லி, அவளைக் கெஞ்சினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது மீரா கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

சத்யா: இப்படித்தான் படம் முடியுதா?

ஆசான்: ஆம். படத்தின் முதல் காட்சி மிருதுளாவின் தற்கொலையைக் காட்டுகிறது. இறுதிக் காட்சி அவளது சாவுக்குக் காரணமான இந்த மூவருக்கும் தண்டனை கொடுத்துவிட்டு மீரா தற்கொலை செய்துகொள்ளும் காட்சி.

சுந்தர்: படத்தில் நடக்கிற சாவுகளுக்கு எல்லாம் கைபேசி தான் காரணம்?

சத்யா: கைபேசியில்ல. கைபேசியை வைச்சுக்கிட்டு சில அயோக்கியர்களும் சில அடிமுட்டாள்களும் செய்த காரியங்கள். இன்றைய இளைஞர்களுக்கு கைபேசியினால் என்னென்ன அவலங்கள் நிகழ்கின்றன? சொல்லு பார்க்கலாம்.

சுந்தர்: தேவையே இல்லாமல் விலை உயர்ந்த செல்ஃபோன்களை வாங்கிக்கிட்டே இருப்பது.

சத்யா: மற்றவங்க ஃபோனைத் திருடுறது அல்லது அவங்களுக்குத் தெரியாம அதை எடுத்துப் பார்க்கிறது, நோண்டுறது.

சுந்தர்: மற்றவங்களோட உத்தரவுஇல்லாமல் அந்த ஃபோன்ல இருக்கற விஷயங்களை எல்லாருக்கும் அனுப்புறது.

சத்யா: ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது நிழற்படத்தை எடுப்பது, அல்லது அவரோட சேர்ந்து தற்படம் (செல்ஃபி) எடுப்பது.

சுந்தர்: ஒருவர் கைபேசியில் பேசுவதை ஒட்டுக்கேட்பது.

சத்யா: ஒருவரின் அனுமதியின்றி அவரின் கைபேசி எண்ணை பிறருக்குக் கொடுப்பது.

சுந்தர்: ஒருவர் சொல்லாத ஒன்றை அவர் சொல்வது போலச் செய்தி அனுப்புவது.

சத்யா: என்னிடம் ஃபோன் இல்லை அல்லது ஃபோனில் சார்ஜ் இல்லை. எனவே, ஒரு நிமிடம் போனைத் தர முடியுமா என்று கேட்டு இன்னொருவரின் ஃபோனைக் கடன் வாங்கி அதை பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவது.

சுந்தர்: ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பிறருக்கு அனுப்புவது.

சத்யா: பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, அதைக் காணொளி எடுத்து, தனக்கு மீண்டும் இணங்காவிட்டால் அதை வெளியிட்டு விடுவேன் என்று அச்சுறுத்துவது.

ஆசான்: இப்படி எண்ணற்ற தீமைகளுக்குத் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தும் நபர்கள் தடம் மாறி பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் சறுக்குப் பாதையில் இறங்கி விடுகின்றனர். தாங்கள் அழிவதோடு வேறு சிலரையும் அழிக்கின்றனர். எனவே பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் உள்ள அனைவரும் இப்படி எதையும் செய்ய மாட்டோம் என்று மீண்டும் மீண்டும் உறுதி எடுக்க வைக்கலாம். இவற்றில் உள்ள தீமைகளைப் பற்றி அறிஞர்கள், ஆன்றோரைப் பேச வைக்கலாம். எனவே, விழிப்பாயிருந்து, சோதனைகளுக்குப் பலியாகிவிடாமல் மிகக் கவனமாக இருந்து, நல்ல காரியங்களுக்கு மட்டுமே கைபேசியை பயன்படுத்துவேன் என்ற தெளிவும் உறுதியும் அனைவருக்கும் வேண்டும்.

Comment