No icon

தேடி ஓடு

தேடி ஓடு

நீண்ட நெடிய ஆறு!

அதன் வழிப்பாதையில் ஓரிடத்தில் அருகிலிருந்தது குளம் ஒன்று!

ஆற்றைப் பார்த்து குளம் பொறாமையோடு சொன்னது: “மனிதர்கள் எவ்வளவு ஓரவஞ்சனை மிக்கவர்கள் பார்! நானும் தண்ணீரைத்தான் தாங்குகின்றேன்: நீயும் தண்ணீரைத்தான் தாங்குகின்றாய். ஆனால், மனிதர்கள் உன்னைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார்கள். உயிரோட்டமான வாழ்விற்கு உன்னைத்தானே உதாரணமாய்ச் சொல்கிறார்கள். தூய்மைக்குக்கூட உன்னைத்தானே எடுத்துக்காட்டுகிறார்கள். ஏன், நிறைவான வாழ்விற்குக்கூட உன்னைத்தானே அடையாளமொழியாகப் பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை?”

ஒரு நிமிடம் நிதானித்த ஆறு பதில் சொன்னது: “நம் இருவரிலும் இருப்பது நீராக இருந்தபோதிலும், உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசங்களைச் சுட்டிக்காண்பிக்கிறேன் கேள்:

நான் ஓடிக்கொண்டேயிருப்பவன், தொடர்ந்து புதிய எல்லைகளையும் நிலப்பரப்புக்களையும் தேடியலைபவன். நீயோ நான்கு கரைக்குள் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பவன். இந்தத் தேடல் பயணத்தில் பழைய அழுக்குகளை ஒதுக்கிவிட்டு, தொடர்ந்து என்னைப் புதுப்பித்துக்கொண்டு, தெளிந்த நீராய் ஓடுகிறேன். நீயோ தேடி ஓடுதலை உன்னில் கொண்டிராததன் காரணமாக பழைய அழுக்குகளை உன்னில் இறுதிவரை தூக்கிச் சுமக்கிறாய்.

என்னை எந்த நிலப்பரப்பும் எந்த எல்லையும் சிறைப்படுத்திவிட முடியாது. எதன்மீதும் எனக்குப் பற்று இல்லை. எதுவும் என்னைப் பற்றிக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. எனக்கு என் சுதந்திரம் முக்கியமானது. இந்த சுதந்திரம்தான் நான் சுத்தமாய் வாழ்வதற்குக் காரணமாய் இருக்கிறது. ஆனால் நீயோ சுதந்திரத்தைவிட பாதுகாப்புத்தான் மேலானது என்று எண்ணி, நான்கு கரைகளுக்குள் உன்னை நீயே விலங்கிட்டுக் கொள்கிறாய்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், என்னில் இருக்கின்ற தேடல் உன்னில் இல்லை. நினைவில் வைத்துக்கொள்:

“தேடுகின்றவர்கள்தான் தேடப்படுவார்கள்.”

சிந்தனை:

தேடல் மனித உயிரின் அடிநாதம். தேடல் உள்ள இடத்தில் இயக்கம் இருக்கும். இயக்கம் இருக்கும் இடத்தில் மாற்றம் இருக்கும். மாற்றம் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இன்று மனிதர்களில் பலர் ‘தேடல்’ என்ற பண்பையே தொலைத்துவிட்டதன் காரணமாக, அவர்களது வாழ்வு முடைநாற்றமெடுத்த சாக்கடையாகிவிட்டது. தேடல் இல்லா வாழ்வு கோபம், வெறுப்பு போன்ற புழு பூச்சிகளைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கும். மேலும் வாழ்க்கையில் நாம் பணம், புகழ், அங்கீகாரம், வசதி போன்ற கீழான காரியங்களைத் தேடாமல் அன்பு, உறவு, வாழ்வின் அர்த்தம் போன்ற மேலான காரியங்களைத் தேடினோம் என்றால் நம் வாழ்வு இன்னும் சிறப்படையும் என்பதில் சந்தேகமில்லை.

Comment