No icon

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

 

 அருள்பணி. ஜேம்ஸ் பீட்டர்,

கிறிஸ்துவின் சேனை

மாத இதழின் ஆசிரியர்

WhatsApp No. . 9842043457

                                                                                                                                                            சவுல்

அந்த ஊரில் இரண்டு பகுதிகளாக - ஒரு பகுதியில் மேல் சாதியினர் எனப்படும் பணக்கார வர்க்கமும், ஊரின் எல்லையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனப்படும் எளிய மக்களும் வாழ்ந்து வந்தனர்.

இருசாரருமே கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்! ஆனால், சாதிப் பெருமையில் சாதனைப் படைப்பவர்கள்.

மேல்சாதியினர், தங்களது புனிதர் திருவிழாவை அந்த மாவட்டத்திலேயே எந்த ஊரிலும் செய்ய முடியாத அளவுக்கு பெரிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள்.

வெண்கலத்தால் கொடிமரம் செய்திருந்தார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, தேரின் உயரத்தை இரண்டு அடி உயர்த்தி அமைத்திருந்தார்கள். மின்விளக்குகள், வானவெடிகள், மேளதாளங்கள், கச்சேரிகள், பொருட்காட்சிகள் மட்டுமல்ல; மறையுரைகள், திருப்பலிகளில் ஆரத்தி, தூப தீபங்கள், நடனங்கள், கலர்கலரான உடையலங்காரங்கள், கடைசி நாளில் அசன விருந்து.… ஏதோ சிறு மனத்தாங்களில் அசன உணவு நிறுத்தப்பட்டது. தெருவில் போய்க்கொண்டிருந்த தேர் பாதிவழியில் நிறுத்தப்பட்டது. கலவரம் வெடித்ததால், ஒரு பகுதியினர் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள்.

ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் கருதப்பட்டவர்கள், தங்களால் இயன்றவரியை சேகரித்து, விழா கொண்டாடினார்கள். இறை வார்த்தையைக் கேட்டு, ஒப்புரவு அருளடையாளத்தையும், நற்கருணையும் பெற்று, எளிய அசன உணவும் பகிர்ந்து கொண்டார்கள்.

எது உண்மையான வழிபாடு?

அழகான வழிபாடு. ஆனால், அழகில்லாத வாழ்க்கை என்பதுதான் பெரும்பாலும் நடைமுறையாகிவிட்டது.

பிரிந்த சபைக் கூட்டங்களும் சற்றும் இளைத்தவர்களல்ல. வழிபாடு, ஆராதனை, ஸ்தோத்திரக் கூட்டம், உபவாசக் கூடுகை, நற்செய்தி கூட்டம் என்ற பெயரில், பல இசைக் கருவிகளை மிகமிக வேகமாக சப்தமாக முழங்கிக் குதூகலம் அடைகிறார்கள்.

ஜெனரேட்டர் தயாராக இருக்கிறதா என்பதில் பாஸ்டர் கவனமாகவே இருக்கிறார். மின்சாரம் போய்விட்டால் ஆவியானவர் எங்கோ போய்விடுகிறாரே? அல்லேலூயா ஆர்ப்பரிப்பு சமாதியாகிவிடுகிறதே?

காயின் கடவுளுக்கு வழங்கிய காணிக்கை அழுகியப் பழங்கள் என்று தவறாக சொல்பவர் உண்டு. அவன் தன் விளைச்சலின் பலனையே வழங்கினான். ஆனால், அவன் மனமோ கசப்பால் நிறைந்திருந்தது. ஆகவேதான் ஆண்டவர் காயினையும் அவன் காணிக்கையையும் கண்ணோக்கவில்லை. (தொநூ 4:4)

அமலேக்கியருக்கு எதிராகப் போர்புரியச் சென்ற சவுலிடம் சொல்லப்பட்ட கடவுளின் வாக்கு - அங்கே, ஒன்றையும் விட்டுவைக்காமல், அனைவரையும் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதாகும். ஆனால், சவுலோ நல்ல ஆடுமாடுகளைக் கொல்லாமல் கொண்டு வந்தார் - கடவுளுக்குப் பலி செலுத்துவதற்காக என்றான்.

அப்பொழுது கடவுளின் கோபமும், சாபமும் அவன்மேல் விழுந்தது. “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியைவிட சிறந்தது. நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்என்றார். (1சாமு 15: 22-23).

மனிதன், முகத்தை, வெளி அடையாளங்களைப் பெரிதாக, பெருமையாகப் பார்க்கின்றான். கடவுளோ, இருதயத்தை, உடைந்த மனத்துயர் உள்ளத்தைக் காண்கிறார்; காண விரும்புகிறார். (1சாமு 16:7)

பத்திலொரு பங்கு கொடுப்பதில் பரிசேயன் மிகக் கவனமாக செயல்பட்டான். ஆனால், ஆயக்காரனை சகமனிதனாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆகவே, அவனது வழிபாடு கடவுளுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஊதாரி மகன், மனந்திருந்தி திரும்பி வந்தபொழுது, மகிழ்ச்சி மிகுதியால், தந்தை விருந்து படைத்தார். ஆனால், மூத்த மகனோ, முறுமுறுத்தான். மகிழ்ச்சியில் பங்கேற்க முன்வரவில்லை. தந்தை சொன்ன வேலைகளையெல்லாம் நான் பிழையில்லாமல் செய்தேனே என்பதில் என்ன பெருமை இருக்கிறது?

உண்மையான வழிபாடு என்பது என்ன?

கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.” (உரோ 12:1)

எனக்கு அழகாய், விருப்பமாய், கவர்ச்சியாய்த் தோன்றுவதுஆண்டவருக்குப் பிரியமில்லையென்றால், அவைகளை விட்டொழிப்பதே அதாவது சிலுவையில் அறைந்து விடுவதே, உண்மையான வழிபாடு. மற்ற அனைத்தும் உண்மையற்ற வழிபாடாகும்.

ஆண்டவரை வழிபடுவோர், கடவுளின் இதய சிந்தை கொண்டவர்களாக, ஆவியிலும், உண்மையிலும் அதாவது, தூய ஆவியார் காட்டும் உண்மையின் பாதையில் நடப்பதே வழிபாடாகும்.

மீண்டும் பழைய ஏற்பாட்டு வழிபாட்டு முறையை பின்பற்றாமல், புதிய நியம முறைகள் என்ற பாடலுக்கேற்ப விடுதலைபெற்றவர்களாக, விடுதலையோடு வழிபடுவோம்.

Comment