No icon

தேவைகள்

தேவைகள்

அருள்பணி.எம். ஏ. எம்மா, சே.ச.

“இவுங்களோட உக்காந்திருக்கிறதே எனக்கு அவமானமா இருக்கு. இவங்க சொல்ற தெல்லாம் பொய்!”

“இவுங்க, உன்னுடைய பெற்றோர் தானே?”என்று அந்தப் பையனிடம் கேட்டேன்.

எரிச்சலோடு ‘ஆம்’ என்று சொன்ன இளைஞன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலையில் பயில்கிறவன் என்று தெரிந்து கொண்டபிறகு, நான் கேட்டேன், “ஏன் அவங்கள பார்த்தா உனக்கு அவமானமா இருக்கு என்று சொல்ல முடியுமா?”அவன் முறைத்து அவர்களைப் பார்த்ததால், நான் தொடர்ந்தேன், “அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நினைக்கிறதாலேயா?”

அதற்கு அவன், “நான் கடந்த ஒன்றரை மாதங்களாக ஒரு பைக் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கிறேன். பணம் இல்ல இல்லன்னு ஏமாத்திக்கிட்டே இருக்கிறாங்க.”

“இப்போது எப்படிக் கல்லூரிக்குச் சென்று வருகிறாய்?” என்று கேட்டபோது, “ஒரு பரிதாபமான பைக் வாங்கிக் குடுத்திருக்கிறாங்க. ஸ்ப்லெண்டர். என் ஃபிரண்டஸ் எல்லாரும் ரேசிங் பைக் வைச்சிருக்கிறாங்க.”

அமைதியாக இருந்த பெற்றோர் வருத்தத்தோடு சொன்னார்கள், “எங்களால முடிஞ்சது இவ்வளவுதான். அந்த பைக் வாங்கின கடனே இன்னும் அடைக்கல. ரேசிங் பைக் வாங்கப் பணம் இல்ல, கடனும் வாங்க முடியாதுன்னு எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகன் சொன்னான்,  “இது எனக்குத் தேவை. என்னுடைய தேவையைப் புரிஞ்சுக்க முடியலைன்னா, நான் உங்களோட இருக்கணும்னு அவசியமில்ல. என் பிரண்ட்ஸ் வீட்டுலபோய் இருந்துக்கிறேன்.”

ரேசிங் பைக் வாங்குவது அந்தப் பையனுடைய தேவை என்று சொல்கிறான்.எத்தனையோ மாணவர்கள் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ வந்து போகிறார்கள் என்று உணர்ந்த, பணவசதியில்லாத அவனுடைய பெற்றோர் ரேசிங் பைக் வாங்குவது அவ்வளவு முக்கியம் கிடையாது அல்லது அடிப்படைத் தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

ஒருவருக்கு ஒன்று தேவையாகப் படும்போது, இன்னொருவருக்கு அது முக்கியத் தேவையாக இல்லாமல் இருக்கலாம். எனினும், நமக்கு ஒரு சில அடிப்படைத் தேவைகள் உண்டு என்று ஆபிரகாம் மேஸ்லோ என்ற உளவியலாளர் அவற்றைப் படிநிலையில் வரிசைப்படுத்தியும் உள்ளார். உயிர் வாழ்வதற்குத் தேவையான உடற் தேவைகள் மிக அடிப்படையான தென்று சொல்கிறார். அதாவது, உணவு, நீர், காற்று. பிறகு, உடல் வளர்ச்சியில் ஒரு கட்டத்திற்குப் பிறகு செக்ஸ் முதலியன. அதற்குப் பிறகு நமக்குப் பாதுகாப்புத் தேவைகள் முக்கியமாகத் தோன்றும். உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று நம்மையே பாதுகாப்பது முக்கியமாகத் தோன்றும். மேலிருக்கும் தேவைகள் பூர்த்தியானதோடு அன்பு அல்லது உறவு சம்பந்தப்பட்டத் தேவைகள் மேலோங்கி நிற்கும். பிறகு மதிப்பு, மரியாதை நமக்குத் தேவையாகப்படும்.

இதற்கு மேலும் நமக்கு ஒரு சில தேவைகளாக நம் வாழ்க்கையை வழிநடத்தும். ஆனால், மேலே சொல்லப்பட்ட நான்கு தேவைகளிலேயே அநேகருடைய வாழ்வு அடங்கிவிடும். மற்ற மேம்பட்டத் தேவைகளுக்கு மிகக்குறைந்த நேரமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு 50 வயதாகிற சராசரி குடும்பத் தலைவரைச் சந்தித்து எதற்காக அதிக நேரம் செலவு செய்கிறார் என்று விசாரித்தால், அவர் என்ன சொல்வார்?

“வேலை, பணம்னு ஓடிக்கிட்டு இருக்கிறேன். மகளுக்குத் திருமணம் செய்யும் வயதாகிறது. போதுமான பணம், நகைகள் எல்லாம் சேத்தாச்சு. நல்ல மாப்பிள்ளையப் பாக்கணும். மூத்த பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும். இந்தக் கவலைகள் பலவருடங்களாக உண்டு.”

“குடும்பத்திற்காக உழைப்பதோடு உங்களுடைய மற்ற நேரத்தை எப்படிக் கழிக்கிறீர்கள்?”

“நேரமா? எங்க நேரமிருக்குது!? சித்திரம் வரையணும், சிற்பங்கள் ஏதாவது செய்யணும்னு ஆசையிருக்கு. அது ஒரு நிறைவேறாக் கனவாவே இருக்குது. அவ்வளவுதான். வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும், குடும்பக் கடமைகளைச் செய்வதிலேயே நேரம் போயிடும்னு நினைக்கிறேன்.”

இவர் உணவு, உடை, இருப்பிடம், போதுமான வசதிகள், எதிர்காலத்திற்கான சேமிப்பு, அன்பு, மதிப்புமரியாதை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகத்தான் தன் படிப்பு, வேலை, குடும்பம் என்று ஈடுபட்டிருக்கிறார். ஆனால், தனக்குள் புதைந்து கிடக்கிற திறமைகளையெல்லாம் வளர்க்கவோ, வெளிக்காட்டவோ முடியாமல் போகலாம். தன்மெய்ம்மையாக்கம் (ளநடக-யஉவரயடணையவiடிn) என்ற தேவையைப் பூர்த்தி செய்யாமலேயே, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலேயே வாழ்வுக் காலம் முடிந்துவிடுவதாக அநேகர் சொல்கிறார்கள். தன்மெய்ம்மையாக்கம் என்றால் நம்முடைய ஆசைகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நிறைவேற்றுவதாகும். நம் திறமைகளையும் கடவுள் கொடுத்திருக்கிற கொடைகளையும் முழுமையாக உபயோகித்து நம்மையே வளர்த்துக் கொள்வதுமாகும். முழு வளர்ச்சி என்றால் தன்மெய்ம்மையாக்கம் நோக்கி சாகும்வரை நாம் போக வேண்டும்.

ஆனால், அடிப்படைத் தேவைகளைக் கடந்து, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் அடையவேண்டிய வளர்ச்சியையும் நிறைவுதரும் சாதனைகளையும் அடைந்து விட்டோமோ இல்லையா என்ற சந்தேகத்தோடு அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு தேடலில் இருக்கிறோம் என்று உணர்ந்தாலும், எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம், எப்போது நம் தேடல் பலன் தரும் என்று தெரியாமலேயே இறுதிக் கட்டத்திற்கு நம்மில் அநேகர் சென்றுவிடுவதாகத் தோன்றுகிறது. நம்மால் எதெல்லாம் முடியும் என்று கண்டுபிடிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. அவ்வப்போது “இதைச் செய்திருக்கலாமே, இந்தத் திறமைகளை வளர்த்திருக்கலாமே” என்று பல ஏக்கங்கள் நம்மை நிறைக்கும். தேவைகள் பூர்த்தியாகாதவர்களுடைய வாழ்வு, மனநிறைவை இழந்து, விரக்தியில் வீணாகப் போய்க் கொண்டிருக்கும். நம்முள் புதைந்துகிடக்கும் சக்தியையும் திறமைகளையும் உபயோகித்து, வெறுமனே கடமைகளை மட்டும் ஆற்றுவதோடு நிறுத்திவிட்டால் வாழ்வு ஒரு பாரமாகத் தோன்றும். நமக்குக் கடன்பட்டவர்களின் நன்றியை எதிர்பார்த்து ஏமாந்து போவோம்.

எனவே, மேம்பட்ட எல்லாத் தேவைகளையும் நம்மால் பூர்த்திசெய்ய முடியாவிட்டாலும், எல்லாத் திறமைகளையும் வளர்க்கமுடியாவிட்டாலும், நம்மால் முடிந்த அளவு தன்மெய்ம்மையாக்கம் நோக்கி நிறைவோடு போவதற்காக, இன்னொன்றும் தேவை என்று உணரவேண்டும். அதுதான் நம் வாழ்வின் குறிக்கோள், நம்முடைய அடிப்படைத் தேவைகளையும், சுயநலத்தையும் கடந்து போகக்கூடிய ஒரு குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதை அடையும் முயற்சியில் நமக்கு அர்த்தம் கிடைக்கும். குறிக்கோளும் அர்த்தமும் நம் வாழ்வில் இருந்தால், ஆழமான மகிழ்ச்சியும் நம்மைத் தேடிவரும்.

குறிக்கோளும், அர்த்தமும் மகிழ்ச்சியும் கிடைத்தால், அடிப்படைத் தேவைகளோடு நின்றுவிடாமல், இறைவன் நிர்ணயித்த இலக்கை நோக்கிப் பயணிக்கச் சக்தி கிடைக்கும். நம் வாழ்வின் ஒவ்வொருநாளும் பயனுள்ளதாக அமையும். நிறைய உடல் சக்தியும் மனதில் உத்வேகமும் தொடர்ந்து ஊறும். நேர்மறை உணர்வுகள் நம்மை நிறைக்கும். பிறருக்குப் பணிசெய்து கிடப்பதே கிடைத்தற்கரிய இன்பம் எனத் தோன்றும். கலை உணர்வோடு உலகைப் பார்க்கமுடியும். வாழ்வு நமக்கு இறைவன் கொடுத்த கொடையென நன்றியுணர்வு பொங்கும். நகைச்சுவை உணர்வு நம் முடைய பாரங்களை இலகுவாக்கும். வாழ்வுச் சுமைகளெல்லாம் விண்ணகச் சுகங்களாக மாறும். ஒவ்வொரு நொடியும், உலகின் ஒவ்வொரு அணுவிலும் நம்முடைய உள்ளத்திலும் இறைவனின் பிரசன்னத்தை உணரும் வரம் கிடைக்கும். நமக்கு எதிராகத் தீங்கிழைத்தவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை பெருகும். இவ்வுலகை இனியதாக மாற்றுவதே நம் இனிதான கடமையாக, நிறைவுதரும் தேவையாக மாறும்.

Comment