No icon

3. கடமையில் தவறாதிருப்போம்

தவக்காலத் தொடர்

1. பாவங்கள் பலவகை
கடவுளை அறிந்து, அன்பு செய்து, அவருக்குப் பணிபுரிந்து, அவரது பெருமகிழ்வில் பங்குகொள்ளவே மனிதர்களாகிய நாம் படைக்கப் பட்டுள்ளோம். ஆனால் நாமோ அலகையை நம்பி
கடவுளின் கட்டளையை மீறி நடந்ததால் அவரின்
பிள்ளைகள் என்னும் அருள்நிலையை இழந்துள் ளோம். அதனால் கடவுளோடும் திருஅவையோடும் சமுதாயத்தோடும் கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. இதையே பாவம் என்கிறோம். 
பொதுவாகப் பாவங்களை பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என இரண்டு வகையாகப் பிரிப்பர். இதில் முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் உண்டாகி நம்மோடு பிறக்கிறப் பாவத்தைப் பிறப்புநிலைப் பாவம் என்போம். நன்மை தீமை அறிந்த நிலையில் ஒருவர் முழுமனத்துடன் செய்யும் பாவத்தை செயல்வழிப் பாவம் என்போம்.
இந்தச் செயல்வழிப் பாவத்தை சாவான பாவம், அற்பப் பாவம் எனவும் வகைப்படுத்துவோம். கடவுளது கட்டளையை முழு அறிவுடனும் முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து அவரது அன்பை முறித்துக் கொள்வது சாவான பாவம் என்போம். அதே வேளையில் முழுமையான அறிவோ விருப்பமோ இன்றி கடவுளுடைய அன்புக்கு எதிராகச் செயல்படுவதை அற்பப் பாவம் என்போம். 
அற்பப் பாவத்தைத் தொடர்ந்து செய்யும் போது அது சாவான பாவத்திற்கே வழி வகுக்கிறது என்பதையும் நாம் அறிவோம். 
மேலும் பாவங்களின் கனத்தை ஆய்ந்தறிந்த நம் மரபின் ஆன்மிகவாதிகள் தலையான பாவங்கள் ஏழு எனவும் வகைப்படுத்தியுள்ளனர். அவை 
1. தற்பெருமை, 2. சீற்றம், 3. காமவெறி     4. பேராசை,
5. பெருந்தீனி விரும்பல், 6. பொறாமை 7. சோம்பல் ஆகியவை. 
திருப்பலியின் தொடக்கத்தில் நாம் சொல்லும்
பாவ அறிக்கை மன்றாட்டில் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறிய
தாலும் பாவங்கள் பல செய்தேன் என அறிக்கை யிடுகின்றோம். இங்கே நாம் அறிக்கையிடும் பாவங்களையும் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். 
1. செய்யக்கூடாததைச் செய்ததால் எழும் பாவங்கள்  (அவை: சிந்தனையால், சொல்லால், செயலால் செய்தவை)
2. செய்ய வேண்டியதைச் செய்யாததால் எழும் பாவங்கள் (கடமையில் தவறியவை)
இங்கே செய்யத் தவறியவை என்னும் பாவங்களைவிட செய்யத்தகாதவை என்னும் பாவங்களையே பெரிதுபடுத்துகிறோம். 
பெரும்பாலும் ஒப்புரவு அருளடையாத்தில் பாவ அறிக்கை செய்யும்போது சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் செய்த பாவங்களைப்
பற்றி மட்டுமே பெரும்பாலும் அறிக்கையிடு கின்றோம். 
கடமையில் தவறியவை பற்றி மிக அரிதாகவே சிந்திக்கின்றோம். அறிக்கையிடுகின்றோம். 
கடவுளோ இவை இரண்டையும் ஒன்று போலவே பார்க்கின்றார். அதிலும் கடமையில் தவறிய பாவங்கள் நமது நிலைவாழ்வுக்கே வேட்டு வைக்கின்றன என்பதை நாம் உணராதிருக்கிறோம். 
மேற்சொன்ன பலவகையான பாவங்களில் நமது நிலைவாழ்வையே நிர்மாணிக்கும் தன்மை கொண்ட கடமை வாழ்வு பற்றியும் கடமையில் தவறுவதால் நமக்கு ஏற்படும் பேரிழப்பு பற்றியும் இவண் தொடர்ந்து பார்ப்போம்.
நாம் நம் கடமைகளில் தவறாதிருக்க இறைவாக்கினர்களின் சிந்தனைகளும் நம் ஆண்டவர் இயேசுவின் அறிவுரைகளும் என்ன கூறுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்வோம். 
2. பழைய ஏற்பாட்டில் கடமைகள் தவறுதல்
இஸ்ரயேல் மக்களின் வாழ்விலும் வழி பாட்டிலும் அவர்கள் கடைபிடிக்கும்படியாக பல சட்டங்கள் மோசே காலத்தில் வழங்கப்பட்டன. அவற்றைமறைநூல் அறிஞரும் பரிசேயரும் பத்துக்கட்டளைகள் உள்ளிட்ட 613 சட்டங்கள் என்று வரையறுத்தனர். இக்கட்டளைகளை ஆழ்ந்து நோக்கினால் பெரும்பாலும் அவை “செய்யாதே”, “தொடாதே”, “சுவையாதே”, தீண்டாதே என்பவை பற்றியே பேசுகின்றன. (காண். கொலோ 2:20-22)
எடுத்துக்காட்டாக நாம் பத்துக் கட்டளை களை நோக்குவோமெனில் அவற்றில் எட்டு கட்டளைகள் “செய்யாதிருப்பாயாக” என்பதையே வலியுறுத்துகின்றன. மீதமுள்ள இரண்டில் “ஓய்வு
நாள்” பற்றியதில் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம் என்றே அதுவும் பேசுகிறது. “பெற்றோர்” பற்றிய ஒரே ஒரு கட்டளையில்தான் “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என கடமையைப் பற்றிப் பேசுகிறது. (காண் :விப 20:1-17)
ஆயினும் பெற்றோரைப் பற்றிய கட்டளை யைப் பின்பற்ற விரும்பாத பரிசேயரும் மறைநூல் அறிஞரும் “கொர்பான்” என்னும் மாற்று நடை
முறையைப் புகுத்தி அந்த ஒரே ஒரு கடமையிலும் தவறினர். இயேசு இச்செயலையும் நடைமுறையையும் கண்டிப்பதை நாம் அறிவோம் (மாற்கு 7: 8-13)
ஆகவே செய்யத்தகாதவை என்னும் பாவங்களிலேயே மட்டும் நாம் கவனம் செலுத்தி னால் பழைய ஏற்பாட்டுப் பரிசேயப் பாணிக்குத் திரும்புகிறோம் என்றுதான் பொருள். 
எனவேதான் இறைவாக்கினர்களின் அழைப்
பும் அறைகூவலும் பெரும்பாலும் செய்யத்தவறி யவை அதாவது கடமையில் தவறியவை என்றும் பாவங்களிலிருந்து மனம் திரும்பலே ஆகும். 
எடுத்துக்காட்டாக
1.    தானியேல் நெபுகத்னேசரை நோக்கி, “எனவே
அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக்கொள்ளத் தக்கது ஆக! நல்லனவற்றைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக் கொள்க! ஒரு வேளை உமது வளமை நீடிப்பதற்கு இது வழியாகலாம்” என்றார் (தானி 4:27)
2.    எசாயா 1:16, 17ல், “உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்.” உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள். தீமை செய்தலை விட்டொழியுங்கள்.
3.    எசாயா 58:6,7 ல், “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும் நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை
செய்து அனுப்புவதும் எவ்வகை நுகத்தையும்
உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள் ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க
இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தார்க்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு”.
4.    ஆமோஸ் 5:14, 15 ல் “நன்மையை நாடுங்கள். தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போல் படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார். தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்... ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக.”
5.    யோனா 3:8ல், “மனிதரும் விலங்குளும்.... தம் தீய வழிகளையும் தாம் செய்துவரும் கொடுஞ் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்”
6.    செக்கரியா 7:7ல், “முன்னாள் இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் முழங்கிய சொற்கள் இவை அல்லவா!”
7.    எனவேதான் இந்த இறைவாக்கினர்கள் வழியில் கடைசி இறைவாக்கினரான திரு முழுக்குயோவான் தனது முதல் அறிவுரையில் உடையைக் கொடு, உணவைக் கொடு என்று இடிமுழக்கம் செய்தார் (மத் 3:7-10)
3. புதிய ஏற்பாட்டில் கடமைகள் தவறுதல்
இயேசுவின் கூற்றில் இரண்டினை மட்டும் இவண் எடுத்துக்காட்டாய் ஆய்வோம். 
1. மத் 25:41-45ல் மக்களினத்தார் அனைவருக்கும் நடுவராக ஆண்டவர் இறுதித் தீர்ப்பு வழங்கும் இடத்தில் செய்யத் தவறியவை என்னும் கடமையில் தவறிய பாவங்களை இயேசு பட்டியலிடுகிறார். “எனக்கு
உணவு கொடுக்கவில்லை... என் தாகத்தைத்
தணிக்கவில்லை... என்னை ஏற்றுக்கொள்ள வில்லை... எனக்கு ஆடை அளிக்கவில்லை... என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை. 
நீங்கள் செய்யவில்லை... செய்யவில்லை... என்றும் இப்பாவங்களே அவர்களுக்கு சாபத்தையும் என்றும் அணையா நெருப்பையும் முடிவில்லாத் தண்டணையையும் உறுதி செய்தது. 
2. லூக் 16: 19 - 31ல் வரும் செல்வரும் இலாசரும் உவமையில் செல்வரின் பாவம் என்ன என்றால் அது செய்யத்தகாதது அல்ல. மாறாக அது செய்யத் தவறியது என்னும் கடமையில் தவறிய பாவம் ஆகும். அவன் அந்த ஏழை இலாசருக்கு தனது வீட்டின் தாழ்வாராத்தைக்கூட கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் அவர் வீட்டு வாயில் அருகே கிடந்தார். 
அவருக்கு உணவளிக்கவில்லை. எச்சிக் கையினால் காக்கையைக் கூட விரட்ட விரும்பாத கஞ்சன். ஆதலால் இலாசர் அச்செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். அவருக்கு மருத்துவ உதவிகள் தரவில்லை. எனவேதான் நாயஙகளங வந்து அவர் புண்களை நக்கின.அந்த நாயைக்கூட அவான் கட்டிப் போடவில்லை. “நாங்கள் எச்சரிக்கை” என்றும் வீட்டில் அவைகளுக்கு இருந்த மதிப்பு கூட அடுத்திருந்த மனிதர் மீது இல்லையே!
அந்தோ பரிதாபம்! தீர்ப்பு நாளில் அவனுக்குக் கிடைத்தது பாதாளம்... நரகம்!.  அது அவன் செய்ததற்கு அல்ல!. செய்யத்தவறியதற்கு.
நாம் எப்படி? கடமையில் தவறாதிருப்போம்.
(தொடரும்)

Comment