No icon

2. இழக்கத் துணிவோம்

தவக்காலத் தொடர்

1. மேலெழுந்த மனமாற்றமும் முழுமையான மனமாற்றமும்
கிறிஸ்துவைப் பற்றிய படிப்புகளில் தொடக்க நிலை, முதிர்ச்சி நிலை என்று இரு நிலைகள் உள்ளன. திருத்தூதர் பவுலும் இதே கருத்தை ஊனியல்பு கொண்டவர்கள், ஆவிக்குரியவர்கள் எனவும் குழந்தைகள் போன்றவர்கள், வளர்ந்து பெரியவர்கள் எனவும் விரிவாகப் பேசுகிறார். (காண்க 1கொரி 3:1-4). ஆயினும் இக்கருத்தை அழகுபடப் பேசும் எபிரேயர் திருமுகம் (6:1-3) அருள் வாழ்வின் தொடக்க நிலையில் முதல் பாடமாகவும் அடித்தளமாகவும் மனமாற்றம் என்னும் கருத்து இருப்பதை வலியுறுத்துகிறது.
மனமாற்றம் என்றவுடனேயே நாம் பொதுவாக பாவத்திலிருந்து மனமாறுதல் என்றே நினைக்கின்றோம். சிந்தனையால், சொல்லால், செயலால், கடமையால் தவறியதால் செய்த பாவங்களை அறிக்கையிட்டு அவற்றிலிருந்து மனமாறுதல் பெறுதல் என்றே கருதுகின்றோம். இதில் ஓர் உண்மை இருந்தாலும் இக்கருத்து இன்னும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டும்.
நாம் மீண்டும் இறைவார்த்தைக்குச் செல்வோம். எபிரேயர் 6:1ல் மனமாற்றம் என்னும் கருத்து வேறு ஓர் அடைமொழியோடு சொல்லப்பட்டிருப்பதை இவண் கருத்தில் கொள்வோம். அது, “சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனமாற்றம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆதலால் மேலெ ழுந்தவாறான மனமாற்றத்தில் நாம் நின்றுவிடலாகாது. முழு
மையான மனமாற்றம் காண
அதன் வேர்களையும் விழுது களையும் ஆய்வு செய் வோம்.
எபிரேயர் திருமுகம் யூத
சமயத்திலிருந்து கிறிஸ்தவ
சமயத்தைத் தழுவியவர் களுக்கு எழுதப்பட்டது. ஆக
அவர்களுக்கு, இந்த “சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்
கள்” என்பது பழைய ஏற்பாட் டின் வழிபாட்டுச் சடங்கு முறைகள் குறித்துப் பேசுகின்றன என்பது
வெள்ளிடைமலை. மேலும் எபி 9:10ல் இந்தத்
தூய்மைப்படுத்தும் சடங்கு
கள் பற்றிய இந்தக் கருத்து
சீரமைப்புக் காலம் வரைதான்
நீடிக்கும் எனவும் எழுதப் பட்டுள்ளது. 
இந்தச் சீரமைப்புக்
காலம் பற்றித் தெரிந்துகொள்ள
வசனம் 13, 14 ஐ பார்க்க
வேண்டும். “வெள்ளாட்டு கிடாய்கள், காளைகள் இவற் றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம்,
வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு
அழைத்துச் செல்லும் செயல் களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியில் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே”.
இங்கே கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சான்றை எத்
துணை மிகுதியாய்த் தூய்மைப் படுத்துகிறது என்னும் கருத்து அழுத்தம் பெறுகின்றது. அதுதான் சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம்மை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பது தெளிவாகின்றது. அதுவே சீரமைப்புக் காலமாய் அமைகிறது. 
2. பவுலின் மனமாற்றத்தின் பயனுள்ள படிப்பினைகள்
மனமாறுதலைக் குறித்து மேலெழுந்த வாரியான மனமாறுதல், முழுமையான மனமாறுதல் என்று பகுத்துப் பார்த்தோம். இவ்வுண்மையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள சரியான மனமாற்றம், சரியில்லாத மனமாற்றம் என்றும் பிரித்துப் பார்க்கலாம்.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து முதலில் சரியில்லாத மனமாற்றம் என்பது என்ன என்பதைத் தெளிவாக்குவோம். 
சடங்குகளைச் சார்ந்திருக்கும் மன மாற்றம் சரியானதல்ல; மரபுகள், பாரம்பரியங்களைச் சார்ந்திருக்கும் மனமாற்றமும் சரியானதல்ல; அவ்வாறே கொண்டாட்டங்களைச் சார்ந்திருக்கும் மனமாற்றமும் சரியானதல்ல.
இங்கே இறைவாக்கினர் எசாயா கூற்று பொருத்தமாய் நினைவு கூரத் தக்கது.
“நாங்கள் அனைவரும் தீட்டுப் பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள்
நேரிய செயல்கள் எல்லாம் அழுக் கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள்
யாவரும் இலைபோல் கருகிப்போகின் றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் செல்கின்றன” (64:6).
இதில் "நாங்கள் அனைவரும்" என்னும் பதமும் "எங்கள் செயல்கள் எல்லாம்" என்னும் பதமும் கவனிக்கத் தக்கவை. அவை நம்முடைய சமயத்
தையும், தூய்மைச் சடங்குகளையும், பக்திமுயற்சிகளையும் அழுக்கடைந்த ஆடை எனக் குறிப்பிடுகின்றன; நம்மை உள்ளம் குத்துண்டுபோகச் செய்கின்றன. எனவே நம் உடல் சார்ந்த, ஊனியல்பு சார்ந்த, சடங்கு சார்ந்த... 
இவைபோன்ற கீழுள்ளவற்றைச் சார்ந்த மனம் மாற்றம் சரியானதல்ல என்பது தௌவாகிறது. இனி சரியான மனமாற்றம் என்றால் என்ன என்று பார்ப்போம். 
சரியான மனம் மாற்றம் என்ன என்பதைத் தத்துவமாக விளக்குவதைவிட ஓர் எடுத்துக் காட்டுடன் விளக்குவது அதைப் புரிந்துகொள்வதை எளிமைப்படுத்தும். இங்கே திருத்தூதர் பவுலின் மனமாற்றத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
பவுலின் மனமாற்றம் குறித்து அவரது திருமுகங்களில் பல இடங்களில் பல கோணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் ஆழ்ந்து படிப்பது நிறைபயன் தரும். ஆயினும் காலத்தின், நேரத்தின்  அருமை கருதி இவண் ஒரே ஓர் எடுத்துக்காட்டினை மட்டும் காண்போம். 
பிலி. 3:4 - 7 ல் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம்நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்; திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்
தால் திருச்சபையைத் துன்புறுத்தி னேன். திருச்சட்டத்தின் அடிப்படை
யிலான நீதி நெறியைப் பொருத்த மட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்”.
இங்கே கவனிக்க வேண்டிய பல கருத்துகள் உள்ளன. விருத்த சேதனம் என்பது சடங்குச் செயல்களையும் இஸ்ரயேலர் என்பது, இனம் பின்னணி ஆகியவற்றையும் பென்யமீன் குலத்தவன் என்பது குடும்பப் பெருமையையும் பரிசேயன் என்பது சமயத்தில் உயர்
நிலையையும் திருச்சட்ட ஆர்வம்
என்பது செயல்பாட்டில் சாதனையை யும் நீதிநெறிப் பற்று என்பது சமூகத்தில் குற்றமற்ற வாழ்வையும் குறிப்பதாய் இருக்கின்றன.
இவைகள் பவுலுக்கு வாய்க்கப் பெற்றன, அன்றைய யூத, உரோமைச் சமூக, சமய, அரசியல் பின்னணி இத்தகையப் பின்புலம் கொண்டவராய் திருத்தூதர் பவுலை மனமாற்றத்திற்கு முன் உருவாக்கியிருந்தன. மன
மாற்றத்திற்குப் பிறகும் இந்தத் தகுதிகள் பவுலிடம் இருந்தன. இவற்றைக் கொண்டிருப்பதும் தவறில்லை. 
ஆனால் தமஸ்கு நகர் செல்லும் சாலை யில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் சவுல் தடுத்தாட்கொள்ளப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. என்னை ஆட்கொண்ட கிறிஸ்து யார்? என்ற கேள்வி அவரில் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மனமாற்றம் தந்த தாக்கத்தினால் பெருமைக்கும், மேட்டிமைக்கும், தலைக்கனத்திற்கும், ஆணவத்திற்கும், அகந்தைக்கும், பந்தாவிற்கும், பீற்றுதலுக்கும் இட்டுச் செல்லும் இந்த குலப்பண்புகளைச் சார்ந்திருப்பதிலிருந்து மனமாறினார். 
ஆகவேதான் வசனங்கள் 7, 8 ல் அழுத்தம் திருத்தமாக தனது மனமாற்றத்தைப் பதிவு செய்கிறார். 
“ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொருத்தமட்டில் என் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்iயும் இழப்பாகக்  கருதுகிறேன்”. அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.
இங்கே கவனிக்க வேண்டிய மூன்று கருத்துகள் உள்ளன
முதலாவது, வசனம் 7ல் தனக்கு ஆதாயமான, சாதகமான மேற்சொன்ன பண்புகள் அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன் என்கிறார். இங்கே அவருக்குள் ஏற்பட்ட மனமாற்றம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அது சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனமாற்றம் எனலாம். கிறிஸ்துவின் இரத்தம் அவருள் செயலாற்றியுள்ளது. இதுதான் ஆழமான பிடிப்புள்ள மனமாற்றம்.
இரண்டாவது, வசனம் 8 ல் ஒப்பற்ற உயர்வான செல்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் பொருட்டு அவருக்கு இருந்த சமூக, சமய பெருமைமிகு பண்புகள் எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன் என்கிறார். முந்தைய வசனத்தில் கருதினேன் என்றவர் இங்கே கருகிறேன் என்கிறார். அதாவது இது ஒரு தொடரும் அனுபவம் ஆகும். இங்கே மனமாற்றம் என்பதன் வேர்களுக்குள் நுழைந்து, சரியான, முழுமையான மனமாற்றத்தில் அவர் இருப்பது நமக்கு நல்ல படிப்பினையாய் அமைகிறது.
மூன்றாவது, வசனம் 8ன் பிற்பகுதியில் மனமாற்றத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தியம்புகிறார். “நான் கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பை யாகக் கருதுகிறேன்”.
அன்றைய யூத, உரோமை சமூக, சமய, அரசியல் பின்னணியில் மேற்சொன்ன பண்புகள் எல்லாமும்தான் அவரின் இருத்தல் மற்றும் பணிகளுக்கு வலுச்சேர்ப்பவை. இங்கே பவுல் தன்னுடைய உரோமைக் குடியுரிமை பற்றிப் பேசவில்லை. ஆனால் அது ஒரு குறை அல்ல. ஏனெனில் அதைப் பயன்படுத்தித்தான் நற்செய்திப் பயணங்களை மேற்கொண்டார்; நகரங்களில் சபைகளை நிறுவினார். இறுதியில் தனது இலக்கான உரோமைக்கும் சென்றார். ஆனால் இந்த உரோமைக் குடியுரிமையை தன் சுய ஆதாயத்திற்காகப் பயன்படுத்தவில்லை.
கிறிஸ்துவையே ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றை யும் குப்பை எனக் கருதிய பவுலின் மனமாற்றம் நமக்குப் படிப்பினையே! சாதி, நிறம், மொழி, இனம், பணம், பதவி, அனுபவம், ஆள்பலம்... போன்ற இவை எல்லாம்தான் பாலம் என்று நாம் கருதுகிற மற்றவற்றைவிடக் கொடியவை. அவை நம்மை இக்காலத்தில் சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்கள் ஆகும். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள நாம் இவற்றை இழக்கத் துணிவோமா?                                                                         (தொடரும்)

Comment