No icon

அருள்பணி. ஜான் பால், துணை ஆசிரியர்

மூவொரு இறைவன் பெருவிழா நீமொ 8:22-31, உரோ 5:1-5, யோவா 16:12-15

திருப்பலி முன்னுரை

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவினைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்து முழுமையான கடவுள்தன்மை கொண்டவர் அல்ல; மாறாக, அவர் பாதி மனிதத்தன்மையும், பாதி இறைத்தன்மையும் கொண்டவர் என்றெழுந்த தப்பறைக் கொள்கையை வேரறுக்க உண்டானது தான் இந்த மூவொரு இறைவன் பெருவிழா. தொடக்க காலங்களில் இவ்விழா பரவலாக கொண்டாடப்படவில்லை என்றாலும், 14 ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவான் அவர்கள், மேற்கத்திய கத்தோலிக்கத் திரு அவை முழுவதும் இவ்விழாவினை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் தூய ஆவியார் பெருவிழாவிற்கு பிறகு, மூவொரு இறைவன் பெருவிழாவினை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.இறைவன் ஒருவர்தான். ஆனால், அவர் ஆள்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவியார் என மூவராக இருக்கிறார். இவ்வாறு, மூவராக இருந்தாலும், இம்மூவரும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மையை கொண்டிருப்பதால் நாம்

மூவொரு இறைவன் என்றழைக்கிறோம். இவ்வுலகம், திரு அவை, திரு வழிபாட்டு கொண்டாட்டங்கள் என, எதுவாக இருந்தாலும், தந்தை கடவுள் படைத்து பராமரிப்பவராகவும், மகன் பாவங்களிலிருந்து மீட்கும் மீட்பராகவும், தூய ஆவியார் அனைத்தையும் அர்ச்சித்து புனிதபடுத்துபவராகவும் இருக்கிறார். இன்று நமது உடலானது, இம்மூவொரு இறைவன் சந்திக்கும் இல்லமாக இருக்கிறது. தந்தை கடவுள் நம்மை படைத்து பராமரித்து வருகிறார். வார்த்தையான இறைமகன் நமது செவிகளிலும், நாவிலும் குடிகொள்கிறார். திருவருட்சாதனம் வழியாக தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகிறார். இம்மூவொரு இறைவனையும் பெற்றிருக்கும் நாம் மொழி, இன பாகுபாடுகளைக் களைந்து, ஒரே கடவுளின், ஒரே திரு அவையின், ஒரே பங்கின் இறைமக்களாக வாழ்கிறோமா என சிந்தித்தவர்களாக இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

பூவுலகு உண்டாகும் முன்பே, பூவுலகில் உயிரினங்களும், கடல்களும், ஊற்றுகளும், மலைகளும் உண்டாகும் முன்பே நான் இருந்தேன். ஆண்டவர் படைத்த அனைத்திற்கும் நான் அவரோடு சிற்பியாக இருந்தேன் என்று, இறைஞானம் கூறுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் நமது ஆழ்ந்த நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறுகிறோம். அதனால் கடவுளோடு இணைக்கப்பட்டு அருள் நிலையை அடைகிறோம். இந்த அருள் நிலையில் துன்பத்தில் கூட மகிழ்ச்சி கொள்கிறோம் என்று கூறும் புனித பவுலடியாரின் அனுபவங்களை இவ்விரண்டாம் வாசகத்தில் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. விண்ணையும், மண்ணையும் படைத்தவரே! மூவொரு இறைவனாகிய உமது விழாவினைக் கொண்டாடும் உமது  திரு அவையும், திருப்பணியாளர்களும் உம்மைப்போலவே ஒற்றுமையோடு செயல்பட்டு, உமது மக்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞானமே உருவானவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், பதவிகளையும், பட்டங்களையும், செல்வங்களையும் எதிர்பார்த்து ஆளாமல், உம்மிடமிருந்து விலைமதிக்க முடியாத ஞானத்தை பெற்று, நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்லவரே! எங்கள் பங்கு தந்தையையும், பங்கு மக்களையும், பங்கில் வசிக்கும் குடும்பங்களையும் ஆசீர்வதித்து, எங்களுக்காக நீர் வகுத்திருக்கிற திட்டத்தை புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு வாழ்ந்திட தூய ஆவியார் துணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.  இரக்கமுள்ளவரே! இந்த மாயை உலகில், எங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு, உம்மை விட்டு விலகிவிடாமல், உம்மையே பற்றிக்கொண்டிருக்க, எங்கள் நம்பிக்கையை நீர் ஆழப்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அதிசயங்கள் செய்பவரே! தீராத உடல், உள்ள நோயினால் அவதியுறும் அனைவரையும், நீர் தொட்டு ஆசீர்வதித்து, எவ்வித துன்பத்தையும் தாங்கக்கூடிய மனதிடனை, அவர்களுக்கு நீர் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment