No icon

கலையருவி இராசி. சேவியர், கரிசல் குளம், மதுரை

தவக்கால சிந்தனை – 2

  1. மண்ணின் மைந்தர்கள்

 மண் கடவுளின் கலைப் பொருள். உயிர்களின் கருப்பை. மனிதனைப் படைக்கத் தேர்ந்தெடுத்த மூலப் பொருள். இது அற்பப் பொருளல்ல; இது ஒரு அற்புதப் பொருள். அறப்பொருள்.

மண்ணுக்கு உயிர் உண்டு. உயிருள்ள பொருளால்தான் மற்றொரு உயிரைப் படைக்க முடியும். மண் சுவாசிக்கிறது. ஒரு பிடி மண்ணை அள்ளி நீரில் போட்டால், நீர்க் கொப்புளங்கள் உண்டாவதைக் காணலாம். இதன் மூலம் மண் சுவாசிப்பதைக் காண முடியும்.

மண் உரங்களை உண்கிறது. இதை ஜீரணித்து, கழிவுகளை வெளியேற்றுகிறது. நீர் அதற்கு இரத்த ஓட்டமாகிறது. மனிதரை விட, மண் உயர்ந்தது என்றே சொல்லலாம். மனிதன் அமிர்தத்தைச் சாப்பிட்டால் கூட, அதை மலமாக்கி விடுவான். ஆனால், மண் மலத்தைச் சாப்பிட்டால் கூட, அதை மலராக்கக்கூடிய தன்மையுள்ளது. மனிதனைப்போல, மண்ணுக்குள் நிறங்கள் உண்டு.

நிறங்கள் மட்டுமல்ல; வண்டல், கரிசல், பாறை மணல், செம்மண், களிமண், உவர்மண் போன்ற குணங்களும் உண்டு. மனிதனைப்போல, ஒன்பது வகைகள் உண்டு.

எண்ணெய் வகைகள், தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிமங்கள் இந்த மண்ணிலிருந்துதான் வருகின்றன. இந்த மண்ணுக்குள் புரோட்டோசோவா, பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறிய பூச்சிகள் என மிகப்பெரிய பல்லுயிர்கள் இருக்கின்றன. எனவேதான், மண்ணை கடவுள் தேர்வு செய்தார். சர்வ சக்தியுள்ள மண்ணை உடலாகச் செய்து, அதற்கு தன் உயிர் நீரை ஊற்றினார். இதைத்தான், (தொடக்க நூல் 2:7 இல் “அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவர் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்என்கிறது.

என்றும் படைப்பின் சிகரமாக மனிதன் இருப்பதற்குக் காரணம், அவன் உருவாக்கப்பட்ட விதம்தான். படைப்புகளையெல்லாம் தம்முடைய ஆணைகளுக்கு இணங்க, வெவ்வேறு விதமாகப் படைத்தார். ஆறறிவுள்ள மனிதரை மட்டும்தான் ஆண்டவர் தம் அச்சாக, அசலாக, சாயலாக படைத்தார். அனைத்துயிர்களையும் அடக்கி ஆளும் சக்தியுள்ளவராய் படைத்தார்.

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை. நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம் (திபா 24:1) என்ற போதிலும், மனிதனுக்கே அனைத்தையும் தாரை வார்த்து கொடுத்தார். அதுமட்டுமல்ல; இந்த மண்ணில் “இறந்து போய் மண்ணில் உறங்குகிற பலர் எழுந்திருப்பர் (தானி 12: 1-3) என்கிறபோது, இந்த மண் நாம் இறந்த பிறகு, உயிர்த்தெழும் காலம் வரை, நம் உடலைப் பாதுகாக்கும் பாசறையாகவும் இருப்பதாக நாம் உணர முடியும்.

ஆக, இந்த மண் நாம் வாழும்போது, நமக்கு புவியிடமாகவும், வாழ்விடமாகவும் இருப்பதோடு, நாம் இறந்த பிறகு, உயிர்த்தெழும் காலம் வரை நம்மைப் பாதுகாக்கவும் செய்வதால், நாம் என்றும் மண்ணின் மைந்தர்களாக இருப்போம்.

இந்தத் தவக்காலத்தில் நம்மை மண்ணின் பெயராலே மதம், சாதி, இனம், மொழியால் பிளவு படுத்தும் தீய சக்தியிடம் எச்சரிக்கையாக இருப்போம்.

சமரசம் வாழும் மண் நமக்கு சமத்துவத்தையும், ஆன்மாவிற்கான பூரண அமைதியையும் வழங்கட்டும்.

Comment