No icon

செபம் தவம் தானம்

முன்னுரை: 
வழிபாட்டுக் காலங்களில் சிறந்தது தவக்காலம். இது மனம் திருந்தி முனைப்புடன் ஆண்டவரை அணுகி வரும் மனமாற்றத்தின் காலம். பாவங்களுக்காக வருந்தி கண்ணீருடன் கடவுளை நோக்கும் காலம். இருள் மறைந்து அருள் மலரும் காலம். இந்த ஒப்புரவுக் காலத்தில் நாம் இறைவனோடு, நம்மோடு, பிறரோடு ஒப்புரவாக வேண்டும். இறைவனோடு ஒப்புரவாகச் செபம் அவசியமாகிறது. நம்மோடு ஒப்புரவாக தவமுயற்சிகள் தேவை. சமூகத்தோடு ஒப்புரவாக அன்புச் செயல்களில் (தானம்) ஈடுபட வேண்டும். இத்தகைய ஆன்மிகப் பயிற்சிகள் நாற்பது நாள் தவக்காலத்திற்கு அருமையானவை. செபம், தவம், தானம் என்னும் அரிய கொடைகளைத் தூய உள்ளத்துடனும், நேரிய மனப்பாங்குடனும் கடவுளின் மகிமைக்காக நாம் பயன்படுத்த வேண்டும். இவை நமக்கு ஆன்ம பலம் நல்கி இறைவனில் நிறைவைக் காண வழி காட்டுபவை. மண்ணால் பிறந்த மனிதன் மீண்டும் மண்ணுக்கே திரும்புவான். ஆனால் மறுவுலக வாழ்வுக்குச் சொந்தமாவான். இதை உணர்த்தும் வகையில் சாம்பலோடு தவக்காலம் தொடங்கி, பாஸ்கா திருவிழிப்பில், ஒளியோடு தவக்காலம் நிறைவு பெறுகிறது. இந்த முப்பெரும் அருள் கருவிகளால் நம் அகவாழ்வை, உண்மையில் அலங்கரிப்போம். இத்தவக்காலம் நமக்குப் புதுவாழ்வை நோக்கிப் பயணிக்கும் புனித கால மாகட்டும். மனித மாண்பைப் போற்றி, நிலைவாழ்வை நினைவில் கொண்டு, இறையாட்சிப் பாதையில் பயணிப்போம். இரக்கச் செயல்களில் நோன்பின் மாண்பு. உரக்க ஒலிக்கச் செய்வோம். இயேசுவின் ஒளி நம்மில் ஊடுருவி, நம் பாவ இருள் மறைந்து போகும். தியாக வாழ்வில் புடம்போட்ட தங்கமாவோம். மன்னிப்பை வழங்கி, கடவுளின் மன்னிப்பைப் பெற இத்தவக்காலம் நமக்கு உதவட்டும். 
செபம்:
செபம் என்பது கடவுளைப் பின்பற்றும் முறை. நாம் பெற்ற மாற்றத்தையும் பயனையும் கடவுளிடம் சொல்லி உரையாடுவதை முதன்மைப் படுத்துவது. செபம் நம் பாவ நிலையை மாற்றும் கருவி. செபம் நம்மை இன்னும் அதிகமாக இறைவனை அன்பு செய்கிறவர்களாக மாற்றும். செபமே நம் வாழ்வாக வேண்டும். நன்னெறி வாழ்வு, செப மனிதரை அடையாளப்படுத்தும். செபம் கடவுள் மனித உறவை வலுப்படுத்தி அவரில் நிலைத்திருக்கச் செய்கிறது. நாம் வேண்டுவதற்கும், நினைப்பதற்கும் மேலாக, அனைத்தையும் செய்ய வல்லவர் நம் கடவுள். நமக்கு என்ன செய்ய
வேண்டுமெனக் கேட்கிறவராய் இருக்கிறார் (மத் 20:32) உண்மை யாய் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் இருக் கிறார் (திபா 145:18). நமது
துன்பங்களை, செபத்தால் அவர் பாதத்தில் இறக்கி வைக்கும்போது அதிசயமான அவர் பாதுகாப்பு நமக்கு சாத்தியமாகும்.
இத்தவக் காலத்தில் நமது செபத்தில் நன்மைகள் செய்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். புகழ்பாக்களால் வல்லவரைப் போற்று வோம். சமூக அக்கறையில், பரிந்துரைச் செபங்களை அவர் பாதத்தில் வைப்போம். அன்னாவின் நம்பிக்கை, தியாகம் நிறைந்த செபம், நமதாக வேண்டும். நூற்றுவர் தலைவரின் செபம்போல தாழ்ச்சியில் ஒளிர வேண்டும். நம் செபம். இயேசு கற்பித்த செபத்தைக் கருத்தாய், அடிக்கடி சொல்ல வேண்டும். வரித்தண்டுபவரைப்போல, மனதுருக செபிக்க வேண்டும்.
இத்தவக்காலத்தில், செப வாழ்வு வாழ்வோம். தொடர்வோம். சோதனைகளை வெல்ல செபத்தை நாடுவோம். அன்னை மரியாவின் விடுதலைக் கீதம் பாடி, சமதர்ம சமுதாயம் அமைய, ஆண்டவரிடம் மன்றாடுவோம். நற்கருணை சந்திப்பில் ஆக்கமும் ஊக்கமும் பெறுவோம். கூடிச் செபிக்கும் குடும்பம் என்னும் குட்டித் திருச்சபை என்றும் வாழும். 
தவம்
நோன்பு என்னும் தவம் மேற்கொள்வது நம் உள்ளத்தை திருத்திக் கொள்வதற்காகவேயாகும், நமது கரடுமுரடான பாதைகளை, சிந்தனைகளை சீர்படுத்த இத்தவக்காலம் உதவ வேண்டும். நோன்பின் வெளிவேடம் தவிர்த்து இறைவேடம் தரிக்க வேண்டும்.
மக்கள் பார்வைக்காகச் செய்வதல்ல நோன்பு, மனிதர் அறியாது மறைவாய் இருக்கும் கடவுளுக்கு மட்டும் தெரிவதே நோன்பு (மத் 6:4). நமது சுகவாழ்வு இறைவனில் ஒப்புரவு ஆவதே தவம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைகளால் மன அழுத்தம் கொள்ளும் மனிதன், இறையருள் பெற்று அமைதியாக நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே இத்தவக்காலத்தின் நோக்கம். குறிக்கோளை முன்னிருத்திச் செயல்படும்போது எதிர்கொள்ளும் சவால்களையும், அதனால் ஏற்படும் துன்பங் களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் நற்செய்திப் பணியில் தன்னலம் துறக்க வேண்டும் (லூக்கா 9:3). தீமை செய்வோரை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும். வாழ்வு தரும் வார்த்தை நமக்குச் சொந்தமாகட்டும். நாம் சாகும் வரைக் கடவுள் நம்பிக்கையோடு வாழ வேண்டும் (திவெ 2:10). ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை, அடிமைத்தனத்தை அகற்றுவது, கொடுமைத் தளைகள் அவிழ்ப்பது, பசித்தோரைப் புசிக்கச் செய்வது, வறியவர் பிற இனத்தாரை நேசிப்பது, உடையற்றோரை உடுத்துவது போன்ற செயல்பாடுகளே, நாம் உண்மையாகக் கடைபிடிக்க வேண்டிய நோன்பு (எசா 58:3-7). சுய சோதனையில் ஈடுபட்டால் உண்மை நமக்கு விளங்கும். சுயநலச் சார்வுடைய நமது தீய இச்சைகளை வேரறுக்க கவனம் செலுத்துவோம். இத்தவக் காலத்தில், இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்க முனைப்புக் காட்டுவோம். கையூட்டு தவிர்த்து, ஊதியமே போதுமென வாழ்வோம். 
தானம்
சமூகத்தோடு ஒப்புரவாக அன்புச் செயல்களில் ஈடுபடுவதே தானம். தேவையில் இருக்கிற எவரையும் நாம் அயலாராகவும், நண்பராகவும், கருதி நல்ல சமாரியன் போல உதவ வேண்டும். நாம் வாழ்நாளெல்லாம் அன்பு, நீதி, இரக்கம், ஈகை போன்ற மனித நேய மதிப்பீடுகளை முன்னெடுத்து முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
இத்தவக் காலத்தில், தான தருமங்கள் களைகட்டச் செய்வோம். ஒருவர் மற்றவரைச் சார்ந்து, உதவி செய்து, நிறைவாக வாழவே, கடவுள் நம்மைப் படைத்தார். படைப்பின் முழுமையைப் பகிர்வில் வைத்துள்ளார் (லூக்கா 6:30). நாம் பொதுநலம் பேணுவோம்.
யார் நன்மை செய்தாலும் அதைப் பாராட்டும் பண்பை நம்மில் வளர்ப்போம். நல்லவர்களுடைய தியாகம் இவ்வுலகை வாழ வைக்கிறது. மன்னிப்பில் கணக்குப் பார்க்காமல், தாராளமாகப் பிறரை மன்னிப்போம். அயலாருக்குச் செய்யும் அன்புச் செயல்கள் நம்மை இறைத்தன்மையில் வளர்க்கும். இயேசு வழியில் தொண்டாற்றும் தலைவர்களாவோம். (மத் 20:26). மீட்புத் திட்டத்தில் தன்னையே அர்ப்பணித்த அன்னை மரியாளைப்போல நாமும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற உறுதிகொள்ள வேண்டும். தனது உடலையும், இரத்தத்தையும் நமக்குத் தானமாகக் கொடுத்த இயேசு வழியில், இரத்த தானம், கண்தானம், உடலுப்புத் தானம் இவற்றைச் செய்ய முன்வருவோம்.
தியாக வாழ்வில் இன்பம் காண்போம். ஈதல் இபைட வாழ்வோம். உறவுகளை ஊட்டி வளர்ப்போம். உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வோம். சுயநலம் கடந்து, சமத்துவ உலகில் சுடர்விடத் துணிவோம். பணி வாழ்வில் கரைந்து போவதே தீரமான சீடத்துவ வாழ்வு. இயேசுவின் தோழனாக, அவரது வழியே சிறந்தது. 
முடிவுரை:
இயேசு காட்டிய வழியில் நாம் ஒவ்வொரு வரும் பகிர்ந்து, அன்பு செய்து பயணிப்போம். நிறைவாழ்வைப் பெறுவோம். நமது வாழ்வு எல்லாருக்கும் எல்லாமுமாக நல்லவற்றை அள்ளித்தெளித்துக் கொண்டே செல்லும் ஆற்றுநீரைப் போலத் தொடர்ந்து ஓடட்டும்.
தவக்காலத்தில் அறிவு ஜீவிகளாக அல்ல, மாறாக ஞானத்தின் இருப்பிடமாக உருமாறுவோம். திருப்பலி, திவ்ய நற்கருணை, சிலுவைப்பாதை போன்ற பக்தி முயற்சிகள் அவசியம் தேவை. இவை நம்மை விடுதலையின் அன்புச் செயலுக்கு இட்டுச் செல்வன.
இறைவார்த்தையின் துணையுடன்,
இத்தவக்காலத்தில் நாம் சாத்தானை விரட்ட
இயலும். பாவ நாட்டங்கள், பாவச் சூழல்கள், தீவினை
தரும் செயல்கள், உடலையும் ஆன்மாவை யும், சீரழிக்க விடாமல், முறியடிக்க நம்மால் முடியும். வெளிவேடம் தவிர்த்து, அக வாழ்வில் நாம் யார்? நமது இறைவார்த்தை வெளிச்சத்தில் சிந்தித்துச் செயல்படுவோம்.
தேவைக்கு அதிகமாக வைத்திருப்ப வன். எவனும் திருடன் என்றார் காந்தியடிகள். தான, தர்மச் செயல்களில் தணியாத ஆர்வம் கொள்வோம். சிலுவை இல்லாமல் சிம்மாசனம் கிடையாது. துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை. பாடுகள் இல்லாமல் பரலோகம் செல்ல முடியாது. இறை ஞானத்தை மேலாக நாடுவோம்.
தேடிவந்து நம்மை மீட்கும் கடவுளை வலிந்து பற்றிக் கொள்வோம் (இச 31:6) இறைவன் சாயலில் உருவாக்கப்பட்டுள்ள நம் ஒவ்வொருவரையும், இத்
தவக்காலத்தில் இறைவன் புதுப்பிப்பவராக. புது வாழ்வுக்கு நாம் கிறிஸ்துவுடன் உயிர்த்தெழுவோமாக.

Comment