No icon

சுயம் கடந்து சுற்றம் காண...

பிறருக்கு இடறலாகத் தென்படுவேன் என்றாலும் உண்மை உரைக்கத்தான் வேண்டும். திருவருகைக் காலம் அல்லது தவக் காலம் மற்றும் பாஸ்கா காலம் - இவற்றில் எதைக் கொண்டாட விரும்புவாய் என்ற கேள்வி கேட்கப்பட்டால், திருவருகைக் காலமே என் விருப்பம் என்று கூறி கை உயர்த்துபவர்கள் இருந்தால் அவர்களில் முதல்வன் நானாகத்தான் இருப்பேன். கிறிஸ்தவ மறைபொருள் பொதிந்த தவக் காலத்தையும், பாஸ்கா காலத்தையும் கொண்டாடுவதில் ஏன் இவ்வளவு தயக்கம்? தெரியவில்லை. 
ஒருவேளை விளையாட வேண்டிய வயதில் வாரந்தோறும் சிலுவைப்பாதை, ஒப்புரவு, ஒருசந்தி செய்யப் பணிக்கப்பட்டதால் இருக்கலாம். அத்தோடு சிறுவர்கள் தியானம், தவக்காலத் திருயாத்திரை, உச்சிவெயிலில் பெரிய சிலுவைப்பாதை, அமைதி ஆராதனை, எங்கு நோக்கினும் வழிபாடு முழுவதும் நம் இயலாமையைக் கண்முன்நிறுத்தி இறையிரக்கம் வேண்டி பாடப்படும் திருவழிபாட்டு ‘சோகப்’ பாடல்கள், திருவிழிப்புத் திருப்பலி என சிறுவர்கள் விரும்பாத அனைத்தும் ஒருங்கே இருந்ததாலோ என்னவோ, ஒரு சிறுவனாக தவக்காலத்தின்  மீதான ஈர்ப்பு என்னுள் குறைந்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. 
இதுகுறித்து என்னுடைய ஆன்ம ஆலோச கரிடம் கூடப் பேசியிருக்கிறேன். ‘கிறிஸ்தவ வாழ்வின் மாட்சியை அறிவதற்குத் தவக்காலம் போல சிறந்த நாள்கள் கிடைக்காது’ என்று அவர் உரைத்த அறிவுரையின் பேரில் திறந்த மனதோடு தவக்காலத்தை அணுகியபோது ஓர் உண்மை துலங்கியது. தவக்காலம் என்பது நான் எண்ணிக்கொண்டிருந்தது போல சுயசுத்திகரிப்பு மட்டுமல்ல; அது சுயம் கடந்து சுற்றம் நோக்கும் தேடல். ஆமைபோன்று சுயத்தோடு நம்மை உள் இழுத்துக்கொள்வதல்ல; ஆக்டோபஸ் போல சுற்றம் தேடி நம்மை விரித்துக் கொள்வது. 
 இந்தப் புரிதல் என்னுள் மலர இயேசுவின் வார்த்தைகளே எனக்கு ஒளிபாய்ச்சின. மத்தேயு நற்செய்தியின் ஆறாம் அதிகாரத்தின் முதல் வார்த்தை தொடங்கி அந்த அதிகாரத்தின் இறுதி
வரை ஆண்டவர் இயேசு உரைக்கும் வார்த்தைகள், கிறிஸ்தவ அறத்தை மறுவாசிப்புச் செய்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவ அறத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இயேசு முன்வைக்கும் ஈகை, இறைவேண்டல், ஒறுத்தல், விண்ணுலக செல்வம் நாடுதல், கவலையின்மை என்ற ஐந்து பரிமாணங்களும் கிறிஸ்தவ அற
வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைப்பு விடுக்கின்றன என்றால் அது மிகையாகாது. ஆனால் தவக்காலத்தின் அடிநாதமாக இயேசு முன்வைக்கும் இவை அனைத்தையும் சுயசுத்திகரிப்பு என்ற பார்வையில் மட்டும் அணுகும்போது ஓர் ஆபத்துக் காத்திருக்கிறது. நம்மில் பலரும் தவக்காலம் என்றதும் சுயத்தை
மட்டும் உற்றுநோக்கி, சுயத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக இதை மதிப்பிட்டுவிடும் தவற்றைச் செய்துவிடுகிறோம். ஆனால் பிறர்நலம் விடுத்து சுயத்தைச் சுற்றிக் கட்டமைக்கப்படும் எதுவும் ஆன்மிகமாகாது.
‘இறைவேண்டல் செய்வதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்’; ‘என் ஒறுத்தல் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்’; ‘தானம் செய்யும் என் திறனை இரட்டிப்பாக்க வேண்டும்’ என்றெல்லாம் நாம் செயல்படுத்த முனையும் அனைத்தும், சுய மேம்பாடாக மட்டும் இருந்துவிட்டால், அதுதான் கிறிஸ்தவம் உணர்த்தும் சாரம் என்று நாம் தவறாக எண்ணிவிட்டால், இதுநாள்வரை கிறிஸ்தவம் என்பது இதுதான் என்று வரையறை செய்து மீண்டும் தவறையே செய்துவிடுகிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சுயத்தோடு முற்றுப்பெறும் எதுவும் கிறிஸ்தவம் ஆகாது. சுயம் கடக்கும் திறனற்ற எதுவும் ஆளுமை மேம்பாடு அல்லது ஆளுமை உருவாக்கம் மட்டுமே. பிறரன்பே கிறிஸ்தவத்தின் இலக்
கணம். (ஊhசளைவயைnவைல ளை nடிவ யீநசளடியேடவைல-னநஎநடடியீஅநவே; வை ளை வாந டிவாநச-டிசநைவேநன டடிஎந). இந்தப் புரிதலின் பின்புலத்தில் மத்தேயு ஆறாம் அதிகாரம் முன்மொழியும் தவக்காலத்திற்கான பண்புகளை அலசிப்பார்ப்பதே நலம் பயக்கும். 
ஈகை:
நம்மிடமிருப்பதைக் கொடுப்பது மட்டு மல்ல; நம்மைக் கொடுப்பதும் ஈகையே பணமும், பொருளும் ஈவதே ஈகை என்ற பழமைச் சிந்தனையைப் பரணில் தூக்கி யெறிந்து விட்டு, மக்களின் வாழ்வுக் கும் விடுதலைக்கும் நம் சிந்தனையாலும், செயலாலும் பங்க ளிக்க முனையும் எதுவும் ஈகையே என்ற புதிய பார்வையை நம
தாக்க வேண்டும். எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு முன் னேற்றத்தில் நம் பங்கு எதுவாக இருப்பினும், எவ்வளவாக இருப்பினும், அது ஏழைக் கைம்பெண்
ணின் காணிக்கைபோல ஆண்டவரு டைய பார்வையில் மிக மதிப்புக்குரிய கொடை. நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் ஈகை கடந்து, நம் வாழ்வுப் பங்களிப்பே ஈகையாகட்டும்.
இறைவேண்டல்:
இறைவேண்டல் எப்படி தவக்கால அறமாக முடியும்? இயேசுவின் காலத்தில் பரிசேயர், சதுசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்
களுக்கு இறைவேண்டல் என்பது விதிக்கப்
பட்ட கடமை. அவ்வளவே! கடமைக்குச் செய்யப்பட்ட இறைவேண்டலில் கடவுளே புறந்தள்ளப்பட்டதுதான் அதிசயம். கடவுளே புறக்
கணிக்கப்பட்ட இறை வேண்டலில் மாந்தநேயத்திற்கு ஏது தளம்? இயேசு உணர்த்த விரும்பும் இறை
வேண்டல் முற்றிலும் மாறுபட்டது. இறைவேண்டல்
என்பது இறைவனோடு நாம் கொள்ளும் ஆழமான
உரையாடல். இந்த உரையாடலில் நம்மைச் சார்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதரும், அவருடைய தேவைகளும் அங்கமாக வேண்டும். அடுத்தவரை நோக்கி நம் சிந்தனையும், வேண்டலும் நீளும்
போதெல்லாம் இறைவேண்டலும் ஓர் அறச்செயலே. 
ஒறுத்தல்:
நம் ஒறுத்தலின் பயன் பிறருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். ஒருசந்தி இருக்கும் ஒரு குடும்பத்தின் அன்றைய சேமிப்பு பிறருக்கு நாம் கொடுத்து மகிழ வேண்டிய பங்களிப்பு. பிறருக்கு உவந்து மகிழும் மனமே ஒறுத்தல் முயற்சிகளின் உள்ளீடு. எனவே ஒறுத்தல் என்பது உடலை முன்னிறுத்திய செயல் என்றாலும், அது உள்ளடக்க வேண்டிய ஈகைப் பண்பு உள்ளத்தை முதன்மைப்படுத்துவதே.  
விண்ணகச் செல்வம் நாடுதல்:
‘அறிவற்ற செல்வன்’ (லூக் 12: 16-21) உவமை உணர்த்துவது போன்று நம்மில் பலரிடம் இரண்டு விதமான குறைகள் உள்ளன. முதலாவது, நம்மைக் கடந்து பார்க்கும் திறனற்று இருப்பது (றுந உயnnடிவ ளநந நெலடினே டிரசளநடஎநள); இரண்டாவது, ‘இந்த’ உலகத்தைக் கடந்து பார்க்கும் திறனற்று இருப்பது (றுந உயnnடிவ ளநந நெலடினே வாளை றடிசடன). ஆபத்தான இந்த இரண்டு மனநிலைக்கும் எதிரானதே கிறிஸ்தவம். சுயம் கடந்த பார்வை வாய்க்கப்பெற்ற ஒரு
வருக்கு, இவ்வுலகம் கடந்தும்
பார்க்கும் திறன் வாய்க்கப்
பெறும் என்பதே உண்மை.
இந்த உலகத்தில் நாம் வாழக் கொடுக்கப்பட்
டிருக்கும் நாள்கள் அனைத்தும் மறுவுலக வாழ்வுக்கான தயாரிப்பின் காலம் என்பதை மறந்துவிடுதல் கூடாது. 
கவலையின்மை:
கவலை கிறிஸ்தவத்திற்கு எதிரானது. வாழ்வைக் கொடையாகக் கொடுத்த கடவுள், வாழ்வுக்குத் தேவையானவற்றையும் தருவார் என்ற ஆழமான நம்பிக்கைக்கு எதிரானது கவலை. கடவுளை மறுத்து வாழ்பவர்களுக்குத்தான் கவலை இருக்க வேண்டும். கடவுளை அப்பா என்று அழைத்து, அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு கவலை இருக்கக்கூடாது. ‘இதுவரை நம்மை வழிநடத்திய இறைவன் இனியும் வழிநடத்த மாட்டாரா?’ என்ற அடிப்படை அறிவைக் கூடத் தகர்த்தெறிவதால்தான் கவலை என்பது கிறிஸ்தவர்களுக்கு இருக்கக்கூடாது என்கிறார் இயேசு. இந்த விதங்களில் கவலை என்பது இரையிரக்கத்திற்கும், இறையாட்சிக்கும், இறைவன் கொடுத்த நம் திறன்களுக்கும் எதிரானது. கவலையின்மை என்பது நம் இறைநம்பிக்கையின் ஆழம்; எனவே அது ஒரு வரம். 
கவலையின்மையை கிறிஸ்தவர்களின் பண்பாக முன்வைக்கும் ஆண்டவர் இயேசு, பிறர் மீது நாம் கொள்ளும் ‘கவலையை’ - கரிசனையை - கிறிஸ்தவர்களின் முகவரியாக மாற்றிவிடுகிறார். தனிமனிதர் என்று வரும்போது கவலையை அவநம்பிக்கை என்று கடிந்துகொள்ளும் இயேசு, அடுத்தவர் எனும்போது அவர்கள் மீதான நம் கவலையை, கரிசனையை இறையாட்சியின் பண்பாகப் பார்க்க அழைப்பு விடுக்கிறார். 
இவ்வாறு மத்தேயு ஆறாம் அதிகாரம் முன்வைக்கும் பிறரன்புக் கூறுகளெல்லாம் தவக்
காலம் தாங்கிப்பிடிக்கும் கிறிஸ்தவ அறநெறிகள். தவக்காலம் வெறும் ஆன்மிக எழுச்சிக்கான காலம் மட்டுமன்று; அது பிறரன்பை ஆக்கப்பூர்வமான விதங்களில் பறைசாற்ற அறைகூவல் விடுக்கும் காலமும்கூட. பிறரன்புதான் இறையறம் என்பதே மீட்பின் வெளிப்பாடு.
அன்று வீழ்ந்து கிடந்தவர்களை மீட்டெடுத்த இறைவனின் பாஸ்கா, எளியோர் விடுதலை நோக்கிய பாஸ்கா கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கும் நிதர்சனம் அறிந்து தவக்காலத்தை அணுகிடுவோம். புதிய மனிதர்களாய் ஆண்டவரோடு உயிர்ப்போம்.

Comment