No icon

அருள்பணி. Y.S. யாகு சே.ச.

உழவரின் தோழர் இறைஊழியர் லூயி மரி லெவே

உழவனில்லா உலகம் ஒருபாலைவனம் ஆய

தொழில்களுக்கும் உழவுதானே மூலதனம்

 என்றான் ஒரு இளங்கவிஞன். ஏர்முனையும் போர் முனையும் திரு நாட்டுக்கு இரண்டு கண்களாக இருப்பதால்தான் ஏர்பின்னது உலகம் என்றார் திருவள்ளுவர்.

கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசையிலிருந்து புதிய இந்தியா எழட்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இந்த உழவனுக்கும் தந்தை லெவே அவர்களுக்கும் ஒரு மகத்தான உறவை உண்டாக்கினார்இறைவன். மண்ணை மணிகளாக்கும் விவசாயிகளை மானசீகமாக நேசித்தார் லெவே என்றால் அதற்குக் காரணம் அவரும் விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி என்பதால்தான்.

1884 ஏப்ரல் 6 இல் தன்னுடன் பிறந்த ஒன்பது பேர்களுடன், பத்தாவது பிள்ளையாகப் பிறந்தார் தந்தை லெவே. அது ஒரு ஆண்டவரின் பரிபூரண ஆசி பெற்ற, எளிய மற்றும் பெரிய திருக்குடும்பம். அந்தக் குடும்பத்தை செம்மையாக வழிநடத்த வாழ்வாதாரமாக இருந்தது விவசாயத் தொழில்தான். விவசாயம் செய்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் தான் லெவே குடும்பம் தன்மானத்தோடு வாழ்ந்தது.

கிராமங்களில் ஒழச்சமாடு ஓய்வெடுக்க ஊருக்கு போச்சாம். அதை வரவேற்க ஏரும், கலப்பையும் எதிரே வந்துச்சாம்என்று பழமொழி செல்வார்கள். அதேபோலத்தான் 1921 இல் தந்தையவர்கள் ஆண்டாவூரணிக்கு பங்கு பணியாளராய் பொறுப்பேற்க வந்தபோது, ஏழை எளிய விவசாயப் பெருங்குடி மக்கள் அவரை குதுகலமாக வரவேற்றார்கள்.

பொறுப்பேற்ற நாள் முதல் தந்தை லெவே அவர்கள் ஒரு மரத்தின் வேரும் விழுதும் அந்த மரத்தைத் தாங்குவதுபோல, மக்களை வழிநடத்தினார். தூய ஆவியானவர் மக்களின் உணர்வுகளில் தந்தை லெவேயைக் கலக்க வைத்தார். நடந்து வரும் நந்தவனம் போன்ற தமது தாயகத்தைவிட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கருவேலம் மரங்களும், கரடுமுரடான சாலைகளும், மாசுபடர்ந்த தூசு நிறைந்த சுற்றுச் சூழல் மத்தியில் வாழும் சாமானிய விவசாய மக்களுடன் வாழக் கற்றுக்கொண்டார்.

மொழி புரியாமல் ஆண்டவர் அன்பு மொழியில் அம்மக்களுடன் பேசிப் பழகினார். உணவில் பழக்க வழக்கத்தில் அம்மக்களுடன் கைகோர்த்து நடந்தார். வசதி வாய்ப்பு, சாதி, மதம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் பாகுபாடின்றி எல்லாருக்கும் எல்லாமுமாகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவிய போட்டி, பொறாமை, வடக்கூர், தெற்கூர் என்ற தீண்டாமை சண்டை, சச்சரவுகளை செப தவத்தால் தவிடு பொடியாக்கினார்.

லெவே ஒரு போதும் பங்கு மக்களிடம் தனது கருத்தைத் திணித்ததில்லை. பங்கு மக்களின் தேவைகளை, விருப்பங்களை நிறை வேற்றுபவராகவே இருந்தார்.

மழை இல்லை சாமி, பயிரெல்லாம் வாடிப்போச்சு வானத்தை அண்ணாந்து பார்த்து கண்ணும் பூத்துப் போச்சு என்று சொன்னால் போதும், சற்றும் யோசிக்காமல் எல்லாரும் வாங்க என்று மக்களைத் திரட்டி அங்கேயே செபிக்கத் தொடங்கிவிடுவார். அதிசயமாக உடனே மழை பெய்துவிடும். அந்த மக்கள் சூது வினயம் இல்லாதவர்கள். விளைந்ததும் தானியமாகத் தருவதாகச் சொல்லி கடன் வாங்கி விடுவார்கள். விளைந்ததும் கடனுக்கு அளந்து கொடுத்துவிட்டு, பாதிநாள் பட்டினி பசியுமாக இருப்பதைப் பார்த்தால் அவர் மனம் தாங்காது. தன்னிடம் இல்லை என்றதும், வசதியுள்ளவர்களிடம் அவரே சென்று எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது என்று கேட்டு வாங்கி பசித்தோர் வயிற்றில் உணவாக மாற்றிவிடுவார்.

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13) என்ற பவுலடிகளாரின் கூற்றை முழுவதுமாக நம்பியிருந்தார். அவருக்கு வலுவூட்டும் சக்தியாக இருந்தது செபம் மட்டுமே. செபத்தின் மூலம்தான் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்வார். இதற்காக சோதனைக்குட்பட்ட போதெல்லாம் கதவு ஜன்னல்களை மூடிக் கொண்டு ஐந்து முடிச்சு சாட்டையால் தன்னை அடித்துக்கொள்வார். மணிகட்டிய மாட்டு வண்டியில்தான் இவர் கிராமங்களுக்கு பூசை வைக்க போவார். அவருடைய வண்டி மாடுகளுக்கு ஒவ்வொரு குடும்பமும் ஒரு கட்டு வைக்கோல் கொடுப்பார்கள்.

யார் வீட்டில் எது நடந்தாலும், அவர் பங்குப் பணியாளராக மட்டுமில்லை, குடும்ப உறவினராகவும் கலந்துகொள்வார். கிறிஸ்தவ மக்களைப் போல பிற மதத்தினரையும் நேசித்து, அவர்களுக்கும் உதவி செய்வார். பருவம் தவறாமல் மழை பெய்ய வேண்டுமென்றும்; விதைப்பதெல்லாம் நல்ல பயன்களைத் தரவேண்டுமென்றும் வேண்டிக்கொள்வார். பூச்சி, புழு, எலி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் சென்று மந்திரிப்பார். ‘நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன்’ (2 திமொ 1:12) என்ற பவுலடிகளாரின் வைர வரிகளை பனை ஓலைகளில் எழுதி வைத்திருப்பார். வயல் வெளிகளில் பூச்சி, எலித் தொல்லை இருப்பதாக மக்கள் தெரிவிக்கும்போது, அதை மந்திரித்த ஓலைகளை குச்சிகளில் செய்த சிலுவைகளில் கட்டி வயலின் மூன்று திசைகளில் கட்டச் செய்வார். எலியோ, பூச்சிகளே சிலுவையில்லாத 4 வது திசை வழியே தானாக வெளியே சென்றுவிடும். பல்லுயிர் பேணும் தந்தையின் பாங்கும் இங்கு நோக்கதக்கது.

நீ உன் ஆன்மாவை நேசிப்பது போல எல்லா உயிர்களையும் நேசி, உயிர்கள் அனைத்தின் மேலும் நம் ஆன்மா எப்போதும் நட்புக் கொண்டிருக்க வேண்டும்என்ற மகாவீரர் போல ஆடு, மாடு மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வந்தாலும், லெவே சாமி தான் மந்திரித்து புனித நீர் தெளித்து சுகப்படுத்துவார். மக்கள் விருப்பத்தின்படி, மாடுகள் நல்லவிதமாக கன்றுபோட வேண்டும் என்றும், பால் அதிகமாக கறக்கவேண்டுமென்றும் செபிப்பார்.

இருபத்திரண்டு ஆண்டு காலம் செபம், தவம் தானம், தர்ம பிரபுவாக, ஞானசித்தராக ஆண்டாவூரணி விவசாய மக்களின் ஆன்மீக சமூக மேம்பாட்டுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்தவர் தந்தை லெவே. ‘இயேசுவே அன்பின் அரசே உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்என்ற தாரக மந்திரத்தை விவசாயத் தோழர்களின் மூச்சுக் காற்றிலே கலந்து விட்டவர் லெவே சாமியாவார்.

குருவாகும் முன்பே மெய்யியல் படித்துவிட்டு நான்கு ஆண்டுகள் (1912-1916) பாளையங்கோட்டையில் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் விடுதி காப்பாளராக பணியாற்றினார். அந்தக் காலத்திலேயே தன் உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களில் நல்ல மழைக்காக, சுற்றுப்புறங்கள் மற்றும் இயற்கை வளங்கள், மாணவர்களுக்கு குளிக்க, குடிக்க தேவையான நீராதாரம் போன்றவைகளை தன் உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களில் இவர் குறிப்பிடத் தவறவில்லை. உழவரின் தோழர் சருகணியின் சகாப்தம் இறைஊழியர் லூயி மரி லெவே அடிகளார் இறைவனால் விரைவில் புனிதராக உயர்த்தப்பட வேண்டுமென்று, அவருடைய நினைவு நாளாகிய இன்று 21.03.2022 திரு இருதய ஆண்டவரிடம் உருக்கமுடன் வேண்டுவோம்.

Comment