No icon

வரலாற்றில் தவக்காலம்

கத்தோலிக்கத் திருஅவை யானது வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி
திருநீற்றுப் புதனிலிருந்து தவக்காலத்தைத் தொடங்குகிறது. வரலாற்றில் தவக் காலத்தின் பல்வேறு கூறுகள் எப்படி வளர்ச்சி பெற்றன என்பதை இக்கட்டுரை வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள்...
முதல் ஐந்து நூற்றாண்டு 
கி.பி. முதல் நூற்றாண்டில் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, திருத்தூதர்களின் போதனை களால் எருசலேமிலும், உலகின் மற்ற இடங்களிலும் திருஅவை விரைவாக வளர்ச்சி அடைந்தது. இயேசு கிறிஸ்து வாரத்தின் முதல் நாளில் (அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று) உயிர்த்தெழுந்ததால், யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமையை விடவும் தொடக்க கால கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்
கிழமையை முக்கியமானதாகக் கருதினர். ஒவ்வொரு ஞாயிறும் அவர்களுக்கு உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டமாகவே திகழ்ந்தது.
இயேசுவின் இரண்டாம் வருகையை விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்த முதல் கிறிஸ்தவர்கள், ஒரு குழுமமாக இணைந்து அப்பம் பிடுவதிலும், இறைப்புகழ் கூறுவதிலும், உடைமைகளைப் பகிர்ந்து வாழ்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். ஆகவே, கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை தனிப்பட்ட விழாக் களாகக் கொண்டாடும் எண்ணம் எதுவும் அவர்கள் உள்ளங்களில் எழவில்லை. கிறிஸ்து இயேசுவின் போதனைகளைப் பின்பற்றி சான்று வாழ்வு வாழ்வதும், அவருக்காக உயிரைக் கொடுப்பதுமே அவர்களின் லட்சியமாய் இருந்தது.
முதலில் இறையாட்சியின் இயக்கமாக மட்டுமே வாழ்ந்த கிறிஸ்தவ சமூகம், திருத்தூதர்கள் மற்றும் அவர்களது சீடர்களின் இறப்புக்குப் பிறகே ஒரு சமயமாக படிப்படியாக உருவெடுத்தது. ஆகவே, கிறிஸ்தியல் சார்ந்த கருத்துகள் முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே சமயம் சார்ந்த கருத்தியல்களாக வடிவம் பெற்றன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இறையியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டன. பின்வந்த சில பத்தாண்டுகளில் கிறிஸ்தவ இறையியல் கருத்துகள் அடுத்தக்கட்ட வளர்ச்சியை சந்தித்தன. 
இயேசு கிறிஸ்துவின் இறப்பையும், உயிர்ப்பையும் ஆண்டுக்கு ஒருமுறை யூதர்களின் பாஸ்கா விழாவையொட்டி சிறப்பாக நினைவுகூரும் வழக்கம் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. புதிதாக நற்செய்தியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உயிர்ப்புப் பெருவிழாவன்று திருமுழுக்கு வழங்கும் முறையும் அக்காலத்தில் தோன்றியது. புனித வெள்ளி, புனித சனி ஆகிய நாள்களில், கிறிஸ்தவர்கள் 40 மணி நேரம் நோன்பிருந்து துக்கம் கடைபிடித்தனர். இந்த நோன்பு பற்றி, புனித இரனேயுஸ் (120-203) தாம் எழுதியுள்ள குறிப்புகளில் எடுத்துரைத்துள்ளார். 
மூன்றாம் நூற்றாண்டிலும், இரண்டு நாள்கள் முழுமையாக நோன்பிருக்கும் வழக்கம் தொடர்ந்தது. உரோம் நகரத்து  புனித ஹிப்போலித்துஸ் (170-235) எழுதிய ‘திருத்தூது மரபு’ என்ற நூல், புனித வெள்ளி, புனித சனி ஆகிய நாட்களில், கிறிஸ்தவர்கள் உணவையும், நீரையும் புறக்கணித்து முழுமையான நோன்பு கடைபிடித்ததாக சான்று பகர்கிறது.  குழந்தைகள், முதியோர், கருவுற்றிருந்தப் பெண்கள் ஆகியோருக்கு மட்டும்  நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். பாஸ்கா திருவிழிப்பு வழிபாட்டில் புனித எண்ணெய்களை மந்திரிக்கும் வழக்கமும் இருந்தது.
மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில், பாஸ்கா விழா
வுக்கு முன்பு ஒரு வாரம் நோன்பிருக்கும் வழக்கம் கிழக்கத் திய திருஅவையில் உருவானது. இதற்கு, அலெக்சாந்திரியா ஆயரான தியோனைசியுஸ் (-264) எழுதிய குறிப்புகள் சான்று பகர்கின்றன. சில பத்தாண்டுகளில் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்பு 3 வாரங்கள் நோன்பிருக்கும் வழக்கத்தை ரோம் உள்ளிட்ட மேற்கத்தியத் திருஅவையின் உறுப்பினர்கள் பின்பற்றினர். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த நாள்களில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்வது (அதாவது ஒருசந்தி மேற்கொள்வது) நோன்பாகக் கருதப்பட்டது.
நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமப் பேரரசர் கொன்ஸ்தாந்தீன் கிறிஸ்தவ சமயத்துக்கு அரசு அங்கீகாரம் அளித்தார். அதன்பின் 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய திருஅவையின் முதல் பொதுச்சங்கம், இயேசு கிறிஸ்து 40 நாள்கள் நோன் பிருந்ததைச் சுட்டிக்காட்டி கிறிஸ்தவர்கள் அனைவரும் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்பு நாற்பது நாள்களைத் தயாரிப்புக் காலமாக ஏற்று நோன்பிருக்க வேண்டுமென வலியுறுத்தியது. இதையடுத்து, மேற்கத்திய திருஅவை யில் 36 நோன்பு நாள்களை உள்ளடக்கிய 6 வாரங்களை தவக்காலமாகக் கடைபிடிக்கும் வழக்கம் உருவானது. அதே நேரத்தில், சனி, ஞாயிறு தவிர்த்து வாரத்தில் 5 நாட்களே நோன்பிருந்த கிழக்கத்திய திருஅவையினர், 8 வாரங்களை தவக்காலமாக கடைபிடித்தனர்.
உரோமப் பேரரசர் கொன்ஸ்தாந்தீனது தாய் ஹெலேனா, இயேசு கிறிஸ்து அறையப்பட்ட உண்மை திருச்சிலுவையை கி.பி.326 செப்டம்பர் 14 ஆம் தேதி எருசலேமில் கண்டுபிடித்தார். அதையடுத்து, திருச் சிலுவையைத் தரிசித்து வணக்கம் செலுத்துவதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் எருசலேம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டனர். கி.பி 336 ஆம் ஆண்டு, இயேசுவின் திருக்கல்லறை ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டு, கிறிஸ்துவின் திருச்சிலுவையும் அங்கு நிறுவப்பட்டது. ஆதலால், புனித வாரத்தில் எருசலேம் மற்றும் சுற்றுப்
பகுதிகளில் இயேசுவின் திருப்பாடுகளை திருப்பயணி களுக்கு நாடகமாக நடித்துக் காட்டும் வழக்கம் உருவானது. 
நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இறைச்சி, திராட்சை இரசம் போன்றவற்றை நோன்பு நாட்களில் தவிர்க்கும் விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. நோன்பு காலத்தில், அதிக நேரம் செபத்தில் செலவிடுவதை கிறிஸ்தவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். தவக் காலத்தில் “அல்லேலூயா!” கீதம் பாடுவதைத் தவிர்க்கும் நடைமுறையும் தோன்றியது. கி.பி 395ஆம் ஆண்டளவில், புனித வாரத்தின் முதல் நாளன்று ஒலிவ மலையில் இருந்து எருசலேம் நோக்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடத்தியதாக எத்தேரியா என்ற ஒரு எருசலேம் திருப்பயணி குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
புனித வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நான்காம்
நூற்றாண்டிலேயே தோன்றி வளர்ந் தன மெசியாவின் துன்பம் குறித்த திருப்பாடல்கள், இயேசுவின் பாடுகள் குறித்த வாசகங்கள் ஆகிய வற்றை மையப்படுத்திய இறைவாக்கு வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் பங்கேற்கும் வழக்கம் உருவானது. எருசலேமிலும், திருச்சிலுவையின் துண்டுகள் வைக்கப்பட்டிருந்த ரோம் உள்ளிட்ட இடங்களிலும் புனித வெள்ளியன்று அவற்றை முத்தமிட்டு வணங்கும் வழக்கம் தோன்றியது. ரோமில் இருந்த திருச்சிலுவை திருப்பண்டத்தை திருத் தந்தை பவனியாக எடுத்துச் சென்றார்.
ஐந்தாம் நூற்றாண்டில், உள்ளம் சார்ந்த நோன்பு அதிகமாக
வலியுறுத்தப்பட்டது. “நோன்பு
நமது ஆன்மாவைத் தூய்மைப்
படுத்துகிறது, உள்ளத்திற்கு எழுச்சியூட்டுகிறது, உடலை ஆவிக்
குரியதாக மாற்றுகிறது” என்று இறையியலாளரான ஹிப்போ
நகரத்து புனித அகுஸ்தீன் (354-430) சுட்டிக்காட்டுகிறார். “நாம் நோன்பிருப்பது உணவையோ உடல் சார்ந்த தேவை களையோ தவிர்ப்பதற்காக அல்ல. இவ்வித ஒறுத்தல் முயற்சிகள் பிறரை இழித்துரைக்கும் புறங்கூறுதல் மற்றும் ஏனையத் தவறுகளில் இருந்து விலகி வாழ நம்மைத் தூண்ட வேண்டும்” என திருத்தந்தை புனித பெரிய லியோ (-461) அறிவுறுத்துகிறார். 
ஆறாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டுவரை 
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்
தில், தவக்காலம் 50 நாள்கள் கடை பிடிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை புனித ஹோர்மிஸ்தாஸ் (-523) அறிவித்தார். அதே நேரத்தில், தவக்கால முதல் ஞாயிறைத் தொடர்ந்து வந்த புதன்கிழமையில் இருந்தே நோன்பு நாள்கள் கடைபிடிக்கப்பட்டன. கொடிய பாவங்கள் செய்தவர்களை மட்டும் சாம்பல் தெளித்து, திருஅவையில் இருந்து விலக்கி வைக்கும் வழக்கம் இருந்தது. புனித வாரத்தின் முதல் நாளுக்கு குருத்து ஞாயிறு என்ற பெயர் ஸ்பெயின் நாட்டில் தோன்றியது. புனித வியாழனன்று திருத்தைல திருப்பலி நிகழ்த்தி, புனித எண்ணெய்களை மந்திரிக்கும் வழக்கமும் அதே நூற்றாண்டிலேயே உருவான
தாக அறிகிறோம். 
ஏழாம் நூற்றாண்டில், தவக்காலத் திற்கு தயாரிப்பாக கூடுதலாக 3 வாரங்கள் வரை நோன்பு கடைபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தவ முயற்சிகளில் அக்காலக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த ஆர்வ
மிகுதியை இது காட்டுகிறது. புனித வெள்ளியன்று இறைமக்கள் மன்றாட்டுக் குப் பிறகு திருப்பணியாளர் மட்டும் நற்கருணை உட்கொள்ளும் நடைமுறை உருவானது. புனித வியாழனன்று ஒருசில இடங்களில் மட்டும் நடைபெற்று வந்த பாதம் கழுவும் சடங்கை, கி.பி.694 ஆம் ஆண்டு நடைபெற்ற தொலேதோ சங்கம்
திருஅவை முழுவதற்கும் விரிவுபடுத்தியது.
எட்டாம் நூற்றாண்டின் பாதியில், குருத்தோலைப் பவனிக்கு முன்பு குருத் தோலைகளை மந்திரிக்கும் வழக்கம்
உருவானது. பொபீயோ நகரத்தின் பழங்காலத் திருப்பலி நூலில் அதற்கான செபங்களைக் காண்கிறோம். உயிர்ப்புப் பெருவிழாவோடு இணைந்த முந்நாட் களுக்கு மாற்றாக, ஒன்பதாம் ஆம் நூற்றாண்டு முதல் புனித வியாழன் தொடங்கி புனித சனி வரையிலான காலமே ‘பாஸ்கா முந்நாட்களாக’ (ஞயளஉhயட கூசனைரரஅ)  கருதப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில், புனித வெள்ளியன்று இயேசுவின் திருவுருவத்தை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்யும் பக்தி தோன்றியது.
பாவிகளைத் திருஅவையில் இருந்து விலக்கும் வழக்கம் பதினொன்றாம் நூற் றாண்டில் கைவிடப்பட்டு, தவக்காலத்தின் தொடக்கத்தில் அவர்கள் மீது சாம்பல் தெளிக்கும் சடங்கு மட்டும் தொடர்ந்தது. கி.பி 1091ல் திருத்தந்தை இரண்டாம் உர்பான், கிறிஸ்தவர்கள் அனைவருமே தவக்காலத்தை சாம்பல் பூசி தொடங்கும் வழக்கத்தை உருவாக்கினார். சாம்பலைப் புனிதப்படுத்தும் செபமும் அறிமுகமானது. ஆண்கள் தலையிலும், பெண்கள் நெற்றி யிலும் திருநீறு பூசப்பட்டு தவக்கால நோன்பைத் தொடங்கினர். இவ்வாறு, தவக்காலத்தின் முதல் நாள் ‘திருநீற்று புதன்’ என்ற பெயரைப் பெற்றது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில், பழைய குருத்தோலைகளில் இருந்து சாம்பல் தயாரித்து பயன்படுத்தும் வழக்கம் உருவானது. இயேசுவின் திருப்பாடுகளை 14 நிலைகளில் தியானித்து செபிக்கும் மரபு சார்ந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சியை 1217ல் அசிசி நகர் புனித பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். சிலுவைப் போர்களின் காலத்தில், இஸ்லாமியரின் பிடியில் இருந்த புனித பூமியை மீட்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தப் பக்தி கிறிஸ்தவர்களிடையே வேகமாகப்பரப்பப்பட்டது. பின்னர், தவக்கால பக்தி முயற்சிகளில் முக்கிய இடத்தையும் இது பிடித்துக் கொண்டது.
பதிமூன்று  முதல் பதினாறாம்  நூற்றாண்டுகள்வரை, புனித சனிக்கிழமை
பிற்பகலிலேயே உயிர்ப்பு பெருவிழா கொண்
டாடும் வழக்கம் இருந்தது. தவக்காலத்
தில் கிறிஸ்தவர்கள் அதிக தருமச் செயல்
களில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். கத்தோலிக்கத் திருஅவையின் மாபெரும் இறையியலாளரான புனித தாமஸ் அக்குயினாஸ், “பாவத்திற்காக வருந்துகிற உள்ளத்தையும், தாழ்ச்சியையும் (தவக்கால) நோன்பு வழங்குகிறது. சிற்றின்ப ஆசையின் மேகங்களைச் சிதறடித்து, உடலிச்சையின் நெருப்பை அணைத்து, கற்பின் உண்மை ஒளியை அது சுடர்விடச் செய்கிறது” என்று கூறுகிறார்.
திரிதெந்து பொதுச்சங்கத்திற்குப் பிறகு 1570-ல் திருத்தந்தை ஐந்தாம் பயஸ் வெளியிட்ட உரோமை திருப்பலி நூல், புனித வியாழன் திருப்பலியின் முடிவில் பாதம் கழுவும் சடங்கை நடத்துமாறு பணித்தது. 17 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை தவக்கால உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. தொடக்கத்தில் பால் உள்ளிட்ட பொருள்களும் விலக்கப்பட்டிருந்த நிலைமாறி, மீனும் தூய உணவாகக் கருதப்படும் நிலை உருவானது. ஒரு சந்தி மற்றும் சுத்தபோசன நாள்கள் தவிர மற்ற நாள்களில், இறைச்சி உண்ணலாம் எனவும் அனுமதிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டு 
1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ், தவக்கால வழிபாட்டு முறையில் சில மாற்றங்களை அறிமுகம் செய்தார். அதன்படி, புனித வியாழன் திருப்பலியில் மறையுரையைத் தொடர்ந்து ‘பாதம் கழுவும் சடங்கு’ இடம்பெறத் தொடங்கியது. புனித வெள்ளி திருச்சடங்கில் பொதுநிலையினருக்கும் நற்கருணை வழங்கு வதற்கு வழிவகை செய்யப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்கு பின்னர், புனித வியாழன் மாலை முதல் உயிர்ப்பு பெருவிழா மாலை வரையிலான காலமே ‘பாஸ்கா முந்நாள்கள்’ என்ற புரிதல் ஏற்பட்டது. 1991 மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளிக்கிழமை அன்று, விவிலியம் சார்ந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சியை திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அறிமுகம் செய்து வைத்தார்.
“ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் மேன்மைமிகு நாற்பது நாள்களில், இயேசு பாலைநிலத்தில் நோன்பிருந்த மறைபொருளோடு திருஅவை தன்னை இணைத்துக் கொள்கிறது” என்று கத்தோலிக்கத் திருஅவையின் மறைக் கல்வி (எண். 540) போதிக்கிறது. “தவக்காலம் என்பது இயேசுவின் அருகாமையை அனுபவிப் பதற்கான ஆன்மிகப் போராட்டமாக உள்ளது. பெருமை அல்லது ஊகத்தால் அன்றி, செபம், இறைவார்த்தையைக் கேட்டல், தவம் செய்தல் ஆகிய விசுவாசத்தின் கருவிகளால் அதில் வெற்றிபெற வேண்டும்” என்று முன்னாள் திருத் தந்தை பதினாறாம் பெனடிக்ட் அறிவுறுத்துகிறார்.
சிந்தனைக்கு 
ஆகவே, தவக்காலம் என்பது உடலை வருத்திக் கொள்கின்ற காலமன்று, உள்ளத்தை திருத்திக் கொள்ளும் காலம் என்பதை உணர நாம் அழைக்கப்படுகின்றோம். நமது பாவப் பழக்கங்களைக் களைந்து விட்டு, புதிய மனிதராக மாறுவதற்கான வாய்ப்பை தவக்காலத்தின் வழியாகத் திருஅவை நமக்கு வழங்குகிறது. தவக்கால ஒழுங்குகளையும் பக்தி முயற்சிகளையும் வாடிக்கையான ஒன்றாகக் கருதாமல், கடவுளுக்கும் நமக்கும் நடுவிலுள்ள இடைவெளியைக் குறைப் பதற்கான முயற்சிகளாக உணர்ந்து நாம் மனமாற்றம் பெற வேண்டும்.
“தவக்காலம் என்பது தன்மறுப்புக்கும் உகந்த காலம். நமது ஏழ்மையால் மற்றவருக்கு உதவவும் பிறரை மேம்படுத்தவும் நாம் எதை இழக்க முடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். மெய்யான ஏழ்மை நம்மைக் காயப்படுத்தும் என்பதை நாம் மறக்கக்கூடாது. தவம் என்ற பரிமாணத்தைக் கொண்டிராத எந்த தன்மறுப்பும் மெய்யானதன்று. விலைகொடாத மற்றும் காயப்படாத பிறரன்பில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்.
தவக்காலம் நம்மில் ஏற்படுத்துகின்ற மாற்றம் பிறரன்பில் வெளிப்பட வேண்டும் என்பதே நமது திருத்தந்தையின் அழைப்பு. “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவான் 15:13) என்று கற்பித்த இயேசுவின் அன்பை நமது வாழ்வில் செயல்படுத்த இந்தத் தவக்காலம் அழைக்கிறது. தவக்காலத்தின் புனித நாள்கள் கடவுளுடனும் பிறருடனும் நமது உறவைச் சீரமைக்க உதவுபவையாக அமையட்டும்.

Comment