No icon

அருள்பணி. ச. சந்தியாகு CSsR, திருச்சி

துன்புறும் இந்தியத் திரு அவை நற்செய்தி அறிவிப்பும் மானுட உடலேற்பும்

கடவுளின் நற்செய்தி அறிவிப்புப்பணி

கடவுள் மனித இனத்திற்குச் செய்த நற்செய்திப்பணி தம் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை உலகுக்கு அனுப்பியதாகும். இயேசு கிறிஸ்துவே அந்த நற்செய்திப் பணி, அவரே அந்த நற்செய்தி, அனைத்தையும் கடந்த கடவுள், மனித வரலாற்றுக்குள், மனித கலாச்சாரத்திற்குள் வருகின்றார். (கட + வுள்). இவ்வாறு, அனைத்தையும் கடந்த கடவுளை அவரது மானிட உடலேற்பில் அதாவது, இயேசு கிறிஸ்துவில் நாம் காண்கின்றோம். கடவுள் மனிதராகவில்லை என்றால், அரூபியாகிய அவரை மனிதப்பிறவிகளாகிய நாம் அறிந்துகொள்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. மனித அறிவைக்கொண்டு, நாம் கடவுளைப்பற்றிய பலவித அரிய உன்னதமான கண்டுபிடிப்புக்களை அடைந்திருக்கலாம், யூகித்திருக்கலாம். கடவுளை அறிவார்ந்த முனிவர்கள் மட்டுமேகாட்சிகண்டிருக்கக்கூடும். மற்றவர்கள் அவர்களைச் சார்ந்துதான் இருக்க முடியும். சாதாரண மக்களுக்கு கடவுள் எட்டாக் கனியாக இருந்திருப்பார். இந்நிலையை மாற்றி, அனைத்து மக்களுடனும் தான் உறவுகொள்ள கடவுள் செய்த யுக்தியே மானுட உடலேற்பு. அதாவது, நமது உலகுக்குள், நமது வரலாற்றில், நமது கலாச்சாரத்தில் ஒன்றிணைதல். கடவுளின் மனிதாவதாரத்தினால் உண்மை, இறையனுபவம் சாதாரண சாமானிய மக்களுக்கும் சாத்தியமாகிறது.

மானுட உடலேற்பு - உயிர்ப்பு - கலாச்சாரம்

தமது பிறப்பில் நமது உலகில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் தோன்றியவர். தமது உயிர்ப்பில் உலகின் அனைத்து கலாச்சாரங்களையும் தமதாக்கிக்கொள்கிறார். இந்த இறைவெளிப்பாட்டு இறையியலின் காரணமாகவே முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் தலைவர்கள், எந்த நாட்டில், எந்த மக்களிடையே கிறிஸ்தவம் பரவினாலும், அந்தந்த கலாச்சாரத்தோடு கிறிஸ்தவம் இணைய வேண்டும் என்று கற்பித்துள்ளனர்.

நற்செய்தி அறிவிப்பும், பண்பாட்டு மயமாக்கலும்

முதல் நூற்றாண்டின் மத்தியில் பாலஸ்தீனாவிலிருந்து ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகள் உட்பட்ட உரோமைப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கு கிறிஸ்தவம் பரவிய போது, வழிபாட்டு முறைகளும், வாழ்க்கை முறைகளும் அந்தந்த கலாச்சாரங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து (ஐரோப்பிய நாடுகள், சிரியா உட்பட்ட ஆசிய நாடுகள்) நற்செய்தி வேறு நாடுகளுக்குப் பரவியபோது, வழிபாட்டிலும், வாழ்க்கை முறையிலும் அந்தந்த இடத்துக் கலாச்சாரங்கள் புறக்கணிக்கப்பட்டன. இதுதான் நாம் செய்த பெரிய தவறு. கடவுளின் மானுட உடலேற்புக்கு எதிராகவும், தொடக்கத் திரு அவையில் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு எதிராகவும் செய்த தவறு. இன்னும் பெரும்பாலும் இத்தவற்றில் நீடிக்கின்றோம்.

எனவேதான், இப்போதும் நம் மத்தியில் உரோமை வழிபாட்டு முறை உள்ளது. சிரியன் வழிபாட்டு முறை, மலங்கார வழிபாட்டு முறை, பைசந்திய வழிபாட்டு முறை ... என உள்ளன. ஆனால், இந்தியக் கலாச்சாரங்களின் வழிபாட்டு முறைகளைத்தேட வேண்டியுள்ளது.

ஊர்த் திருவிழாக்களிலும், திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் நமது மண்ணின் கலாச்சாரங்களின் ஒரு சில கூறுகளை சேர்த்திருக்கிறோமேயொழிய, நற்செய்தி அறிவிப்பு அதாவது, வழிபாடும், வாழ்வும், பண்பாட்டு மயமாக்கப்படவில்லை. கலாச்சாரங்கள் பற்றிய இறைவெளிப்பாட்டுப் போதனைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால், நாமே நற்செய்தி அறிவிப்புக்குத் தடையாகவும், கலாச்சார மோதல்களுக்குக் காரணமாகவும் இன்னும் இருக்கின்றோம்.

திருத்திக்கொள்ள வேண்டிய அணுகு முறைகள்

கிறிஸ்தவர்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்கின்ற பல்வேறு சபைகளும், சிறுசிறு குழுக்களும் நற்செய்தி அறிவிப்பு என்றால் என்ன என்பதன் பொருளையும், அதில் கலாச்சாரத்தின் பங்கு என்ன என்ற விவிலியத் திரு வெளிப்பாட்டையும், மேலோட்டமாக அல்லாமல், சற்று ஆழமாகப் புரிந்து கொண்டு, அதன்படி செயல்படுதல் அவசியம்.

தாங்கள் வைப்பதுதான் சட்டம், தாங்கள் சொல்வதுதான் கோட்பாடு. ஏனென்றால், தாங்கள் மட்டுமே விவிலியத்தை அப்படியே கடைப்பிடிக்கின்றோம் என்ற வலதுசாரி சிந்தனைகளுடன் தேவையான நிர்வாக அமைப்புகள் இல்லாமல் இயங்குகின்ற, சிறுசிறு குழுக்களால் கிறிஸ்தவத்திற்கும், சமுதாயத்திற்கும் பல தீமைகள் விளைகின்றன.

நற்செய்தி அறிவிப்பில் அவர்கள் காட்டுகின்ற ஆர்வம் பாராட்டுதற்குரியது என்றாலும், அந்த ஆர்வத்தைச் சரியான புரிதலுடன், சரியான வழிகாட்டுதலில், சரியான அணுகுமுறையில் செலவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்மை பயக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

கடந்த காலத்தில் குறிப்பாக, காலனி ஆதிக்க இடைக்காலத்தில் நாம் செய்த தவறுகளை இப்போது உணர்வதால், நற்செய்தி அறிவிப்பை நாம் நிறுத்தி விட வேண்டும் என்பது சரியான முடிவாகாது. மாறாக, இப்போதாவது அனைத்து மக்களின் கலாச்சாரங்களும் மதிக்கப்படுவதை, நாம் உறுதி செய்ய வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் கற்பிக்கின்ற உள்நாட்டுமயமாக்கல், இந்தியமயமாக்கல் ஆகிய செயல்பாடுகள் இக்காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; இறைவன் மனிதரோடு இணைந்தார் எனும் அடிப்படை இறைவெளிப்பாட்டில் ஊன்றியது ஆகும்.

ஆனால், நாம் காண்பது என்ன? தொடக்க காலத்திலும் 1970 கள் மற்றும் 80 களிலும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் இப்போது, இந்திய திரு அவையிலும், ஒருவேளை உலகளாவிய திரு அவையிலும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது அல்லது அதன் தடமே இல்லாமல் போய்விட்டது. பண்பாட்டுமயமாக்கலும், நற்செய்தி அறிவிப்புப்பணியும் இறை-மனிதன் போல பிரிக்க முடியாதவை என்பதை எளிதில் மறந்தும், மறுத்தும் விடுகின்றோம்.

பண்பாட்டு மயமாக்கலில் நாம் முனைந்து விட்டால், இனி வேத கலாபனையே இருக்காது என்றல்ல; ஆனால், வேத கலாபனை என்று எண்ணி, நாமும் பிறரும் ஈடுபட்டிருந்த கலாச்சார மோதல்களைத் தவிர்க்கலாம்.

(தொடரும்)

Comment