No icon

+ மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி

கூட்டு ஒருங்கியக்கப் பாதையில் சந்திப்பு, செவிசாய்ப்பு மற்றும் பகுத்தாய்வு

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய துவக்கத்திற்கான நுழைவு வாயில். தவக்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணம் புதிய வாய்ப்புகளுக்கும், மாற்றத்திற்கான பயணத்திற்கும் ஏற்ற தருணம். பழையன கழிந்து, புதியவை உதிக்கையில் மாற்றத்திற்கான வாய்ப்புகளை இறைவன் நமக்கு அருளுகின்றார். கத்தோலிக்கர்களாகிய நமக்கு இது சிறப்பு மிகுந்த தருணம். கூட்டு ஒருங்கியக்கத்தை குறித்து நாம் ஒரு திரு அவையாக இணைந்து சிந்திக்கவும், திரு அவையின் வாழ்வியலை குறித்து பகுத்தாய்வு செய்யவும் நமக்கு அருளப்பட்டிருக்கும் காலம் இது. இரண்டாண்டுகள் நீடிக்க இருக்கும் இந்த ஒருங்கியக்கப் பாதையில் திரு அவையின் மறுமலர்ச்சிக்காக நாம் கரம் கோர்த்து இப்பயணத்தில் ஒன்றிணைய வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கூட்டு ஒருங்கியக்க பாதையை துவங்கி வைத்த வேளையில் திரு அவையின் இப்பயணத்திற்கு மூன்று வினைச்சொற்கள் அவசியமானது என்று குறிப்பிட்டார். மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் பணக்கார இளைஞனை குறித்த நற்செய்திப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை நமக்கு வரையறுக்கின்ற மூன்று அம்சப்பாதை: சந்திப்பு, செவிசாய்ப்பு மற்றும் பகுத்தாய்வு. உலகத் திரு அவையோடு தவக்காலத்தின் துவக்கத்தில் நாம் ஒருங்கியக்க பாதையில் நடக்க முற்படும் இவ்வேளையில் இந்த மூன்று அம்சங்களைக் குறித்து ஒரு சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

முதலாவதாக சந்திப்பு: ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஆன்மீக, மனித, சமூக மற்றும் சமய கூறுகள் உண்டு. நான் இன்னொருவரை சந்திக்கின்ற போது அவரது உலகத்திற்குள் நுழைவதன் வழியாக இறைவனைக் குறித்தும், அடுத்தவரைக் குறித்தும் ஏன் நம்மையே குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகளை, அனுபவங்களை நாம் பெறுவதற்கு வாய்ப்பு பிறக்கின்றது. எனவே, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு ஆன்மீகக் கருவூலம். அதே வேளையில் நான் மற்றவரை சந்திக்கின்றபோது, எனது உலகத்தையும் எனது புரிதல்களையும், எனது தனிப்பட்ட தீர்ப்புகளையும், பார்வைகளையும் சவாலுக்கு உட்படுத்தும் வண்ணம் எனது சந்திப்பு அமைகின்றது. நான் அல்லாத இன்னொருவரை எனது சந்திப்பு எனக்கு இனம் காட்டுவது போல இன்னொருவர் என்னை சந்திக்கும்போது, அவர் அல்லாத மற்றவரை அவரும் சந்திக்கின்றார். எனவே, உண்மையான சந்திப்பு என்பது இரு வெவ்வேறு நபர்களை மாற்று சிந்தனைக்கும் மாற்றுப்பார்வைக்கும் அழைத்துச் செல்லக்கூடிய சக்தி கொண்டது. நாம் இன்னொருவரை சந்திக்கும்போது அவரோடு சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடும் ஒரு புதிய உறவை ஏற்படுத்தவோ அல்லது அவரை நிராகரித்து எதிரியாக்கவோ சாத்தியக்கூறுகள் உண்டு. இதில் நாம் எதை தெரிந்து கொள்கிறோம் என்பதை குறித்தே நம்முடைய சந்திப்பின் பயன் அமையும்.

இயேசுவுடனான பணக்கார இளைஞனின் சந்திப்பு, நம்முடைய சந்திப்புகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். அந்த இளைஞன், ‘இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது (மாற் 10:17)சந்திப்பதாக குறிப்பிடுகிறதுஆம் அன்பார்ந்தவர்களே! ஒவ்வொரு கூட்டு ஒருங்கியக்க பாதையும் நாம் எதிர்பாராத ஒருவருடனான சந்திப்போடு துவங்குகிறது. தனது பாதையை, தனது சித்தத்தை, தனது தயாரிப்புகளை மாற்றி அமைக்கக்கூடிய சந்திப்புகளுக்கு இயேசு எப்போதும் தயாராக இருந்தார். இயேசு நிகழ்த்திய ஒவ்வொரு சந்திப்பிலும் அவரை சந்தித்தவர்கள் இறைவனின் தொடுதலை உணர்ந்தார்கள். அவர்களது வாழ்வு மாற்றமடைந்தது. அவர்கள் தூயவர்கள் ஆனார்கள். அதே வேளையில் இயேசுவின் ஒவ்வொரு சந்திப்பிலும் அவரை எதிர்கொண்டு வந்து சந்தித்த மனிதர்கள் இயேசுவைப் பாதித்தனர். அவரது இலக்கு நோக்கிய பயணத்தை நிர்ணயித்தனர்.

ஆம்! நமது கூட்டு ஒருங்கியக்க பாதையும் நம்மை இத்தகைய சந்திப்புகளுக்கு அழைக்கின்றது. நமது சொந்த, தனிப்பட்ட உலகங்களை விட்டு வெளிவந்து நம்முடைய திட்டங்களையும் தயாரிப்புகளையும் மாற்றியமைக்கும் புதிய சந்திப்புகளுக்கு நம் உள்ளங்களை திறக்க புதியவைகளை, எதிர்பாராதவைகளை மனம் திறந்து ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.

இரண்டாவதாக கூட்டு ஒருங்கியக்க பாதை என்பது மற்றவருக்கு திறந்த உள்ளத்தோடு செவிமடுப்பதில் அடங்கியிருக்கிறது. மற்றவருக்கு செவிக் கொடுக்கும் பண்பில் இயேசுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடியது என்ன? இயேசு, இந்த பணக்கார இளைஞனுக்கு செவிமடுத்தார். அவருடைய உண்மையான இயல்பைக் கண்டுணர்ந்தார். அவரது மனத்தூய்மையை, அவரது உண்மையான தேடுதலை குறித்து இயேசு அந்த இளைஞனை அன்பு செய்தார். அதே சமயத்தில் அந்த இளைஞருக்குள் ஏதோ ஒன்று குறைவுபடுவதையும் இயேசு உணர்ந்தார். எனவே, அந்த இளைஞர் உடைமையாகக் கொண்டிருந்த அனைத்து செல்வங்களையும் துறக்கவும், அவரது சிலுவையை சுமந்துக் கொண்டு இயேசுவை ஒருங்கியக்க பாதையில் பின்தொடரவும் அவருக்கு அழைப்பு கொடுத்தார். இதுவே உண்மையான செவிமடுத்தலுக்குரிய எடுத்துக்காட்டு. நாம் மற்றவருக்கு உண்மையாக செவிகொடுக்கும்போது அவரில் உண்மையானதை, மாண்புக்குரியதை போற்றவும், அதேவேளையில் அவரில் குறைபடுவதை சுட்டிக்காட்டி, மாற்றத்திற்கும் முழுமைக்கும் வழி காணவும் செய்வது செவிமடுத்தல் என்னும் திறன். கடந்த நூற்றாண்டிலிருந்து கிறிஸ்தவ சீடத்துவத்திற்கும் கிறிஸ்தவ மறைப்பணிக்கும் உரையாடுதல் முக்கியமானது என்பதை குறித்த கருத்துத் தெளிவு திரு அவையில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனினும் நாம் நம்முடைய உரையாடல்களில் நாம் காணும் பெரும் குறை எதுவெனில், நம் உரைகளை நிகழ்த்த விரும்புகிறோம். ஆனால், செவிமடுக்க விரும்புவதில்லை. இரண்டாவதாக ஒருவர் மற்றவரில் இருக்கும் குறைகளைக் கண்டுணர்ந்து ஆக்கபூர்வம் உள்ள திறனாய்வு செய்யும் பாங்கு நம்முடைய உரையாடல்களில் தென்படுவதில்லை. உண்மையான உரையாடல் என்பது அடுத்தவரை கொண்டாடுவது மட்டுமல்ல; மாறாக, ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ள, ஒருவர் மற்றவரின் நன்மை தீமைகளை கருத்தாய்வு செய்து பார்க்க, ஒருவர் மற்றவரின் மாற்றத்திற்கு வழி காண வேண்டியது அவசியம். இன்று உலகம் நம் செவிமடுத்தலுக்காக காத்திருக்கிறது. நம் பிரசங்கங்களை நிறுத்தி வைத்துவிட்டு, நம் அறிவுரைகளை நிறுத்தி வைத்துவிட்டு, பிறருக்கு நாம் செவி கொடுப்போம். நம்முடைய தினசரி அனுதின வாழ்க்கையின் மூலமாகவும் ஏழைகள், எளியோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியல் மூலமாக நம்மோடு இன்று தொடர்ந்து உரையாற்றுகின்ற தூய ஆவியானவருடைய செய்திகளுக்கு செவிமடுத்தல் கூட்டு ஒருங்கியக்க பாதையின் அம்சமாகும். இவ்வாறு செவிமடுக்கும் பழக்கத்திலிருந்து தான் புதிய கேள்விகளையும், கருத்தியல்களையும், பார்வைகளையும், அணுகுமுறைகளையும் நாம் கற்றுக் கொள்ள முடியும்.

இறுதியாக, கூட்டு ஒருங்கியக்க பாதை என்பது பகுத்தாய்விற்கான தருணம். அடுத்தவரை சந்திப்பதன் வழியாகவும், அடுத்தவருக்கு செவிமடுத்தலின் வழியாகவும் உண்மையான ஒருங்கியக்க பாதை என்பதைக் குறித்த கருத்துத் தெளிவு நம்மில் பிறக்க வேண்டும். அந்த பணக்கார இளைஞன் இயேசுவை சந்திக்கும்போது, உண்மையில் சீடத்துவத்திற்கேற்ற நபராக தென்படுகிறார். எனினும் அந்த நற்செய்தி பகுதியின் இறுதியில் நாம் காண்பது வேறு. அந்த இளைஞன் சரியான மனிதரைத் தேடி வந்தார். (இயேசு) சரியான தருணத்தில் சரியான கேள்வியுடன் சரியான விடைகொடுக்க வல்லவரிடம் சந்திப்பை மேற்கொண்டார். இச்சந்திப்பில் இயேசு ஏழைகளுக்கு உதவும்படி அவருக்கு வழிகாட்டினார்எனினும், அவர் அதனைச் செய்வதற்கு பயந்து, சோகத்தோடு திரும்பிச் சென்றார். இயேசுவை நல்மனதோடு தேடிவந்து, சோகத்தோடு திரும்பிச் சென்றவர் நற்செய்தியில் இவர் மட்டும் தான் என்பது நமக்கு சோகம் அளிக்கிறது. இந்த தோல்விக்குக் காரணம் சீடத்துவத்தைக் குறித்த பகுத்தாய்வில் அந்த இளைஞர் பாதை மாறியதுதான். சந்தித்தலும், செவிமடுத்தலும் நம்முடைய திருஅவை வாழ்வியலுக்கான அழைத்தலை தகுந்த முறையில் ஆய்வு செய்வதற்குரிய வழி. எனவே தான் நம்முடைய திருத்தந்தை அவர்கள் கூறிய கூட்டு ஒருங்கியக்க பாதை நம்மை ஆன்மீக மற்றும் சமூக பகுத்தாய்விற்கும், ஆக்கபூர்வ மிக்க முடிவுகள் மற்றும் செயல்முறைகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.

கூட்டு ஒருங்கியம் என்பது ஒரு பாராளுமன்றமோ, ஒரு வகுப்பறையோ, ஒரு திருவழிபாட்டுக் கூடமோ அல்லது சமூகத்தின் பிரச்சனைகளைக் குறித்து அலசி ஆராய ஒன்றிணைந்த இயக்கமோ அல்ல; மாறாக, தூய ஆவியினால் வழி நடத்தப்படுகிற அருள்மிக்க தருணமே இக்கூட்டு ஒருங்கியக்கப் பாதை. இப்பாதையில் நம்மை குறித்த சுயநல பார்வைகளைக் களைந்து, புதிய மறைப்பணி மாதிரிகளைக் கண்டறிதலே இப்பயணத்தின் நோக்கம். விண்ணரசை இம்மண்ணில் நிறுவ நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அழைப்பில் திருப்பயணிகளாக கூட்டு ஒருங்கியக்க பாதையில் நடைபோடும் நாம், நமது சமூகத்தின் நிதர்சனத்தைக் கண்டறிந்து, அந்த நிதர்சனத்தை மாற்றுவதற்குரிய கடமையில் ஒன்றிணைவோம்.

இறையாசீர்

+ மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயர்

Comment