No icon

​​​​​​​Prison Ministry of India  Ruby Jubilee 1981-2021

இழந்தவை மீட்கப்படும் வரை எங்கள் இதயங்கள் நிம்மதியற்றவை!

ஸ்வேதா, தன் கணவர் இறந்த பிறகு, ஆதரவு ஏதுமின்றி, அவர்தம் மூன்று குழந்தைகளோடு (இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளோடு) சிறிது காலம் அலைந்து திரிந்தார்அவர்கள் அனைவரும் இறுதியாக, கூடாரங்களில் தங்கி வாழும் நாடோடிகளோடு இணைந்தனர். (இந்த உண்மைக் கதையில் உள்ள அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). அவர்கள் வாழ்ந்த பகுதி வறுமை மற்றும் அதிகமான மக்கள் கூட்டம் காரணமாக, போதைப்பொருள்கள் விற்றல், பயன்படுத்துதல், திருடுதல் மற்றும் பிற சமூக விரோத செயல்கள் நடைபெறுவற்கு ஏதுவான இடமாக மாறியது. சாதகமற்ற சூழ்நிலைகள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தல் சிறுபிள்ளைகளையும் தூண்டின. அவர்களும் போதை மற்றும் மதுவுக்கு அடிமையானார்கள். ஸ்வேதாவின் மூத்த மகன் தர்பன் பலமுறை சிறைக்கம்பிகளுக்குப் பின் தள்ளப்பட்டான். அவனது 31 வயதில் கல்லீரல், கணைய நோய்க்கு ஆளாகி இறந்து போனான். அதற்குள், அவர்களின் 40 ஆண்டு பழைய குடிசை வீடானது தண்ணீர் மற்றும் வெள்ளத்தால் பரிதாபமான நிலையில் இருந்தது. அந்த வெள்ளத்தின் காரணமாக தர்பனின் உடலை வீட்டிற்குள் கொண்டு வர முடியாமல், தண்ணீர் தேங்காத ஒரு திறந்த வெளியில் வைத்தபோது, அவனது தாய்க்கு மிக மனவேதனையாக இருந்தது.

ஸ்வேதாவின் மகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரது மகளின் கணவர், அதாவது மருமகன், வேறொரு பெண்ணோடு தகாத உறவு வைத்திருந்ததால், அவன் ஸ்வேதாவின் மகளை வெளியே துரத்திவிட்டான். ஸ்வேதாவின் இளைய மகனும் போதைப்பொருள் மற்றும் மதுவினால் நோய்வாய்ப்பட்டான். இந்த நிலையில்தான் பிஎம்ஐ (PMI) ரூபி ஜூபிலி வீட்டுத் திட்டம், இக்குடும்பத்தின் நிலை கண்டு இவர்களின் வழக்கை எடுத்து வாதாடியது. இதனால் இக்குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான¾முக்கால் சென்ட் நிலத்தில் புதிய வீடு கட்ட முடிந்தது. இப்போது அவர்கள் தங்களுக்கு சொந்தமான புதிய வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஏனெனில், இந்தப் புதிய வீட்டை வெள்ளமோ அல்லது அலையோ தாக்குவதில்லை. தங்களுக்கு வாழக்கூடிய வீட்டைக் கட்ட உதவியதற்காக இந்திய சிறைப்பணி குழுமத்திற்கு அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த உன்னத செயலுக்காக இக்குடும்பம் பிஎம்ஐ குழுமத்தலைவர் ரெவ் ஆல்வின் டிசோசா, பிஎம்ஐ தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரான்சிஸ் கொடியன் எம்சிபிஎஸ், ஒட்டுமொத்த பிஎம்ஐ குழுமம் மற்றும் உபகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறது.

உங்கள் சகோதரர்கள் எங்கே?

இந்த உண்மைக் கதை, வறுமையில் வாடும் குடும்பங்களின் வேதனையையும், பிஎம்ஐயின் வலுவான நம்பிக்கையையும் புரிந்துகொள்ள மனிதகுலத்தை அழைக்கிறது, யாரும் குற்றவாளியாகப் பிறப்பதில்லை. தர்பன் ஒரு குற்றவாளியாக பிறக்கவில்லை. ஆனால், அவர்கள் வாழ்ந்த சூழல், அவனையும் அவனது சகோதரனையும் குற்றச் செயல்கள் புரிய வழி வகுத்தன. ஒரு நபர் ஒருமுறை சிறைக்கம்பிகளுக்குப் பின் தூக்கி எறியப்படுகின்றபோது, ஒட்டுமொத்த குடும்பமும் அவருடன் சேர்ந்து களங்கப்படுத்தப்படுகிறது. பிஎம்ஐ குழுமத் தன்னார்வத்தொண்டர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சிறைக்கைதியும் கடவுள் கொடுத்த பரிசு. சிலுவையில் அறையப்பட்ட கள்வன், மீட்கப்படுவதற்காகவே இறைத்தந்தையால், இறைமகன் இயேசுவுக்கு அளிக்கப்பட்ட பரிசு. சிறைக்கைதிகள் எங்கள் சகோதரர்கள். கடவுளின் கருணை மற்றும் மீட்பைப் பெற அவர்களின் பயணத்தில் நாங்கள் அவர்களுடன் செல்கிறோம்.

தொடக்கநுhல் 4:9 இல்உன் சகோதரன் எங்கே?’ என்று கடவுள் காயீனிடம் கேட்டது போல், அதேகடவுள் நம் ஒவ்வொருவரிடமும் நம் சகோதர, சகோதரிகள் எங்கே? என்று கேட்கிறார். பிஎம்ஐ தன்னார்வத்தொண்டர்களாகிய எங்களை பொறுத்தவரை, எங்கள் சகோதர, சகோதரிகள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். அவர்களின் உடைந்துபோன நிலையிலும், காயத்திலும் நம் உயிருள்ள கடவுளை நாங்கள் காண்கின்றோம். இயேசுவும் சிலுவையில் உடைபட்டார், அவரது உடைபட்ட நிலையிலிருந்துதான் உலகிற்கு மீட்பு வந்தது.

இழந்தவை மீட்கப்படும் வரை எங்கள் இதயங்கள் அமைதியற்றவை!

புனித அகுஸ்தினார்உம்மிடத்தில் வந்து இளைப்பாறும் வரை எங்கள் இதயங்கள் நிம்மதியற்றவை என்று கூறினார். புனித அகுஸ்தினாரோடு சேர்ந்து, PMI  தன்னார்வத் தொண்டர்களாகிய நாங்களும், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் உள்ள எங்கள் சகோதரர்களின் ஆன்மாக்கள் மீட்கப்படும் வரை எங்கள் இதயங்கள் நிம்மதியற்றவை என்று கூறுகிறோம். புனித குழந்தை தெரேசம்மாள், மரண தண்டனைக் கைதியான ஹென்றி பிரஞ்சினிக்காக செபம் செய்வதை ஒருபோதும் கைவிட்டுவிடாமல், அனுதினமும் தன் செபங்களில் அவரை நினைவு கூர்ந்தார். புனித குழந்தை தெரேசம்மாள் தனது துறவற இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் செய்த தாழ்மையான செபத்தின் பலனாகவே, தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சிறைச்சாலையின் நான்கு இருண்ட சுவர்களுக்குள்ளிருந்து பிரஞ்சினி விடுவிக்கப்பட்டார். பிஎம்ஐ அதன் 40வது ஆண்டு ரூபி ஜூபிலியின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக் கைதிகள், தீவிரவாதிகள், தொடர்கொலையாளிகள் போன்றோருக்காக 40 சிறப்புப் பணிப் படைகளைத் துவக்கியது. “கடவுளால் முடியாதது எதுவுமில்லை (லூக் 1:37) என்ற இறைவார்த்தையின் மீது முழு நம்பிக்கை வைத்து, பிஎம்ஐ குழுமம், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காகவும், கடுமையான குற்றவாளிகளுக்காகவும், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் எங்கள் சகோதரர்கள் எல்லாருக்காகவும், இடைவிடாது இறைவனிடம் பரிந்து பேசும் செபம் என்று 24 மணிநேர நற்கருணை ஆராதனையை துவக்கியது.

பெருங்குழப்பம் - குழப்பம் மற்றும் சலசலப்பு

பெரும்பாலான மக்கள் இருளைக் கண்டு பயப்படுகிறார்கள். ஒளியைக்  கண்டு பயப்படுகிறார்கள் என்று நாம் கேள்விப்பட்டதே இல்லை. ஏனெனில், இருள் என்பது நிச்சயமற்றதன்மை. கூச்சல், குழப்பம் மற்றும் விரக்தியை பிரதிபலிக்கின்றது. இரவில் வெளிச்சம் அணைந்து, திடீரென காரீருளாக தோன்றும்போது, நமக்குள் ஏற்படும் பய உணர்வால் நாம் உடனடியாக கைப்பேசியையோ, டார்ச்லைட்டையோ அல்லது சிறிது வெளிச்சம் தரக்கூடிய ஏதாவது ஒன்றையோ தேடுகிறோம். ஏனென்றால், இருள் நம்மை மிகவும் சங்கடப்படுத்துகின்றது. சிறை வாழ்க்கை என்பது 24 மணி நேரமும் இருள் படர்ந்த வாழ்க்கை. அடர்ந்த இருண்ட சிறைச்சுவர்கள் பெருங்குழப்பம், குழப்பம் மற்றும் சலசலப்பு போன்ற உணர்வுகளைக் கொண்டு வருகின்றன. அவர்களின் இருளான வாழ்வில் ஒளி வீச நாம் கரங்கள் கோர்க்க முடியுமா?

மென்மையான தொடுதல் மற்றும் சில தருணங்கள்

ஒருநாள் ஒருவர் தனியாக அமர்ந்து ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தார். எங்கள் பிஎம்ஐ தன்னார்வத்தொண்டர்களிலிருந்த பெண் ஒருவர், அவரை சிறிது நேரம் கூர்ந்து கவனித்துவிட்டு, அவர் அருகில் சென்று அமர்ந்தார். அவள், அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு அவரைப் பார்த்தாள். உரையாடலின்போது, இன்று தான் அவர் சிறைக்கு வந்த முதல் நாள் என்றும், சிறைக்கு வந்த அன்றிரவே தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் என்றும் அவளுக்குத் தெரிய வந்தது. அவர் குற்றம் செய்யாத ஓர் அப்பாவிக் கைதி. அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டார்; சமூகத்தால் கண்டனம் செய்யப்பட்டார். ஆவியின் வழிகாட்டுதலின் மூலம் பிஎம்ஐ தன்னார்வத் தொண்டர்களால் சிறைச்சுவர்களுக்குப் பின் அவருக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டது. மேலும், இன்று அவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அந்த ஒரு மென்மையான தொடுதலும், அந்த ஒரு சில நிமிடங்களும் அவருக்கு உயிரூட்டமளித்து வாழ வைத்ததால், இன்று அவருக்கு ஓர் எதிர்காலம் இருக்கிறது.

அவர்கள் அனைவரும் போதுமான அளவு உண்ட பிறகு, இயேசு தம் சீடர்களிடம், “எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” (யோவா 6:12) என்றார். அவர் தம் சீடர்களிடம் எஞ்சியவற்றைச் சேகரிக்கச் சொன்னபோது, சீடர்கள் குனிந்து எஞ்சியவற்றைச் சேகரித்தனர். காயப்பட்டு சிறைக்கம்பிகளுக்குப்பின் இருக்கும் அனைவரும் சமூகத்தால் கைவிடபட்டவர்களே. இப்படி சமூகத்தால் கைவிடபட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பதற்காக நாங்கள் சிறைக்கதவுகள் வழியாக நுழைகிறோம். இவ்வாறு சிதறுண்டு போனவர்கள், தாங்கள் இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெறுகின்றபோது, கைவிடபட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகின்றபோது, என்ன ஒரு மகிழ்ச்சியை அது எங்களுக்கு தருகின்றது!

எங்கள் சகோதரர்கள் - கடவுளின் பரிசு

குற்றவாளிகள் வாழும் இடம் என்பதால் சிறைச்சாலை பாதுகாப்பான இடம் அல்ல என்று நாம் அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரை, இது கடவுளின் சாயலையும், இயல்பையும் கொண்டு உருவாக்கப்பட்ட மனிதர்கள் வாழும் இடம். நமது ஒரு சில சகோதரர்களின் இதயங்கள் பழிவாங்கல் மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்துள்ளன. அவர்களின் அவநம்பிக்கையான தருணங்களில் அவர்களுக்கு வழிகாட்ட யாராவது ஒருவர் தேவை. புனித குழந்தை தெரேசம்மாள் மரண தண்டனைக் கைதியான பிரஞ்சினியை, ‘என் முதல் குழந்தையே!’ என்று அழைத்தது போல், சிறைக்கம்பிகளுக்குப் பின் இருக்கும் இந்த உடைந்து போனவர்களே எங்கள் குழந்தைகள்! கடவுள் எங்களுக்கு அளித்திருக்கிற விலைமதிப்பற்ற பரிசு! மோசேயிடம் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பணி ஒப்படைக்கப்பட்டதுபோல, நாங்களும் எங்கள் சகோதரர்களை வழிநடத்தவும், அவர்களின் ஆன்மாக்களை, கடவுளை நோக்கி மேலே எழுப்பிடவும் அழைக்கப்பட்டுள்ளோம். அவர்கள் காயப்பட்டு இருக்கும் இந்நேரத்தில் நாங்கள் அவர்களை அணுக வேண்டும்.

பிஎம்ஐ - துணிவு உள்ள ஊழியராக இருக்க அழைப்பு

நமது மீட்பர் துணிவோடு இருந்ததுபோல, பிஎம்ஐ தொண்டர்களாகிய நாங்களும் துணிவோடு இருக்க அழைக்கப்படுகின்றோம். அவர் உண்மைக்காக நின்றபோது துணிவோடு இருந்தார். அவர் எருசலேம் ஆலயத்தை சுத்தம் செய்தபோது துணிவோடு இருந்தார். அவர் பரிசேயர்களையும், சதுசேயர்களையும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்று அழைத்தபோது துணிவோடு இருந்தார். பாவியான பெண்ணை, அவள் கண்ணீரால் தன் பாதங்களைக் கழுவ அனுமதித்தபோது துணிவோடு இருந்தார். அவர் பாவிகளுடனும், ஒதுக்கப்பட்டவர்களுடனும் உணவு உண்டபோது துணிவோடு இருந்தார். தொழுநோயாளிகளைத் தொட்டு அவர்களைக் குணப்படுத்தியபோது துணிவோடு இருந்தார். அவர் 5000 பேருக்கு உணவளித்துவிட்டு எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் என்று சீடர்களிடம் சொன்னபோது துணிவோடு இருந்தார். அவர் 99 ஆடுகளை விட்டுவிட்டு தொலைந்து போன ஓர் ஆட்டினை தேடிச் சென்றபோது துணிவோடு இருந்தார். அவர் தைரியமாக பொது இடங்களில் போதித்தபோது துணிவோடு இருந்தார். அவர் முடக்குவாதமுற்றவனிடம், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொன்னபோது துணிவோடு இருந்தார். அவர் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், ‘நானும் உன்னை தீர்ப்பிடவில்லை, போ இனிமேல் பாவம் செய்யாதே!’ என்று சொன்னபோது துணிவோடு இருந்தார்.

அவர் பாவிகளை மன்னித்தபோது துணிவோடு இருந்தார். அவர் சிலுவையைச் சுமந்துகொண்டு, பொறுமையாக கல்வாரிக்கு நடந்தபோது துணிவோடு இருந்தார். அவர் சிலுவையில் கள்வனை மன்னித்தபோது துணிவோடு இருந்தார். அவர் கடவுளின் பிள்ளைகளை மீட்க சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தபோது துணிவோடு இருந்தார். இதுவே பிஎம்ஐ தன்னார்வத்தொண்டர்கள் ஒவ்வொருவரும் துணிவுள்ள இறைவனிடமிருந்து பெறும் அழைப்பாகும். நமது சகோதரர்களைச் சந்திப்பதற்காகச் சிறைக் கதவுகள் வழியாகச் செல்லும்போது, துணிவோடு பேசி, துணிச்சலுடன் நடந்து, துணிவோடு செயல்பட்டு, துணிவோடு வாழ்ந்து, துணிவோடு இறந்த நம் கடவுளைப் பார்க்கிறோம். பிஎம்ஐ தன்னார்வத்தொண்டர்கள் சிறைக் குடியிருப்புகளிலே தங்கி வசிப்பவர்கள் போல, இரவில் கூட சிறைச்சாலைக்கு செல்கிறார்கள், எந்த நேரத்திலும் காவல் நிலையங்களுக்குச் செல்கிறார்கள், குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றங்களுக்கு செல்கிறார்கள்.

நீங்கள் எங்களுடன் கரங்கள் கோர்க்க முடியுமா?

வாழ்க்கை ஒரு வரம்! கோவிட்-19 பெருந்தொற்று வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்தது! நோயாளிகள் தங்கள் ஊர்களிலும், வீடுகளிலும், ஆம்புலன்ஸ்களிலும் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்தபோது, மூச்சு எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நாம் உணர்ந்தோம்! அனைத்து மருத்துவர்களும் தங்கள் பராமரிப்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் உயிரையும் காப்பாற்ற முயன்றனர். ஒவ்வொரு மருத்துவரும், செவிலியரும் மற்றும் முன்கள பணியாளர்களும் கொடிய வைரஸிலிருந்து மனிதக் குலத்தைக் காப்பாற்ற உழைத்தனர். வாழ்க்கை விலை மதிப்பற்றது! ஒவ்வொரு ஆன்மாவும் விலை மதிப்பற்றது! எந்த ஆன்மாவும் அழிவை அனுபவிக்கக்கூடாது. காணாமல் போனவர்களை தேடி மீட்கவே இயேசு வந்தார். “நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை” (யோவா 18:9). சிதறிய தம்முடைய பிள்ளைகளை ஒன்று கூட்டி சேர்க்கவே, நம்முடைய மீட்பர் தம் உயிரைக் கொடுத்தார். சிறைச்சுவர்களுக்குப் பின்னால் இந்த சிதறிய பிள்ளைகளை நீங்கள் காணலாம். அவர்கள் சிதறடிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுவிட்டது. பிஎம்ஐயின் பணியானது சிதறிய பிள்ளைகளை ஒன்று சேர்க்க வந்த, கைவிடப்பட்டவர்களை ஒன்று கூட்ட வந்த கிறிஸ்து இயேசுவின் பணியை போன்றதே. பிஎம்ஐயின் பணி தொலைந்து போனதைத் தேடி வந்த இயேசுவின் பணியை போன்றதே. நீங்கள் எங்களுடன் கரங்கள் கோர்க்க முடியுமா?

Comment