No icon

எச்சரிக்கை: மத்திய நிலத்தடி நீர் ஆணைய அறிவிப்பு

நாம் தண்ணீர் அகதிகள் - ஆதலால்

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னமே வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. எம் பகுதியில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை வந்து கொண்டிருந்த குழாய்த் தண்ணீர் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை என்ற நிலையில்தான் கிடைக்கிறது. மலையும் இயற்கை வளங்களும் நீர்நிலைகளும் அதிகம் கொண்ட குமரியின் தற்போதைய நிலையே இப்படி என்றால் தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் நிலவரம் சொல்லவும் வேண்டுமோ? பல அடி ஆழத்திற்குக் கிணறுகள்
அல்லது ஆழ்குழாய் கிணறுகள் தோண்டினா லும் கிடைப்பது கொஞ்சம் நீர், அதுவும் உவர்ப்புத் தன்மையுடன். அதிலும் குறிப்பாக, கடற்கரைக் கிராமங்களில் தண்ணீர் தேவை முதன்மை சவாலாகவே உள்ளது. சுனாமிக்கு பின் வந்த மாற்றம் ஒருபுறம் என்றாலும் கடற்கரைக் கனிம மணல் அகழ்வு பெயரில் மொட்டையடிக்கப்படும் மணல் மேடுகளால் குடிநீர் ஆதாரத்தைப் பாதுகாக்க முடியாத சூழல் தொடர்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை என்பது இன்றைய குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது என்பதே உண்மை.
இந்நிலையை நினைத்து ஆதங்கப்படு கிறோமே தவிர மாற்றத்திற்கான காரியங்களைத் திட்டமிடுவதில் மெத்தனத்தைப் பார்க்க முடிகிறது. கண்முன்னே நான்கு வழிச்சாலை பெயரில் நம் மலைகள் மொட்டையடிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டிருக்கிறோம்; குமரியின் நீராதாரங்களான குளம், குட்டைகள் சாலைக்காக மூடப்படும் நிலை; போதிய பராமரிப்பற்ற நிலையில் நீர் நிலைகள். இந்நிலை தொடர்ந்தால் குமரி விரைவில் பேரழிவை சந்திக்கும், பாலைவனமாக மாறிவிடும் என்பது உறுதி! நம் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. மக்களுக்கான அரசு என்று சொல்லிக் கொள்பவர்களும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தான் பிசிலரி வாட்டர் கிடைக்குமே!
தண்ணீர் - அடிப்படை தேவை எல்லாமே? காமெடிதான்
உயிர்வாழ அடிப்படைத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். நாம் உணவில்லாமல் பல நாள்கள் வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல்??? தற்போது உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.  2025 ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும் என்கிறது ஐ.நா. புள்ளிவிவரம். இப்பொழுதே பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் நீரின்றி மக்கள் வெளியேறி ‘தண்ணீர் அகதிகளாக’ மாறி வருகின்றனர். இந்தியாவிலும் குறிப்பாக
தமிழகத்திலும் தண்ணீரின்றி அல்லல்படும் கிராமங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. மூன்றாவது உலகப்
போர் தண்ணீருக்கான யுத்தமாகவே அமையும்
என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு பருமழை வழக்கமாக பெய்ய வேண்டிய அளவு பெய்யவில்லை. பல மாவட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. சில மாவட்டங்களில் மழை
அளவு சராசரியாக இருந்தாலும் உரிய பருவத்தில் மழை பெய்யாததால் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள்
கடுமையான வறட்சியில் பாதிக்கப்பட்டுள் ளன. வேளான் பயிர்கள் கருகி உற்பத்திக் கடுமையாக குறைந்துள்ளது. குடிதண்ணீர் தட்டுப்பாடு அபாயம் தொடர்கிறது.
இந்நிலையில்தான் மத்திய அரசின் சமீபத்திய ‘மத்திய நிலத்தடி நீர் ஆணைய’ அறிவிப்பு அவசரமாய் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகிற்று. அதில் மூன்று காரியங்கள் நாம் கவனிக்க வேண்டிவை :
1.    வீடுகளில் ஒரு அங்குலத்திற்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கனமீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள் ஒரு கனமீட்டருக்கு ரூ. 2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
2.    மத்திய அரசிடம் வீடுகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த மறுப்பின்மை சான்றி தழ் பெற வேண்டும்.
3.    2019 ஜூன் மாதம் முதல் நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த வேண்டும்.
இயற்கையின் கொடையான நீர், உயிர்வாழ அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான நீர், வர்த்தகப் பண்டமாக மாறி யதைத்தான் மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம் வெளிப்படுத்துகிறது. உலக வர்த்தக அமைப்பின் காட் (ழுஹகூகூ) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தகப் பண்டமாக வரையறுத்
துள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு நாட்டி லிருந்து மற்றொரு நாட்டிற்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவதை தடைசெய்யக் கூடாது
என்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில், குடிக்கும் தண்ணீரை மானுடத் தின் அடிப்படை உரிமையாக்கக் கூடாது என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்ததன் பின்னணியும் தற்போதைய தாக்கமும் நமக்கு நன்கு தெரிகிறதா? 
தண்ணீருக்கு கொள்கையா?
தனியாருக்கு கொள்ளையா??
உலக வங்கியும் உலக வர்த்தக அமைப்பும் தங்களிடம் கடன் பெற வரும் நாடுகளுக்கு வைத்திருக்கும் விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? அவை தண்ணீர் குறித்தவையே! மூன்று அம்சங்களை வலியுறுத்துகின்றன. ஒன்று, ஒட்டுமொத்தமாக தண்ணீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்து விடுவது. இரண்டு, நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது. மூன்றாவது, தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்து விடுவது - இவற்றில் ஏதாவது ஒரு நிபந்தனையாவது ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே ஒரு நாடு உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்புகளிடமிருந்து கடன் பெற முடியும்.
இக்கொள்கையின் படி இங்கிலாந்து ஒட்டுமொத்த தண்ணீர் விநியோகத்தையும் மேலாண்மையையும் தனி
யாரிடம் ஒப்படைத்துள்ளது; பிரான்ஸ் தனியார் நிறுவனங் களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. இதனால் விவெண்டி, சூயஸ், பெக்டெல் போன்ற உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் உள்ள 10 நிறுவனங்கள் 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. இன்னும் பல நாடுகளில் தண்ணீர் விநியோகிப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகின்றன.
இந்தியாவின்; தண்ணீர் கொள்கை சொல்வதெல்லாம்…
இந்தியாவிற்கென்றும் தனிப்பட்ட தண்ணீர் கொள்கை இல்லாமல் இல்லை. இந்தியாவில் நீர் பயன்பாடு மாநில பட்டியலில் வந்தாலும் மத்திய அரசு, தண்ணீர் பயன்பாடுகள் குறித்து 1987-ஆம் ஆண்டு ஒரு தேசிய நீர் கொள்கையை கொண்டு வந்தது. அதன் பின் 2002 ஆம் ஆண்டும் ஒரு தேசிய நீர் கொள்கையை வெளியிட்டது. அந்த கொள்கைத்திரட்டுதான் அமலில் இருந்து வரு கிறது. கூடுதலாக, 2012 ஆம் ஆண்டு புதிதாக தேசிய நீர்வரைவுக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் தண்ணீர் கொள்கையின் சுருக்கம் பின்வருமாறு;
    தண்ணீரை பொருளாதாரப் பண்டமாக பார்க்க வேண்டும். எனவே தண்ணீரை வீணாக்குவது, மாசுபடுத்துவது அபராதத்திற்குரிய குற்றம்.
    இந்திய அனுபவ உரிமைச் சட்டம் - 1882, பாசன சட்டங்கள் ஆகியவை நில உரிமையாளர்களுக்கு அந்த நிலத்தின் அடியில் உள்ள தண்ணீர் சொந்தம் என்று கூறுகிற பிரிவு மாற்றப்பட வேண்டும். சாத்தியமான அளவு நீரின் மறுசுழற்சி, மறுஉபயோகம், மறுநீர் பாசனம் உட்பட பொதுவாக ஊக்குவிக்க வேண்டும்.
 பாசன உபயோகத்தில் நீர் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. சொட்டு நீர் பாசனம், நீரூற்றுப் பாசனம் ஆகிய பாசன நுணுக்கங்கள், தானியங்கி பாசனமுறைகள், இயற்கையில் ஆவியாதலைக் குறைத்தல் ஊக்கப்படுத்த வேண்டும்.
    ஒவ்வொரு மாநிலத்திலும், தண்ணீர் விலை
விகிதமுறை உருவாக்கப்படவும் தண்ணீர் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான விதிமுறை களை உருவாக்கவும் ஓர் அமைப்பு இருக்க வேண்டும். நீரிலிருந்து அதிகப் பலனை உறுதி செய்திட தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    நகர்ப்புறங்களில் குடியிருப்புகளுக்கு நிலத்தின்
மேலுள்ள நீரையே பயன்படுத்த வேண்டும். மாற்றுநீர் வழங்க வாய்ப்பு இருந்தால் அதனையும் பயன்படுத்தலாம். சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரை அடிப்படை சுத்திகரிப்புக்கு பிறகு கழிப்பறைக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
    கிராமப்புறங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய மிகக்குறைந்த நீரை பயன் படுத்தும் வகையில் கழிப்பறை வசதிகள், கழிவு நீர் அகற்றுதல் ஆகியவற்றிற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
    நகர்ப்புற நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்திட வேண்டும். நீருக்கான கட்டணம் கழிவு நீருக்கானதையும் சேர்த்து வசூலிக்க வேண்டும்.
    அகில இந்திய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில் உள்ளுர் அளவில், ஆற்றுப் பாசன அளவில், தனித்தனியாக அமைப்புகள் உருவாக்கி அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செயல்படுத்த வேண்டும்.
இவ்விதமாக ஏராளமான சட்டதிட்டங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நீர் வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளவைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதிதான் வரும் ஜூன் 2019 முதல் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் வசூ லிக்கப்படும் என்கிற அறிவிப்பு. இப்பொழுதாவது உண்மை புரிகிறதா? 
தமிழகத்திற்கும் நீர் நெருக்கடி. ஆதலால்... 
உலகளாவிய பிரச்சினையாக தண்ணீர் தட்டுப்பாடும், அதில் முதலாளிகளின் கட்டுப்பாடு களும் அதிகரித்து வரும் சூழலில் நம் தமிழகத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது. துயரங்களை மட்டும் உணவாக உட்கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு நம் தமிழ்நாடு என்று சொல்லத் தோன்றுகிறது. இங்கு அன்றாடம் விவசாயிகளும், தொழிலாளர்களும், சாதாரண உழைப்பாளிகளும் துயரம் நிறைந்த முறையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சுயநல அரசியல்வாதிகளால் தமிழ்நாட்டின் முக்கியப் பெருநகரங்கள் எல்லாம் அந்நிய முதலாளிகளுக்கு தரைவார்க்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் சூயஸ்போன்ற தனியார் கம்பெனிகள் மூலம் மட்டுமே இனி தண்ணீர் விற்பனை நடைபெறும் அபாயம்! அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ஏற்கெனவே தாமிரபரணி ஆறு பெப்சி, கோகோகோலா கம்பெனிகளுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளதால்  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 86 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது கண்கூடு! 
இனி பெக்டல், சூயஸ், விவெண்டி, டாடா, ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் கம்பெனி களிடமிருந்துதான் குடிநீர் நமக்கு வரும். அதற்கு மாதந்தோறும் ஏராளமான பணத்தைச் செலவு செய்ய வேண்டியது ஏற்படும். போதிய தண்
ணீரின்றி விவசாயம் செய்பவர்கள் அத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.
தண்ணீரைப் பாதுகாப்பதற்குத்தான் இந்த கட்டுப் பாடுகளும் திட்டங்களும் என்று யாராவது இனியும் நம் காதில் பூ சுத்துவது செல்லுபடியாகாது. காரணம், ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்வோம்.
இந்தியாவில் சராசரியாக மழைப் பொழிவு மூலம் 4000 பில்லியன் கனமீட்டர் நீர் கிடைக் கிறது. இதில் இயற்கையாக ஆவியா தல், கடலுக்குச் செல்லுதல் போக 1869 பில்லியன் கனமீட்டர் நீர் ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர்நிலைகளுக்கு செல்கிறதாம். இந்த நீரில் 1123 பில்லியன் கனமீட்டர் நீர் மட்டுமே விவசாயத்திற்கு, குடிநீர், இதர பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்துகிறோம். இத்தகவலை சொல்வது யார் தெரியுமா? 2012 - நீர் கொள்கை வரைவுத் திட்டம். அதாவது, நாம் பயன்படுத்தும் நீர், கிடைக்கும் மொத்த நீரில் நான்கில் ஒரு பங்கைவிட சற்று அதிகம் அவ்வளவே. கிட்டத்தட்ட மூன்று பங்கு நீர் இயற்கையினால் உறிஞ்சப்படுகிறது; ஆவியாகிறது; கடலில் கலக்கிறது. இந்த மூன்று பங்கு நீரை சேமிக்க திட்டம் உருவாக்குவதற்குப் பதிலாக, நாம் பயன்படுத்தும் நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் தண்ணீரைத் தனியாரிடம்? தாரை வார்க்க முயற்சி செய்வது யாரை ஏமாற்ற? முறையாக நிதி ஒதுக்கீடு செய்து தேவையற்ற விதங்களில் வீணாகும் நீரை சேமித்தாலே தண்ணீர் பற்றாக்குறையை குறைக்க இயலும். 
மக்களே! இனியும் ‘நமக்கேன் வம்பு’ என்கிற மனநிலையில் ஒதுங்கி நிற்பது சரியல்ல; நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் விற்பனையை அமோகமாகச் செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்க்காமல் இருப்பதும் முறையல்ல; தண்ணீரைத் தேவையற்ற விதங்களில் வீணடிக்கும் நம் செயல்பாடுகளும் நியாயமல்ல. தண்ணீர் வியாபாரம் என்பது இயற்கையின் இயல்புக்கு எதிரான வன்கொடுமை; நம் உரிமைக்கும் பண்பாட்டிற்கும் எதிரான சித்ரவதை. ஆறு, குளம், ஏரிகளை மாசுபடுத்தாமல் காப்பதும், மாசடைந்திருப்பவற்றை தூர்வாரி சுத்தம் செய்வதும், மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதை தடுத்து நிறுத்துவதும், மணல் கொள்ளை வழி ஆற்றுப்படுகைகளை மலடாக்குதலைத் தவிர்ப்பதும், மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்துவதும், கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கையாளுதலும், தேவையற்ற விதங்களில் நீர் வீணாவதைத் (ஒழுகும் குழாய்கள், குழாய்களை திறந்து வைத்துக் கொண்டே பல் துலக்குதல்…) தவிர்ப்பதும், குறைந்தளவு தண்ணீர் தேவைப்படும்; வறட்சி எதிர்ப்பு சக்தியுள்ள தாவரங்களைப் பயிரிடுவதும், சமையலறை மற்றும் குளியலறை கழிவுத் தண்ணீரை மீண்டும் பயன்படும் விதமாக தோட்டத்திற்கு பயன்படுத்துவதும்… இப்படி அன்றாட வாழ்வில் நற்செயல்பாடுகளை முன்னெடுத்து செயல்படுவதே நமக்கும் நம் வருங்கால சந்ததிக்கும் உகந்தது. ஒரு நாட்டின் நலனும் குடிமக்களின் மேம்பாடும் அந்நாட்டின் நீர்வளத்தால் உயரும் என்பதை சோழ மன்னனை வாழ்த்திய பாடல் நமக்கு புலப்படுத்துகிறது
வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான்!

Comment