No icon

திருஅவை என்னும் ஓர் அன்பு சமுகம்

பொதுக்காலம் 23ம் ஞாயிறு
(எசே 33:7-9 உரோ 13:8-10 மத் 18:15-20)
திருஅவை என்னும் ஓர் அன்பு சமுகம்
திருஅவை என்னும் ஓர் அன்பு சமுகம். அது அழைத்து ஒன்று கூட்டப்பட்ட கடவுளின் திருக்குடும்பம். இயேசு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட கட்டடம். தூய ஆவியானவர் குடியிருக்கும் ஆலயம். அதன்உறுப்பினர்கள் ஒரு உடலின்உறுப்புக்கள்போல் இன்றியமை யாத அங்கங்கள். ஒரு உறுப்பின் துன்பமும் மகிழ்ச்சியும் மற்ற உறுப்புக்களையும் வெகுவாகப் பாதிக்கின்றது. அதன் உறுப்பினருள் ஒருவர் தம் கால்போகும் பாதையில் செல்ல அனுமதிக்க முடியாது. ஒரு நபரின் தவறுகள் சிறிய தீக்குச்சிபோல் முழுக்காட்டையும் எரித்து சாம்பலாக்கிவிடும். தவறான வாழ்வுக்குப் பழகிப்போன ஒரு குழுவின் உறுப்பினர் ஒரு கோப்பை பாலில் உள்ள ஒரு துளி விஷம் போன்றவர். மத் 18 ஆம் பிரிவு திருஅவையைப் பற்றியதாகும். அதில் சிறியோருக்குச் சிறப்பிடம் தர வேண்டும். அவர்களைப் பாவத்தில் வழிச்செய்வோரைக் கண்டிப்போடு திருத்த வேண்டும். வழி தவறிச்செல்லும் மந்தையைத் தேடிச் சென்று ஒன்றுகூட்டிச் சேர்க்க வேண்டும். கடவுள் நிபந்தனை இன்றி மன்னிக்கின்றார் என்பதன் அடிப்படையில் உறுப்பினர்களும் நிபந்தனை இன்றி மன்னிக்க வேண்டும், போன்ற கருத்துக்கள் இடம் பெறு கின்றனர். இன்றைய நற்செய்தி தவறுசெய்வோரைத் திருத்தும் வழிமுறையைக் கற்பிக்கின்றது. 


குற்றமற்றவர் எவர்?
‘சகோதரன்’ என்ற சொல் நமது தாயின் உதரத்திலிருந்து பிறந்தவர் (சக-உதரம்) என்ற பொருள் கொண்டது. திருஅவையின் உறுப்பினர்கள் ‘சகோதர சகோதரிகள்;’ என்ற முறையில் இரத்தபந்தத்தால் இணைக்கப்பட்டவர்கள். அவர்களுக் குள் - உயர்ந்தவர் தாழ்ந்தவர், சிறியவன் - பெரியவன், ஆட்சியாளன் - அடிமை போன்ற வேற்றுமை உணர்வுகள் இல்லை (1 திமோ 5:1-2). மானிடப் பிறவி குறையுடையது. நாம் விண்ணகத்தில் முழுமையுடையவர்காள மாற்றம் பெறுவோம். மானிட வாழ்வில் “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.” நீதிமான்கூட பாவம் செய்கின்றார் (நீமொ 24:16). சிறையில் தண்டணை அனுபவிப்பவர்களுக்கும் நம்முள் பலருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் மாட்டிக் கொண்டார்கள், நாம் இன்னும் மாட்டிக்கொள்ளவில்லை. பிறக்கும் போதே யாரும் தீவிரவாதியாகவோ பாவியாகவோ பிறக்கவில்லை. தவறிழைப்போர் பலர் அறியாமல்,தெரியாமல், புரிந்துகொள்ளாமல், பலவீனத்தால், இயலாத சூழலினால், முதிர்ச்சியடையான சமுக பழக்கங்களினால் செய்யலாம். ஒவ்வொரு மனிதரும் எதிர்தரப்பு வக்கீலாக மற்றவர்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கவும், நீதிபதிபோல் தண்டனைத் தீர்ப்பு எழுதவும்துவங்கினால் ஊருக்கொருசிறைச்சாலைத் தேவைப்படும். குற்றம் செய்யும்அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும் என்றுசட்டம் வகுத்தால்பலருக்கு மூன்று தூக்குத் தண்டனை களும், ஐந்து ஆயுள் தண்டனைகளும் கிடைக்கும். அனைவரும் புனிதர் களாக வாழ்ந்துவிட்டால் நல்லதுதான். நாம் வாழ்வது மனிதப் பிறவியாகும், புனிதப் பிறவி அல்ல. தவறிழைக்கும் திருஅவையின் உறுப்பினரைத் திருத்தி மீண்டும் கடவுளின் மகனாக்கும் பொறுப்பு நமதாகும் என்று நற்செய்தி அறிவுறுத்துகின்றது. ஒருவர் தாம் நினைத்ததை எல்லாம் நிறைவேற்ற அனுமதிப்பதும் தவறாகும். நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுவதும் கண்ணில் பட்டதெல்லாம் தமதாக்கத் துடிப்பதும் சுதந்திரமே அல்ல. தேவையற்றவை தறிக்கப்பட்டால் தான் மரம் நன்றாக வளர்ந்து பலன் தரும். இல்லாவிட்டால் அது காட்டு மரமாக மாறிவிடும். திருத்துதல் நேர்மறையாக, வழிகாட்டுதல் அவசியமானதாகும்.   
தீர்ப்பெழுதாது திருத்தும் அன்புள்ளம்
திருத்தந்தை 23ஆம் யோவான், வெனிஸ் நகர ஆயராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அவரது மறைமாவட்டத்தில் வாழ்ந்த பங்குத்தந்தை ஒருவர் தமது பங்குப்பணியைக் கண்டுகொள்ளாது, சீட்டாடுவதிலும் குடிப்பதிலும் நாட்களை விருந் தகங்களில் செலவு செய்தார். அதைக் கேள்விப்பட்ட ஆயர் ஒருநாள் தமது செயலருடன் பங்குக்குச் சென்றார். பங்குச் செயலரிடம் பங்குதந்தை எங்கிருக்கின்றார் என்பதைக் கேட்டறிந்தபின், அந்த விருந்தகத்திற்குச் சொன்றார். பங்குத்தந்தை அங்கு சீட்டாடுகின்றார் என்பதை உறுதி செய்தபின், ஆயர் தம் செயலரை உள்ளே அனுப்பி, - ஆயர் உங்களிடம் ஒப்புரவு அருட்சாதனம் செய்ய வந்துள்ளார் என்று கூறும்படி - அனுப்பினார். பங்குத்தந்தையும் ஆயரோடு கோவிலுக்குச் சென்றனர். ஆயர் பங்குதந்தையிடம் ஒப்புரவு அருட்சாதனம் செய்துவிட்டு ஒரு வார்த்தையும் சொல்லாமல், தம் இல்லத்திற்குத் திரும்பி விட்டார். ஆயரின் இந்தச் செயல் பங்குதந்தையின் இதயத்தை ஊடுருவியது. தாம் கடமை தவறிய நேரங்களை நினைத்துப் பார்த்து வருந்தி மனம்மாற்றம் அடைந்தார். அன்றிலிருந்து தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார். பெரிய தண்டனைகளால் செய்ய முடியாத செயலை அன்பு வார்த்தை, அன்புச் செயல், ஓர் இரக்க செயல் திருத்திவிடும் என்பதற்கான உதாரணமே இதுவாகும். 


பாவம் என்பது என்ன
பாவம் (குற்றம்) என்பதை இங்கு குறிக்க ‘கமார்த்தியா’ கிரேக்கச் சொல்லை மத்தேயு பயன்படுத்துகின்றார். கமார்த்தியா என்றால் பொதுவாக தம் நோக்கத்திலிருந்து தவறிவிடல் என்பதாகும். தனித்திருத்தல், மற்றவரிடமிருந்து விலகிக் கொள்ளல், தூரத்தில் இருத்தல், உறவை உடைத்துக் கொள்ளல், நீதி நேர்மைப் பாதையிலிருந்து விலகிச் செல்லல் என்றும் இதைப் பொருள் கூறலாம். பாவம் செய்வோர் உறவைச் சிதைத்து, கடவுள் மற்றும் அயலானின் அன்பிலிருந்து விலகி, கடவுள் தரும், நிறைவான வாழ்வு, ஆசீர்வாதம், குணப்படுத்துதல் போன்றவற்றிலிருந்து தம்மைத் தனிமைப்படுத்துக் கொள்கின்றனர். அனைத்திற்கும் மேலாக, ஒருவரின் குற்றங்கள் அவரையே திருப்பித் தாக்குகின்றன. குற்றங்களிலும் பாவச்செயல்களிலும் படுத்துக் கிடப்போர் இயற்கையாகவே கடவுள் தந்த உள்ளார்ந்த மகிழ்ச்சி மற்றும் உள்மன அமைதியிலிருந்து தம்மையே தனிமைப்படுத்திக் கொண்டு தவிக்கின்றனர் என்பதே உண்மையாகும். அடிக்கடிக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் ஒருவகையான சிறைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த வார நற்செய்தியில் வாசித்ததுபோல் ஒருவர் உலகெல்லாம் தமதாக்கிக் கொண்டு வாழ்வையும் அதன் மகிழ்ச்சியையும் இழப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஒருவர் கடவுளிடமிருந்து விலகி அவரின் ஆசீர்வாதங்களை இழந்து ஏதோ மனிதத் தோற்றத்தோடு வாழ்வது சரியல்ல. எனவே, திரு அவையில் உறுப்பினர் அவரிடம் சென்று “நீ எங்களுக்கு முக்கியமானவர். உன்னை இழக்க நாங்கள் விரும்பவில்லை” என்று அன்புடன் திருத்தி மீண்டும் மந்தைக்கு அழைத்துவரும் வரைமுறையை நாம் இன்று வாசிக்கின்றோம். 


திருத்துவதன் நான்கு படிநிலைகள்
ஒருவரைத் திருத்தி மீண்டும் மந்தையில் சேர்ப்பதற்கான நான்கு படிநிலைகளை நற்செய்தியில் வாசிக்கின்றோம். 
1. தனிமையில் நேராகப் பேசுதல்: கைக்குழந்தை களைத் திருத்தப் பெரிய தடியை யாரும் பயன்படுத்துவதில்லை. அன்பான சொற்கள், உண்மையான உள்ளார்ந்த உரையாடல்  பல பிரச்சினைகளுக்கு நிலையான மருந்தாகிவிடும். மற்றவர்களுடன் அன்புடன் உரையாடும்போது கொஞ்சம் சாதுவான குரலில் பேசுகின்றோம். கோபம் கொள்ளும் போது தான் சப்தமிடுகின்றோம். ஏனெனில் கோபம் கொள்ளும் வேளையில் இருவர் அருகில் இருந்தாலும் அவர்களின் இதயங்கள் தொலைவில் இருக்கின்றன. பிறரின் சிறு குற்றங்களைப் பலர் முன் பறைசாற்றுவது (நீமொ 25:9) யாருக்கும் நன்மை பயப்பதில்லை. “குற்றத்தை எடுத்துக் காட்டுங்கள்” என்பது குற்றத்தைச் சுட்டிக்காட்டி அவர்களைக் குற்றவாளி ஆக்குவதை அல்ல, மாறாக, திருத்தும் நோக்குடன் அன்புடன் தனிமையில் யாருக்கும் தெரியாமல் அணுகுவதைக் குறிக்கின்றது (லேவி 19:17). அவர் தம் குற்றத்தை உணர்ந்து மனம்மாற்றம் அடைந்து மீண்டும் திருஅவையில் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்ளும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும் இதுவே திருஅவையின் வழக்கமாகும் (1 திமோ 5:20, 2 திமோ 4:2, தீத்து 2:15, 3:10, கலா 6:1). குற்றம் செய்தவர் திசைதெரியாத பறவைபோல், ஆயனை இழந்த ஆடுபோல் தடுமாற்றம் அடைகின்றார். பல்வேறு சமுக, அரசியல் பிரச்சினைகளுக்கு உரையாடலே சிறப்பான தீர்வாகும். மேலும் பலர் மத்தியில் தனித்திருப்பவர் வாழ்வில் முதிர்ச்சி அடைவது கடினம். இங்கு மத்தேயு தாழ்ச்சி பற்றி புதிய புரிதலைத் தருகின்றார்: அதாவது தவறிழைக்கப்பட்டவர் தவறிழைத்தவரைத் தேடிச் செல்ல வேண்டும்.    
2. இரண்டு மூன்று சாட்சிகள் முன்னிலையில்: ஓவ்வொரு காரியமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் மூலம் எண்பிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம் (இச 19:15). இணைச்சட்ட நூல் குற்றம் சுமத்துவதை எண்பிக்கும் சாட்சிகளைக் குறிக்கின்றது. இங்கு தவறு செய்தவரை வெற்றி கொள்ளும் நோக்குடன் உடன் அழைத்துச் செல்லும் சாட்சிகளைக் குறிக்கின்றது. உண்மையின் முகம் பலரின் கண்களுக்குத் தெளிவாகத்தெரியும். மூன்றாவது நபர், குற்றம் செய்தவர் மற்றும் குற்றம் அனுபவித்தவர் இருவரின் நிறைகுறைகளை நன்றாகத் தெரிந்து சரியான முடிவு எடுக்க முடியும். இருவரைவிட பலரால் சிறப்பாக சிந்தித்துச் செயலாற்ற முடியும். 
3. திருஅவை, அன்பு சமுகத்தின் உறுப்பினர் என்ற முறையில் அவரை அணுகி மீண்டும் மந்தைக்கு அழைத்துவர வேண்டும். காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்வதே ஆயனின் கடமையாகும். மந்தையை இழந்துவிடும் ஆயன் தம் வாழ்வில் தோல்வியடைகின்றார். 
4. ஒதுக்கப்பட வேண்டியது பாவமே தவிர பாவிஅல்ல: எதுவும் முடியாத சூழலில் அவர் சமுதாயத்தி லிருந்து ஒதுக்கப்பட்டவராக இருக்கட்டும் என்று நற்செய்தி கூறுகின்றது.  இப்படி ஒதுக்கி வைத்தல் என்பது கிறிஸ்தவ செயல் அல்ல. இயேசு ஒருபோதும் யாரையும் வேண்டாம் என்று கூறவில்லை. எவரும் கடவுளின் அருளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் பாவிகளைத் தேடி அலைந்து அவர்களுடன் உணவு உட்கொண்டார். அவர்களையும் இறையரசின் உறுப்பினர்களாகச் சேர்த்து கடவுளின் குழந்தைகள் ஆகும் வாய்ப்பைத் தந்தார். நிரந்தரமான பாவிகளாக கருதப்பட்ட விபச்சாரிகளும், வரிதண்டுவோரையும் மன்னித்து ஏற்றுக்கொண்டார். இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்ட பெண்களை யூத சமுதாயத்தின் உரிமைக் குடிமக்களாக்கினார். கடவுள் முன்னிலையில் ‘தீண்டத்தகாதவர்கள்’ எவரும் இல்லை. எனவே, “அவர் வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்” என்பது அவர்களை எச்சரித்தது திருத்தும் நோக்கம் கொண்டது. கடவுளுக்கு நிரந்தரமாகத் தண்டிக்கத் தெரியாது. அழிவு என்பது கடவுளின் இறுதி வாதம் அல்ல. தீர்ப்பின்போதே அவரின் இரக்கமும் பிரசன்னமாகியுள்ளது. அவரது இரக்கம் அவரின் தீர்ப்பைவிட பன்மடங்கு ஆற்றல் படைத்தது. குற்றம் செயத நிலையிலும் ஒதுக்கி வைக்கப்படுபவர் உடைந்து போவார்  (2 கொரி 2:7-11) என்று பவுல் கூறும் அறிவுரை இங்கு நோக்கத் தக்கது.தவறு செய்கின்ற சகோதரனைத் திருத்து.
பொறுமையோடு திருத்து, அன்போடு அரவணைத் திடு. அவனை எந்த சூழலிலும் கைவிட்டு விடாதே என்ற கருத்து இங்கு அழுத்தும் பெறுகின்றது. நீ எத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்தாய் என்பதே கடவுளின் முன் சிறப்பு பெறுமே தவிர, நீ எத்தனை பேருக்கு தீர்ப்பு எழுதினாய் என்பதல்ல. 
எச்சரிப்பதும் அன்புச்செயலே
திருஅவையின் உறுப்பினன் நீதி செய்ய வேண்டும், அதே சமயத்தில் அநீதியை வேரறுக்க வேண்டும். அநீதியான சூழலில் அமைதி காப்பது அநீதிக்குத் துணைபோகும் செயலிலிருந்து வேறுபட்டதல்ல. தீயவன் ஒருவன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கொண்டு தாண்டவம் ஆடும்போது அமைதி காக்கும் நீதி மன்றங்கள், அறிவார்ந்த சமுதாயம், ஊடகங்கள் அநீதிக்கு துணை செல்கின்றனர் என்பதில் ஐயமில்லை. அறிவிக்க வேண்டியவற்றை பலர் முன்னிலையில் அறிக்கையிடும் கடமை அனைவருக்கும் உண்டு. இதுவரை அநீதியாக தரப்பட்ட தீர்ப்புக்கள் மீண்டும் திருத்தப்பட பாடுபடுவதும் அறிவார்ந்த சமுதாயத்தின் கடமையாகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் தீமைகளைத் தீர்க்கமாகத் திருத்தும் சாமகாவலனாக எசேக்கியேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை முதல் வாசகம் கூறுகின்றது. அவர் இஸ்ரயேல் மக்களுக்கு தீமை நிகழாமல் தடுக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் தீய வழிக்குச் செல்லாமலும் தடுக்க வேண்டும். இதன்படி எச்சரிப்பதும் அன்பின் வெளிப்பாடே. கடவுளை உண்மையிலே அன்பு செய்பவர் கடவுள் தந்த கட்டனைகளை மீறாதே என்று தமக்குத் தாமே கட்டுப்பாடு விதித்துக் கொள்கின்றார் (உரோ 13:8-10). எச்சரிக்கை விளக்குகளைப் பார்க்காமல் செல்வோருக்கு விபத்துகள் காத்திருக்கின்றன. 
தாய் தந்தைகளின் எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் சென்ற குழந்தைகள் பலர் வாழ்வைவே இழந்து நிற்கின்றனர். பலரை ஐந்தில் வளைக்காமல் வளர்த்தமையால்தான் அவர்கள் ஐம்பதில் வளையாமல் போயினர். ஆசிரியர்களின் எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாத மாணவர்கள் பலர் வாழ்வுத் தோல்விகளைச் சந்தித்துள்ளன. திருத்தும் நோக்குடன் தாய் தந்தை கொள்ளும் கோபம் பாவமல்ல. அனைவரையும் அன்புடன் அணுகி தனிமையில் உரையாடுவதே பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வாகும். நமக்கு அறிமுகமானவர்கள் வாழ்வில் தடம்புரளும் வேளைகளில் அவர்களை எச்சரித்து திருத்தும் வேளையில் அவர்களின் வழிகாட்டியாகின்றோம். ஒரு நல்ல நட்பையும் சம்பாதிக்கின்றோம்.
 

Comment