No icon

12, மே 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டவருடைய விண்ணேற்ற விழா -  திப 1:1-11; எபே 4:1-13; மாற் 16:15-20

நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்!

ஜெர்மனி நாட்டில் பிறந்த மருத்துவர் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer, 1875-1965). தத்துவம், இசை, கிறிஸ்தவ சமயம் ஆகிய மூன்று துறைகளிலும் முனைவர் பட்டம் பெற்றவர். ஓராண்டு இராணுவத்தில் பணியாற்றிவிட்டு, மீண்டும் மருத்துவம் படித்து அத்துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றார். 1911-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்த சுவைட்சர், கல்வியறிவு இல்லாமல் வறுமையிலும், கடும் நோயிலும் வாடிய ஆப்பிரிக்க நாட்டுப் பழங்குடியின மக்களுக்காக இலாம்பர்னே என்ற கிராமப் பகுதியில் ஒரு சிறிய மருத்துவமனையை அமைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். மனிதநேயத்துடன் ஆப்பிரிக்காவில் இவர் ஆற்றிய 40 ஆண்டு கால மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகளும், அணு ஆயுதங்களும் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952-ஆம் ஆண்டு உலக அமைதிக்கான ‘நோபல் பரிசு’ இவருக்கு வழங்கப்பட்டது. 

இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு இவர் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றார். அவரை வரவேற்க செய்தியாளர்கள், பெரும் தலைவர்கள் இரயில் நடைமேடையில் காத்திருந்த நேரத்தில், ஆல்பர்ட் அவர்கள் இரயிலை விட்டு இறங்கியதும் கரவொலியும், காமிரா ஒளிவிளக்குகளும் அந்த இடத்தை நிறைத்தன. அவரோ அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல், தன்னைச் சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி, அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த நடைமேடையில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி தடுமாறி நடந்து கொண்டிருந்த வயதான கறுப்பினப் பெண்மணி ஒருவருக்கு உதவி செய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். இதைக் கண்ட ஒரு செய்தியாளர் மற்றொருவரிடம், “நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்” என்று கூறினார்.

இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் இதயத்தின் ஞானம்: ஒரு முழு மனிதத் தகவல் தொடர்பு நோக்கி’ என்ற கருப்பொருளில் 58-வது உலகச் சமூகத் தொடர்பு நாளையும் இன்று சிறப்பிக்கின்றோம். ‘இயேசு விண்ணகம் சென்று எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்’ என்று நாம் நம்பிக்கை அறிக்கையில் அறிக்கையிடுகிறோம். இந்த நாள் நற்செய்தியைப் பறைசாற்றவும் (மாற் 16:15), கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழவும் (திப 1:8) நம்மை அழைக்கிறது.

‘இயேசு விண்ணேறிச் சென்ற இடத்திற்கே நாமும் செல்வோம்’ (1தெச 4:17) எனும் நம்பிக்கையையும் இந்நாள் நமக்குத் தருகிறது. விண்ணேற்றம் அடைவதற்குமுன் இயேசு தம் சீடர்களுக்கு “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16:15) என்னும் இறுதி அறிவுரையை வழங்குகிறார். இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய இறுதிக் கட்டளையும் இதுதான்.

இயேசுவின் நற்செய்திப் பணி உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்; உலக மக்கள் அனைவரும் நற்செய்தியைப் பெறவேண்டும்; நற்செய்திப் பணி நில வரையறையும், கால வரையறையும் கடந்து ஆற்றப்பட வேண்டும்; இதற்காகத்தான் இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்; தமது பணியை முடித்துக்கொண்ட இயேசு, இனி சீடர்களின் வழியாக அப்பணி தொடர வேண்டும் என்று விரும்புகிறார்; அதை ஒரு கட்டளையாகவே சீடர்களுக்கு அளிக்கிறார். இயேசு பணித்தவாறே சீடர்களும் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றினர்.

‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்’ என்பது இயேசுவின் பணி தொடர்வதற்கான அடிப்படைக் கூற்று. நற்செய்தி ஒரு வித்து! இது உலகில் ஊன்றப்பட்டு, வளர்ச்சி பெற்று, உலக மக்களை ஆட்கொள்ளும். எனவே, நற்செய்தி அனைத்து மக்களுக்கும், அனைத்துச் சூழல்களிலும் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், இன்று ‘நற்செய்தியைப்  பறைசாற்றுதல்’ என்று சொன்னதும், கோவில்களில் முழங்கும் சக்தி வாய்ந்த மறையுரைகள்தாம் நம் நினைவுக்கு வருகின்றன. நற்செய்தி அறிவித்தல் என்பது அருள்பணியாளர்கள், துறவியருக்கான பணி என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒதுக்கி வைத்துவிடுகிறோம். மேலும், வீதிகளில் நின்று முழங்கும் போதகர்களையும் நாம் பார்த்திருப்போம். இந்தப் போதகர்களால் நன்மைகள் விளைந்ததை விட, பிரச்சினைகளே அதிகம் விளைந்துள்ளன. திருவிவிலியத்தைக் கையில் ஏந்திக்கொண்டு வீதி வீதியாகச் சென்று நற்செய்தியை அறிவிப்பது என்பதும் இன்றைய காலச்சூழலில் இயலாத ஒன்றே. அப்படியெனில், இன்று நற்செய்தியை யார் பறைசாற்றுவது? எப்படிப் பறைசாற்றுவது?

நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை. சொல்லப் போனால் திருத்தூதர் பவுல் சொல்வது போல, இது நம்மீது சுமத்தப்பட்ட பணி. இது ஒரு கடினமான பணியும்கூட! ஆனால், கிறிஸ்துவுக்காக மேற்கொள்ளும்போது நிறைவான மகிழ்ச்சியும், மன நிறைவும் எப்போதும் உண்டு. வார்த்தை வடிவில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி அறிவிப்புப் பணி, இன்னும் நீடித்த, ஆழமான தாக்கங்களை உருவாக்கும்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், வழிபாட்டுத் தலங்கள் அத்தனையும் மூடிக்கிடந்தன; மறையுரை முழக்கங்கள் இல்லை; திருவிழாக்கள் இல்லை; கொண்டாட்டங்கள் இல்லை; தேரோட்டம் இல்லை; காதைப் பிளக்கும் ஒலி அலறல்கள் இல்லை; ஆனால், தெருக்களில் இறங்கி வாழ்வால் ஆற்றிய மனிதநேய மறையுரைகள் நம் இதயங்களை நெகிழ வைத்தன; காலம் கடந்தும் நம்மைப் பேச வைக்கின்றன.

கொல்கத்தாவில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் நலம் பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிறுமியை 270 கி.மீ. தூரம் தனது காரில் அழைத்துச் சென்ற மருத்துவர் பப்லு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கும்பகோணத்திலிருந்து பாண்டிச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனைக்குத் தனது மிதிவண்டியிலேயே அழைத்துச் சென்ற அறுபது வயதான அறிவழகன் எனும் கூலித் தொழிலாளி, அருகில் நின்றாலே தொற்றிவிடும் என்ற சூழலில், கோவையில் முடிதிருத்தம் செய்த வழக்கறிஞர் குணசேகரன், மதுரையில் யாசகம் பெற்றுக் கிடைத்த பத்தாயிரத்தைக் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பூல்பாண்டியன், கொரோனா சிகிச்சைப் பணிக்காகத் தன் திருமணத்தைத் தள்ளி வைத்த கேரளாவின் பெண் மருத்துவர் ஷிஃபா, தனது மகளின் கல்விக்காகச் சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து இலட்சத்தை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவிட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகன், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள்... என மனிதநேயமிக்க மனிதர்கள் இன்னும் பலர். இவர்களாலே இருபது நூற்றாண்டுகளையும் கடந்து நற்செய்தி இன்றும் இவ்வுலகில் அதிகமாய், ஆழமாய், வேரூன்றி வளர்ந்துள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம்.

வாழ்வே கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதாக இருந்தால், அதுவே சிறந்த நற்செய்தி அறிவிப்பு. இந்த உண்மைக்கு மேற்சொன்ன நேயமிக்க மனிதர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஒரு நாள், ஓர் இளம் துறவியை அழைத்து, “வாருங்கள், நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்” என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். அன்று முழுவதும் அவ்விளையவரும், பிரான்சிசும் ஊருக்குள் பிறரன்புப் பணிகள் பல செய்தனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பிய வேளையில் இளையவர், “போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!” என்று தன் உள்ளக் குமுறலை வெளியிட்டார்.  “நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளைவிட வலிமை மிக்கவை” என்று அந்த இளையவருக்குத் தெளிவுபடுத்தினார் புனித பிரான்சிஸ்.

புனித தோமா, புனித சவேரியார், புனித அன்னை தெரேசா, புனித அருளானந்தர், புனித தேவசகாயம், இறை ஊழியர் பரதேசி பீட்டர், கப்புச்சின் சபையின் இறை ஊழியர் ஜான் பீட்டர் போன்றோர் தங்கள் வாழ்வால் போதித்த நற்செய்தியே, இவ்வுலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் பணியைத் தொடர்வதில் பெருமை கொள்வோம். மத அடிப்படைவாதங்களும், அரசியல் தடைச் சட்டங்களும், அதிகார அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நமது சமூக, அரசியல், கலாச்சார உலகில் நற்செய்தியைத் துணிவுடன் பறைசாற்றுவோம். நமது இறை வாக்குப் பணியில் நம்மை அழைத்துள்ளவர் நம்மோடு இருந்து, நம்மை உறுதியாய் வழிநடத்துவார் (மத் 28:20) என்பதில் மிகுந்த நம்பிக்கை கொள்வோம். அதே நேரத்தில், இயேசுவை மையப்படுத்தாமல், அவரது நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நற்செய்தியைத் தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு போதிக்கும் போதனையோ அல்லது அவர்கள் பயன்படுத்துகின்ற விளம்பர வழிகளோ இச்சமூகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதையும் நாம் உணர்ந்து கொள்வோம். நற்செய்தியின் மையம் இயேசு! நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் இயேசு! அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் இயேசு!

நிறைவாக, மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறோம். தாயே உயிர் அனைத்திற்கும் ஆதாரம்! முதல் ஆசிரியராய், செவிலியராய், நம்மைப் புடமிட்டு நமக்குப் பெரும் உந்து சக்தியாக, ஆற்றலின் இருப்பிடமாக, அன்பின் பிறப்பிடமாகத் திகழும் நம் அன்னை நமக்குக் கற்றுத் தந்த நற்செய்தியின்படி வாழ்வோம். நம் அன்னையருக்காகவும் இந்த நாளில் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

Comment