No icon

ஞாயிறு - 04.12.2022

திருவருகைக்காலம் 2 ஆம் ஞாயிறு எசா 11:1-10, உரோ 15:4-9, மத் 3:1-12

இயல்பு மாற்றம்

ஈசோப் கதை ஒன்றோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

ஒரு ஆற்றங்கரையின் இந்தப் பக்கம் ஒரு தவளையும், ஒரு தேளும் வாழ்ந்து வந்தன. இருவரும் சிலநாள்களில் நண்பர்களாயினர். தேளுக்கு ரொம்பநாளா ஒரு ஆசை. ஆற்றின் அந்தக் கரைக்கு போக வேண்டும் என்ற ஆசை. ஒரு நாள் தவளையிடம், ‘உன்னால்தான் நீந்த முடியுமே. நீ என்னைச் சுமந்துகொண்டு அக்கரைக்குச் செல்கிறாயா?’ என்று கேட்கிறது. அதற்குத் தவளை, ‘உன்னைத் தூக்கிச் செல்வதில் எனக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால், உன்னிடம் இருக்கும் கொடுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது. பாதி வழியில் ஒரு வேளை நீ என்னை உன் கொடுக்கினால் கொட்டிவிட்டால் நான் என்ன செய்வது?’ என்று பதில் சொன்னது. உடனே தேள், ‘ஐயோ, நான் ஒருபோதும் அப்படிச் செய்யவே மாட்டேன். நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்கிறாய். நான் எப்படி உன்னை என் கொடுக்கால் கொட்டுவேன்?’ என்று சொன்னது. சற்று நேரம் யோசித்த தவளை, ‘இல்லை! வேண்டாம்! நீ கொட்டிவிடுவாய் என்று என் உள்மனம் சொல்கிறது!’ என்று தேளைச் சுமக்கத் தயங்கியது. ‘ஐயோ! நண்பா! இல்லவே இல்லை! என் அப்பா தேள், அம்மா தேள் சத்தியமா நான் சொல்றேன்! உன்னைக் கொட்டவே மாட்டேன்!’ என்று சத்தியம் செய்தது தேள். தேளின் சத்தியத்தை நம்பிய தவளை, தன் முதுகில் தேளைச் சுமந்து கொண்டு ஆற்றுக்குள் இறங்கி அக்கரை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறது. ஏறக்குறைய பாதிதூரம் கடந்தவுடன், தேள் தவளையைத் தன் கொடுக்கால் கொட்டி விடுகிறது. வலிபொறுக்க முடியாத தவளை, ‘என்ன நண்பா! இப்படிச் செய்துவிட்டாயே? உன்னை நம்பி முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தேனே!’ என்று கத்தியது. அதற்குத் தேள், ‘என்னை மன்னித்து விடு! கொட்டுவது என் இயல்பு. அதை என்னால் மாற்ற இயலாது!’ தவளை சொன்னது, ‘முட்டாள் நண்பனே! நீ இப்போது பாதி ஆற்றில் என்னைக் கொட்டியதால் நீயும்தானே மூழ்கப் போகிறாய்!’

சற்றுநேரத்தில் தவளையும், தேளும் தண்ணீரில் மூழ்கி இறந்தன.

தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளுதல் தேளுக்குச் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால், மனிதர்களுக்குச் சாத்தியம் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இயல்பு மாற்றம் என்றால் என்ன? இயல்பு மாற்றத்தை எப்படி அடைவது?

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 11:1-10) மூன்று வகை இயல்பு மாற்றங்களைப் பதிவு செய்கின்றது.

. அடிமரத்திலிருந்து தளிர்

ஒரு சில பூங்காக்களில் பட்டுப்போன மரங்களை வெட்டிவிட்டு, அதன் வேரையும், சிறிய தண்டுப்பகுதியையும் வெட்டி விட்டு, அதை நாற்காலிபோல அமைத்திருப்பார்கள். அந்த நாற்காலி என்றாவது துளிர்க்குமா? ‘துளிர்க்கும்என உறுதியாக இறைவாக்குரைக்கின்றார் எசாயா. தாவீதின் மரபு மறைந்து விட்டது. இனி தங்களை ஆள யாருமில்லை என்று நினைத்திருந்த மக்களுக்கு புதிய அரசரின் வருகையை முன்னுரைக்கும் எசாயா, வெறும் தண்டு தளிர்விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

. புதுவகை அருள் பொழிவு

முதல் ஏற்பாட்டில் யாரெல்லாம் எண்ணெயால் அருள் பொழிவு பெறுகிறார்களோ, அவர்களெல்லாம் குருவாக, இறை வாக்கினராக, அரசராக மாறுகின்றனர். தங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தைக் கண்டு கொள்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் வரும் அரசர் எண்ணெயால் அல்ல; மாறாக, ஆண்டவரின் ஆவியால் அருள் பொழிவு பெறுகின்றார். அந்த அருள் பொழிவு அவருக்குச் சில கொடைகளை அல்லது மதிப்பீடுகளை வழங்குகிறது. இறைவனின் திருவுளத்தை அறியஞானமும் மெய்யுணர்வும்,’ அத்திருவுளத்தை நிறைவேற்றஅறிவுரைத் திறனும் ஆற்றலும்’, ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாய்ப் பணி செய்யநுண்மதியும் அச்ச உணர்வும்பெறுகின்றார் அரசர். இவ்வாறாக, நீதி, நேர்மை மற்றும் உண்மைஆகிய பண்புகளை மட்டுமே கொண்டிருப்பார். அரசருக்குரிய ஆற்றல், பெருமை மற்றும் பொய்மை மறைந்து அவருடைய இயல்பு மாற்றம் பெறுகிறது.

. விலங்குகளின் செயல்பாடுகளில் மாற்றம்

ஓநாய் - செம்மறியோடு தங்குவதிலும், செம்மறியாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக்கொள்வதிலும், சிங்கக்குட்டியும் - கொழுத்த காளையும் கூடி வாழ்தலிலும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லுதலிலும், பசுவும் - கரடியும் ஒன்றாய் மேய்வதிலும், அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்திருப்பதிலும், சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்பதிலும், பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்புவளையில் விளையாடுவதிலும், பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடுவதிலும் இயல்பு மாற்றங்கள் தெரிகின்றன. இவை அனைத்தையும், ‘என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லைஎன்று ஒரே வரியில் சுருக்கிவரைகிறார் எசாயா. மேற்காணும் உருவக இணைவுகளில் ஒன்று வன்மையாகவும் மற்றது மென்மையாகவும் இருக்கிறது. எசாயாவின் கனவில் வன்மை மென்மையாகவும், மென்மை வன்மையாகவும் இயல்பு மாற்றம் பெறுகிறது. இப்படிப்பட்ட இயல்பு மாற்றம் இருந்தால்தான் மேற்காணும் காட்சி சாத்தியமாகும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 15:4-9) உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலை ஏறக்குறைய நிறைவு செய்யும் பவுல், அவர்கள் பெறவேண்டிய இயல்பு மாற்றம் குறித்து - தங்களுடைய மேட்டிமை எண்ணங்களையும், பிளவு மனப்பான்மையையும் விட்டு விட்டு, யூதர்களும், புற வினத்தாரும் ஒரே மனத்தினராய் இருந்து ஒரு வாய்ப்பட கடவுளைப் புகழ்வது - எழுதி, கிறிஸ்து இயேசுவில் யூதர்களும் புறவினத்தாரும் ஒரே மீட்பில் பங்கேற்கின்றனர் என்றும் சொல்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 3:1-12) மூன்றுவகை இயல்பு மாற்றங்களைப் பதிவு செய்கிறது.

. யோவானின் வாழ்க்கை முறை

ஒட்டகமுடி ஆடை, தோல் கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத்தேன் என்ற எளிய உணவுப் பழக்கத்தையும், உடைப் பழக்கத்தையும் கொண்டிருக்கின்ற யோவான் அவருடைய சமகாலத்தவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கின்றார். அவருடைய வாழ்விடமும் மாறுபட்டதாக இருக்கின்றது.

. மனம் மாறுவது என்பது செயலில் காட்டப்பட வேண்டும்

தன்னுடைய பணியின் தொடக்கத்தில், ‘மனம் மாறுங்கள்என்று முழக்கமிடும் யோவான், ‘மனம் மாறியதைச் செயலில் காட்டுங்கள்என்று உள்ளத்திற்கும், செயலுக்கும் இருக்க வேண்டிய தொடர்பை விளக்குகின்றார். உள்ளுக்குள் ஒன்று, வெளியில் வேறு என்று வாழ்ந்த மனிதர்களுக்கு இது ஒரு இயல்பு மாற்றம்.

. பழைய பெருமையை விடுங்கள்

நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள். எங்களுக்கு ஆட்டோமேடிக்காக மீட்பு உண்டுஎன்று பழம்பெருமையைப் பாடுவதை விடுங்கள் என்று அறிவுறுத்துகின்ற யோவான், இனியும் இயல்பு மாறவில்லை என்றால் வெட்டப்படுவது உறுதி என்று எச்சரிக்கின்றார்.

ஆக, மூன்று வாசகங்களும் இயல்பு மாற்றத்தை காட்சியாகவும், அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் முன்வைக்கின்றன.

இந்த இயல்பு மாற்றத்தை நாம் எப்படி அடைவது?

இறைவன் தருகின்ற வாக்குறுதியை நம்புவது, அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது. ஆண்டவரைப் பற்றிய அறிவை நோக்கி அழைக்கின்றார் எசாயா. மன மாற்றத்திற்கு அழைக்கின்றார் திருமுழுக்கு யோவான்.

Comment