No icon

அவசரப் பிரிவில் கவனிக்கவும்

இந்தியாவின் கொரோனா வைரஸ்கள்

கொரானா நமக்கு தெய்வம் மாதிரி. எப்படி சொல்;ர பங்கு? நம்ம  சீரழிச்ச பொருளாதாரத்தை இனி கொரானா மேல பழி போட்டு தப்பிச்சிக்கலாம்”. இப்படி மோடி - அமித்; ஷா உரையாடுவதாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் ஒரு செய்தி வைரலாகியது. சீனாவில் தொடங்கி தென்கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று நகர்ந்து இன்று இந்தியா உள்பட 195 நாடுகளில் வசிக்கும் பல லட்சம் மக்களை தாக்கியிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்கிருமி. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே உலகளவில் 52, 20,196 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 313,220 பேர் மரணித்திருப்பதாகவும், இந்தியாவில் 1,06, 000 பேர் பாதிக்கப்பட்டும், 3000 பேர் இறப்பையும் தழுவியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்ஙனம், கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்துக் கிடக்க கடந்த மார்ச் 6 ஆம் தேதியிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கட்டுரை இந்தியாவின் ஏனைய கொரோனோ வைரஸ்களை இனம் காட்டியிருந்தது கவனிக்கத்தக்கது. அவரது கட்டுரையின் உள்ளடக்கத்தின் சில பகுதிகளை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன். “சமூக ஒற்றுமை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய சுகாதார தொற்றுநோய் - இம்மூர்த்திகளிலிருந்து இந்தியா உடனடி ஆபத்தை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ்; ஏற்படுத்தும் ஆரோக்கியத் தொற்று வெளிப்புற அதிர்ச்சியாக இருக்கும்போது, சமூக அமைதியின்மை மற்றும் பொருளாதார அழிவு ஆகியவை அபாயகரமான கலவையாகி இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பது மட்டுமல்லாமல், உலகில் ஒரு பொருளாதார மற்றும் சனநாயக சக்தியாகிய நமது உலகளாவிய நிலைப்பாட்டைக் குறைக்கக்கூடும் என்று நான் ஆழ்ந்த கவலைப்படுகிறேன்” என்கிறார். இதுதான் உண்மை!

கவனிக்கப்பட வேண்டிய இந்தியாவின் கொரோனா வைரஸ்கள்

உலகமே உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இக்கட்டான இச்சூழலிலும் வகுப்புவாத பதட்டங்கள் தூண்டப்பட்டு, அரசியல் சகிப்புத்தன்மை கொண்ட நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத பிரிவினரால் மத சகிப்பின்மை தீப்பிழம்புகள் தொடர்ந்து தூண்டப்படுகின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கு நிறுவனங்கள் தர்மத்தை கைவிடுகின்றன. நீதிமன்றங்களும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களும், சாமானிய மக்களைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை.

வெறுப்பு, சகிப்பின்மை மற்றும் சுயநலம் எனும் கொரோனாக்கள்

கொரோனா பீதியை வைத்து நாடு முழுவதிலுமுள்ள இசுலாமிய சகோதர சகோதரிகள் மீது நடத்தப்படும், தாக்கப்படும் சம்பவங்களை யாரும் மறைக்க முடியாது. உதாரணத்திற்கு சில. கடந்த ஏப்ரல் 5 - அன்று ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தத்ரத் என்ற கிராமத்தில் 4 இசுலாமிய இளைஞர்கள் மோடி சொன்னதைப் போல் இரவு விளக்கை அணைக்கவில்லை என்பதற்காக சங்கப்பரிவார குண்டர்களால் தாக்கப்பட்டனர். ஏப்ரல் 7 ஆம் நாள் கைதால் மாவட்டத்தில் 60 வயது கௌர் ஹாசன் என்ற முதியவர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர் என்கிற வதந்தியைப் பரப்பி அவரது இரும்புப் பொருட்கள் விற்கும் கடையை சங்கப் பரிவார குண்டர்கள் தீயிட்டு கொளுத்தினர். ஹரியானா மாநில பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான பபிதா போகாட் ‘ஹரிபூமி’ என்கிற பா.ஜ.க - வின் பத்திரிக்கையில் இசுலாமியர்களுக்கு எதிராக பிரச்சாரத்தைச் செய்தார். மேலும், ‘நிஜாமுதின் முட்டாள்கள்’ என்கிற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி ‘சீனர்களுக்கு வெளவால்கள் மூலம் கொரோனா வந்தது. ஹிந்துஸ்தானியர்களுக்கு கைவிடப்பட்ட பன்றிகளால் கொரோனா வருகிறது’ என இசுலாமியர்களை தரக்குறைவாக அவமதித்தார். இங்ஙனம் இன்றளவும் கொரோனா தொற்றுக்கு இசுலாமியர்கள்தான் பொறுப்பு என தொடர்ந்து பிரச்சாரங்களும், போலி செய்திகளும் ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தொற்றுக்கிருமி கொரோனாவின் பாதிப்பைவிட இந்தியாவில் மதவெறியர்களின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. சமூக பதட்டங்களின் நெருப்பு நாடு முழுவதும் இன்றும் வேகமாகப் பரவி வருகிறது, நமது தேசத்தின் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு அச்சுறுத்தும் இந்நெருப்பினை அணைக்க நெருப்பூட்டும் அதே நபர்களால் மட்டுமே சாத்தியம். பொருளாதார ஒற்றுமையின் அடிநாதமாய் இருக்க வேண்டிய சமூக நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கிறதென்றால், நமது பொருளாதாரம் இன்னும் அகால பாதாள அளவிற்கு வீழ்ச்சியடையும்; சமூக அமைதியின்மை பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகப்படுத்தும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஆதங்கம். தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் புதிய திட்டங்களை மேற்கொள்ள விரும்பவில்லை. சமூக சீர்;குலைவுகள் மற்றும் வகுப்புவாத பதட்டங்கள் அவர்களிடம் அச்சத்தையும், வெறுப்பின் ஆபத்தையும் அதிகப்படுத்துகின்றன. ஒருவரின் சுற்றுப்புறத்தில் திடீர் வன்முறை வெடிக்கும் அபாயம் பெரிதாக இருக்கும்போது, வரி விகிதங்களை மாற்றியமைத்தல், கார்ப்பரேட் சலுகைகள் பொழிவது ஆகியவை வணிகர்களை முதலீடு செய்யத் தூண்டாது என்கிற அச்சத்தை தெரிவிக்கிறார் பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன்சிங்.

தமிழக அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காய் இணைந்து உழைக்க வேண்டும் என்பதை அம்மாவின் அரசு மறந்து விட்டது. அனைத்தையும் தன் கட்சிதான் செய்தது என்கிற மாயையை உருவாக்க முயற்சிக்கிறார் தமிழக முதல்வர். கரூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்களை வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்க அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர்  செந்தில் பாலாஜி  முன்வந்தும், முதலில் ஒப்புக்கொண்ட  மாவட்ட நிர்வாகம் பின்னர் ஏற்க மறுத்தது. அவ்வாறே, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக ஒரு கோடி ரூபாய் வழங்க முன்வந்தபோது அதனையும் ஏற்க மறுத்தது. மக்கள் மீதான அக்கறையில்லாமல் அனைத்திலும் அரசியல் சாயம் பூசும் மக்களுக்கான அரசின் பச்சோந்தித்தனத்தை என்னவென்பது?

கோவிட்  -19 நுண்கிருமி எனும் கொரோனா

ஏவுகணை அச்சுறுத்தலில் அடுத்த நாட்டை அடக்கி வைக்கும் வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. எதையும் செய்யலாம் என்கிற மனிதர்களின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாய் கொரோனாவின் ஆட்சி நாளுக்குநாள் சூடுபிடிக்கிறது. இதனால் உலகெங்கும் பேரிழப்பு! ஒருபக்கம் உயிரிழப்பு, மறுபக்கம் பொருளாதார பேரிழப்பு. சீனாவில் தொடங்கி இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா என உலகில் இருக்கும் பல்வேறு பெரிய பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் ஒரே நாளில் மூன்று, நான்கு சதவீத வீழ்ச்சி என பல நாட்களாக தொடர்கின்றன. முதலீட்டாளர்களின் பணம், பல லட்சம் கோடி ரூபாய்கள் காணாமல் போய்விட்டது. இழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. டாலருக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு தேசங்களின் பண மதிப்புகள் தொடர்ந்து குறைகின்றன. பிப்ரவரி மாதம் 71 ரூபாய் ஆக இருந்த அமெரிக்க டாலர் விலை இப்போது 74. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. ஒரு வார காலத்திற்குள் 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. இப்படி உலக நாடுகளையும், பெரும் அரசாங்கங்களையும், இத்தனை சந்தைகளையும், முதலீட்டாளர்களையும் உற்பத்தியாளர்களையும், வியாபாரிகளையும் மிரட்டிக்கொண்டு இருக்கிறது கோவிட்19.

மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள், பல பெரிய உற்பத்திக்கூடங்கள் மூடல், கல்விக்கூடங்களுக்கு தொடர்விடுமுறை, நீண்ட வெளியூர் பயணங்களைத் தவிர்க்க வைத்தல், பேருந்து இரயில் விமான சேவைகள் நிறுத்தம், தங்கும் விடுதிகள் மூடல் என 50 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நீள்கிறது. இதனால் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்படுகின்றது. வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களும், உதிரி பாகங்களும் வேறு சில நாடுகளில் இருக்கும் தொழிற்கூடங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, வேறு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆவது இயல்பு. இந்தியாவில் உற்பத்தியாகும் பல எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்ஸ், மருந்து பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், சீனாவில் இருந்து வர வேண்டும். இந்த வைரஸ் தாக்குதலால் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கான சீனா-இந்தியா வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. ‘டிமாண்ட் குறைவு மற்றும் ‘சப்ளை செயின் பாதிப்பு’ ஆகிய இரண்டும் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள். இதனால் இந்தியா மட்டுமல்ல உலகின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியா மற்றும் உலக அளவில் உள்நாட்டு தேவைகள், சுற்றுலா மற்றும் வியாபாரப் பயணங்கள் குறைந்து, சுமார் 5 லட்சத்து, 69 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதல் 25 லட்சத்து, 67 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்படும்’ என்று ‘ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்’ கணிப்பு வெளியிட்டிருக்கிறது(தினத்தந்தி மார்ச் 10,2020,பக் :4).

இப்பொழுதும் இங்கு நடப்பது இதுதான்!

நான்கு மணி நேர இடைவெளியில் ஊரடங்கை இந்திய மக்கள்மீது திணித்து சாமானிய உழைக்கும் வர்க்கத்தின் உயிரோடு விளையாடி இன்றளவும் வீதிகளில் போதிய பாதுகாப்பும், உணவுமின்றி பாதசாரிகளாக கடந்து சென்று கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் அபயக்குரல்களுக்கு இதுவரை அரசு செவிகொடுக்காதது ஏனோ? ஆலயங்களும், பாடசாலைகளும் மூடிக்கிடக்க சோற்றுக்கு அரிசியை இலவசமாக்கி, குடும்ப பெண்மணிகளின் தாலிகளை அறுக்கும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் மாநில அரசு அவசரம் காட்டுவது எதற்காகவோ? ஆரோக்கிய சேது செயலியை அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மோடி அரசு கட்டாயப்படுத்துவதுன் சூட்சுமம்தான் என்னவோ? இச்செயலி மூலம் பெறப்படும் தகவல்கள் வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமோ?

இக்காலக்கட்டத்தில்தான் பி.எம்.கேர்ஸ் என்கிற நிவாரண நிதிக்கட்டமைப்பை தன்னுடைய தலைமையில் மூன்று கேபினட் அமைச்சர்களை மட்டுமே கொண்டு தன்னிச்சையாக உருவாக்கியிருக்கிறார் மோடி. இந்த நிதியின் வரவு - செலவுக் கணக்குகளை மத்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரிகூடத் தணிக்கை செய்ய முடியாது. இத்திட்டத்தில் யார், எவ்வளவு, எப்படி நிவாரணத் தொகையாக வழங்கினார்கள், பெறப்பட்ட நிதி எப்படி செலவிடப்பட்டுள்ளது? என்கிற விவரங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படியென்றால் இத்திட்டத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்னவோ? அரசு ஊழியர்கள் இத்திட்டத்தில் தங்களது ஊதியத்திலிருந்து நிதியளிக்க வேண்டும், விரும்பாதவர்கள் பெயர்களை அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்பதில் மிரட்டுதல் தொனிதானே தென்படுகிறது?

கொரோனாவின் தாக்கத்தால்தான் இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்கிற பொய் இன்று திட்டமிட்டு பரப்படுகிறது. உண்மை நிலமையை சாதாரண மக்களும் நன்கு அறிவர். இழந்து போயிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறோம் என்கிற போர்வையில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் சட்டத்திருத்தங்களை பா.ஜ.க. ஆளும் உ.பி., ம.பி., குஜராத் மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன. நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் கூடாத நிலையில் மோடி சர்வதிகாரப் போக்கில் கார்ப்பரேட் கும்பல்களுக்கு ஆதரவாக பல முடிவுகளை எடுத்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1994 மற்றும் 2006(திருத்தப்பட்ட) - யில் கொண்டு வரப்பட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளை முற்றிலுமாகக் கைவிடும் அறிக்கையை ஊரடங்கிற்கு முந்தைய நாள் வெளியிட்டார். அதன்படி இனி சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கக்கூடிய தொழில் அல்லது திட்டங்களை கார்ப்பரேட்டுகள் எவ்வித தடையுமின்றி தொடங்கலாம். சாமானிய குடிசை வீடுகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்ற இலவச மின்சாரத்தை  ஒழிக்கும் நோக்கிலும், மின்சார கட்டணத்திற்கு அளிக்கப்படும் மானியங்களை தடை செய்யும் நோக்கிலும், தனியார் மின்சார விநியோக நிறுவனங்களின் முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் போக்கிலும் மின்சாரச் சட்டம் 2003-யினை திருத்தம் செய்து வரைவு மின்சாரச் சட்டம் 2020 - யை வெளியிட்டிருக்கிறது மோடி அரசு.

ஆக ஒருபக்கம் மக்கள் கொரோனா பீதியிலும், அதன் விளைவாய் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலும், வேலையின்றி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும் சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஏறக்குறைய 40 கோடி பேர் அமைப்புசாராத் தொழிலை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளர்கள். ஒருவேளை சோற்றிற்கே அல்லல்படும் இம்மக்களைப் பற்றி எவ்வித அக்கறையுமற்ற மோடி அரசின் பாசிச மக்கள் விரோத பாசிச அடக்குமுறைகளை வென்றெழ மக்கள் சக்திகள் ஒன்றிணைவது காலத்தின் அவசியம்.

உடனடி சிகிச்சை தேவை

Mr.Manmohan Singh

இந்தியா சந்திக்கும் கொரோனோ பாதிப்புகளுக்கு டாக்டர் மன்மோகன்சிங் மூன்று அம்சத் திட்டத்தை நம் அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். முதலில், ஒரு சுகாதாரத் தொற்றுநோயாய் மாறியிருக்கும் கோவிட் -19 அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து ஆற்றல்களையும் முயற்சிகளையும் மையமாகக் கொண்டு அரசு செயல்பட வேண்டும். இரண்டாவது, பல்வேறு விதங்களில் பிரிவினையை உருவாக்கி வெறுப்புணர்வையும் வேற்றுமையையும் உரமிட்டு வளர்க்கும் செயல்களை முற்றிலும் கைவிட வேண்டும். நச்சு சமூக சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும். மூன்றாவது, இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை எனும் கொரோனாவை வீழ்த்திட நுகர்வு தேவையை அதிகரிப்பதற்கும், பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு விரிவான மற்றும் துல்லியமான நிதி ஊக்கத் திட்டத்தை அரசு ஒருங்கிணைக்க வேண்டும்.

பொருளாதார மேதையின் மேற்காணும் கூற்றுகள் மத்திய அரசின் செவிகளுக்கு எட்டுமா? சமூக ஒற்றுமைக்கு பாதகமாய், ஏழைகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடங்கலாய் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் சட்டங்களும் கொரோனாவையும் விட மிகப்பெரிய கொடூரமானவை என்கிற விழிப்புணர்வை பெறுவோம். எப்படி கொரோனவை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே விழிப்போடு செயல்படுகிறதோ அதற்கும் மேலாய் சமீபத்திய நம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் கூட்டாக தயாராக வேண்டியது அவசியம். வேண்டுமென்றே தூண்டப்படும் வகுப்புவாத பதட்டங்கள், வீழ்ந்து கொண்டிருக்கும் மொத்த பொருளாதார மேலாண்மை மற்றும் வெளிப்புற சுகாதார அதிர்ச்சி இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் நிலைப்பாட்டையும் தடுத்து நிறுத்தி அச்சுறுத்துகின்றன என்பதே உண்மை. எனவே ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ளும் கடுமையான அபாயங்களின் கடுமையான யதார்த்தத்தை எதிர்கொண்டு அவற்றை சதூரியமாகவும், போதுமானதாகவும் நிவர்த்தி செய்ய வேண்டிய நேரம் இது. ஆளும் வர்க்கம் அறிவாளிகளின் ஞானத்திற்கு செவிமடுக்குமா? இணைந்த திட்டங்களால், செயல்பாடுகளால் மாற்றங்களை முன்னெடுக்குமா? சாமானிய மக்களின் அழுகுரல்களுக்கு செவிகொடுக்குமா? கடவுளின் தேசத்தை காப்பாற்றி இன்று உலகமே வியக்கும் அளவிற்கு மக்கள் சேவையில் தங்களைக் கரைத்திருக்கும் முதலமைச்சர் பிரணாய் விஜயன், ஆசிரிய அமைச்சர் சைலஜா போன்ற ஆளுமைகள் இந்தியாவை ஆளும் காலம் என்று மலருமோ!

Comment