No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சுயநலத்தை மையமாகக்கொண்ட வாழ்வில் உண்மை மகிழ்வில்லை

சுயநலத்தை மையமாகக்கொண்ட வாழ்வு, ஒரு நாளும் மகிழ்வை நோக்கி இட்டுச் செல்லாது என்ற எண்ணத்தை, இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையில்  திருத்தந்தை பிரான்சிஸ். எடுத்துரைத்தார்.

உயிர்ப்பு காலத்தின் ஐந்தாவது ஞாயிறான, மே 10 ஆம் தேதி, தன் நூலகத்திலிருந்து நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு இறுதி இரவுணவின்போது, சீடர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்வதற்கு முன்வழங்கிய உரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை (யோவான் 14: 1-12) மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயேசு எப்போதும் நம் அருகே இருக்கிறார் என்பதையும், நமக்கென ஓர் இடம் வானுலகில் காத்திருக்கிறது என்பதையும் உறுதியாக நம்பியவர்களாக, மனம் தளராமல் செயல்படவேண்டும் என திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

இறுதி இரவு உணவுக்குப் பின்னரும், பாடுகளுக்கு சிறிது முன்னரும் இடம்பெறும் இந்த பிரியாவிடை உரையில், தன் சீடர்களைப் பார்த்து, ’உள்ளம் கலங்க வேண்டாம்என இயேசு உரைத்தது, நம்மையும் நோக்கிக் கூறுவதாக உள்ளது என  எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளம் கலங்காதிருக்க, இயேசு முன்வைக்கும் இரு தீர்வுகள் குறித்தும் எடுத்தியம்பினார்.

என் மீது விசுவாசம் வையுங்கள்எனவும், ’என் தந்தையின் இல்லத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.....உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடுசெய்யப்போகிறேன்’, எனவும் இயேசு கூறி, இந்த இரு தீர்வுகளைக் காட்டுகிறார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

பெரும் வேதனைகளால் ஒருவர் துயருறும்போது, அதனைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் தேவைப்படுகின்றார், அதற்காவே இயேசு எப்போதும் நம் அருகிலேயே இருக்கின்றார் என்பதை, தன் உரையில் நினைவுறுத்திய திருத்தந்தை, எவ்வித குறிக்கோளுமின்றி எந்த மனிதரும் வாழ்வதில்லை, விண்ணுலகின் மகிழ்ச்சியை நோக்கிய நம் வாழ்வுப் பயணத்தில், இயேசு, நமக்காக ஓரிடத்தை ஏற்பாடுச் செய்துள்ளார் என மேலும் கூறினார்.

நானே வழிஎன உரைத்த இயேசுவின் வழியாகவே ஒருவர் விண்ணரசை அடைய முடியும் என்பதையும் எடுத்துரைத்த பிரான்சிஸ் அவர்கள், விண்ணுலகை நோக்கியப் பாதையில் நாம் நடைபோடுகிறோமா, அல்லது, இவ்வுலகாயுத போக்கின் பாதையில் நடைபோடுகிறோமா என்பதைச் சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

இயேசுவின் பாதை என்பது, சுயநலத்தை மையமாகக்கொண்ட பாதையல்ல, மாறாக, தாழ்ச்சியுடன் கூடிய அன்பு, செபம், கனிவு மற்றும் நம்பிக்கையின் பாதை எனவும் திருத்தந்தை கூறினார்.

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், இஞ்ஞாயிறன்று உலக அன்னையர் தினம் சிறப்பிக்கப்பட்டதை குறிப்பிட்டு, உலகம் முழுவதும் உள்ள அன்னையர்க்காகவும், வானுலகில் உள்ள அன்னையர்க்காகவும் நாம் இணைந்து செபிப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comment