No icon

May 14 - Day of Prayer and Fasting

மே 14, செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பின் நாள்- திருத்தந்தை அழைப்பு

மே மாதம் மூன்றாம் தேதி  ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட நல்லாயன் ஞாயிறன்று, தன் நூலகத்திலிருந்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், தேவ அழைத்தலுக்காக செபிக்கும் உலக செப நாள் இது என்பதை நினைவூட்டி, அனைவரின் செபங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

குருத்துவமும் துறவற வாழ்வும் எதிர்பார்க்கும் மனஉறுதியும் விடாமுயற்சியும் கொண்ட பாதையை, நாம் செபத்தினால் அன்றி வேறு எதனாலும் பெறமுடியாது என்று கூறியத் திருத்தந்தை, நல்ல பணியாளர்கள் எனும் கொடைக்காக இறைவனை வேண்டுமாறு அழைப்பு விடுத்தார்.

இன்றைய உலக நெருக்கடியை குறிப்பிட்டு, கோவிட்-19 நோய்க்கு தடுப்பு மருந்தும், நோய் அகற்றும் மருந்தும் கண்டுபிடிக்கப்படுவதற்கு, உலக அளவில், ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் விண்ணப்பித்தார்.

மதநம்பிக்கையுடைய அனைவரும் இணைந்து, இம்மாதம் 14ம் தேதியன்று, செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பு நடவடிக்கையின் நாளை கடைபிடிக்க, மனித உடன்பிறந்த நிலை என்ற அமைப்பின் உயர்மட்ட குழு விடுத்துள்ள பரிந்துரையை தானும் ஏற்றுள்ளதாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் முயற்சிகளை, இந்நோய் அகற்றலுக்கான இறைவேண்டலுக்கு சமர்ப்பிக்க உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மே மாதத்தில், ஒவ்வோர் ஆண்டும் அன்னை மரியா திருத்தலங்களுக்கு விசுவாசிகள் திருப்பயணம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு கொரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக, மக்கள், வீட்டில் இருந்தவாறே, இத்திருத்தலங்களுக்கு, ஆன்மீக முறையில் பயணம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மே 14ம் தேதி நோன்பு நாளுக்கு உலகத் தலைவர்கள் அழைப்பு

நம்மை அச்சுறுத்தும் தொற்றுக்கிருமியிடமிருந்து இவ்வுலகைப் பாதுகாக்க, மே 14ம் தேதியை, இறைவேண்டல் மற்றும் நோன்பு நாளாக கடைபிடிக்க மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு விடுத்துள்ள அழைப்பை உலகத் தலைவர்கள் பலர் ஏற்றுக்கொண்டு தங்கள் நாடுகளில் மக்கள் இதனைக் கடைபிடிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு விடுத்த இந்த அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் பெரும் தலைவர் ஷேக் அகமத் அல் தயுப் அவர்களும் ஏற்றுக்கொண்டதோடு, தங்கள் சார்பில், மக்களிடம் இது குறித்து விண்ணப்பித்துள்ளதை, பாலஸ்தீனா நாட்டின் அரசுத் தலைவர், மஹ்முத் அப்பாஸ் அவர்கள் வரவேற்றுள்ளார்.

இந்த மே 14ம் தேதி வழிபாடுகளிலும், நோன்பிலும் தான் கலந்துகொள்ளப் போவதாகவும், இந்த முயற்சியில் பாலஸ்தீன மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படியாகவும் அப்பாஸ் அவர்கள் விடுத்துள்ள இந்த அழைப்பைத் தொடர்ந்து, பஹ்ரேய்ன் மன்னர் ஹமாத் பின் இசா அல் காலிஃபா அவர்களும் இதே விண்ணப்பத்தை தன் மக்களுக்கு விடுத்துள்ளார்.

திருத்தந்தையும், அல் அசார் தலைவரும் விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து, இந்த கடினமான காலத்தில், மக்களினம் அனைத்தும் ஒருங்கிணைந்து, தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது சிறந்தது என்று, .நா. அவையின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு, மே மாதம் 3ம் தேதி, 13 மொழிகளில் வெளியிட்டிருந்த விண்ணப்பம், மனிதகுலத்தைச் சேர்ந்த அனைத்து உடன்பிறப்புக்களுக்கும், குறிப்பாக, மத நம்பிக்கையுள்ள உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment