No icon

Pope thanks a Dr.Nun

கோவிட்19 நோயாளிகளுக்குப் பணியாற்றும் துறவிக்கு நன்றி

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மத்தியில் முழுவீச்சுடன் பணியாற்றும், மருத்துவர் அருள்சகோதரி ஒருவரை, திடீரென தொலைபேசியில் அழைத்து, திருத்தந்தை பிரான்சிஸ். அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 கிருமியால் கடுமையாய்ப் பாதித்துள்ள, வட இத்தாலியின் பெர்கமோ பகுதியின்  வில்லா டி அல்மே (Villa d’Almè)  மருத்துவமனையில், சிறப்புப் பராமரிப்புப் பிரிவில், முழு பாதுகாப்பு கவசங்களுடன் பணியாற்றும், மருத்துவரான அருள்சகோதரி ஏஞ்சல் பிப்பெந்து (Angel Bipendu) அவர்களுக்குத் தொலைபேசி வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று, வில்லா டி அல்மே மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த அருள்சகோதரி  ஏஞ்சல் பிப்பெந்து அவர்கள், அங்கு திடீரென ஒலித்த தொலைபேசியைக் கையில் எடுத்தபோது, வத்திக்கான் நகரிலிருந்து அழைக்கின்றேன், அருள்சகோதரி பிப்பெந்து  அவர்கள் ஆற்றும் பணிக்கும், உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்என்ற குரலைக் கேட்டுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அச்சகோதரி, தாங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களா? என்று கேட்டவுடன்,

ஆமாம்! தாங்கள் ஆற்றும் பணிக்கும், தாங்கள் வழங்கிவரும்  விசுவாசச் சான்றுக்கும் நன்றி கூற விரும்புகிறேன், இக்கொள்ளை நோய் முடிவுற்றபின், தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

அருள்சகோதரி ஏஞ்சல் பிப்பெந்து (Angel Bipendu)

ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசைச் சேர்ந்த அருள்சகோதரி  பிப்பெந்து  அவர்கள், இத்தாலியின் பலேர்மோவில் மருத்துவக் கல்வியை முடித்து, கடந்த 16 ஆண்டுகளாக, இத்தாலியில் பணியாற்றி வருகிறார்.

மருத்துவரான அருள்சகோதரி பிப்பெந்து அவர்கள், மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரைக் காப்பாற்றும் பணியில், 2016 மற்றும், 2017 ஆம் ஆண்டுகளில், மால்ட்டா பக்த அமைப்புடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

இவர், மீட்பரின் அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்தவர்.

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அருள்சகோதரி பிப்பெந்து அவர்கள் பணியாற்றும், வட இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Comment