No icon

பாஜக சர்வாதிகாரத்தின் எழுத்துப்பூர்வமான ஆவணம்

அகராதி

‘அகராதி’ என்ற சொல்லுக்கு நிகண்டு, அகரமுதலி (டிக்ஷனரி) ஆகியவற்றைக் குறிக்கும். இன்னொரு எதிர்மறை பொருள் ஒன்று உண்டு. அகராதி பிடித்தவன் என்றால் எதிர்மறைப் பொருளில் அதிகம் கற்றவன், பேச்சு வழக்கில் அடுத்தவரை மதிக்காமல் எதிர்த்துப் பேசும் ஒரு நபரைக் குறிக்கும். அகராதி படித்தவன் என்பதுதான் மருவி காலத்தே அகராதி பிடித்தவன் என்றாகியது என்றும் சொல்வதுண்டு. நம் ஊர் வழக்கில், ‘அவன் பெரிய அகராதி பிடித்தவன், அவனோடு பேசாதே’ என்று சொல்வதுண்டு.

பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத சொற்களை உள்ளடக்கி ஓர் அகராதி வெளியிட்டிருக்கிறார்கள் அகராதி படித்தவர்கள், மன்னிக்கவும். அகராதி பிடித்தவர்கள். பால்புட்டி, ஜூம்லா ஜீவி, முதலைக் கண்ணீர் நாடகம், ஸ்னூப்கேட்...  இந்த புதிய அகராதிதான் நம் ஜனநாயக இந்தியாவின் ஒரு பேசு பொருள். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவையும் மாநிலங்களவையும் இந்திய ஜனநாயகத்தின் கோயில்கள், கருவறைகள். இந்திய ஜனநாயகம் உயிர்ப்போடு என்றும் இருப்பதற்கு நம் தேசப்பிதாக்களும் தேசமாதாக்களும் யோசித்து உருவாக்கிய ஜனநாயக கருவூலங்கள். இங்குதான் இப்படிப்பட்ட விநோதம் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. பொய் - இந்த வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. இதற்குப் பதிலாக, ‘உண்மைக்கு மாறாக’ என்றுதான் பேச வேண்டும்.

அகராதி பிடித்தவர்கள் உருவாக்கிய இந்தப் பாராளுமன்றத்திற்கான இந்தப் புதிய அகராதி, பாஜகவின் அகராதியையே காட்டுகிறது.

உதாரணத்திற்கு தடைசெய்யப்பட்ட இந்தி வார்த்தைகள் பின்வருமாறு: Chamchagiri (துதிபாடி), Chelas (வாரிசுகள்), Tanashah (சர்வாதிகாரி), Tanashahi (சர்வாதிகாரம்), Jumlajivi (நடித்தே வாழ்பவர்), Dohra Charitra (இரட்டை நிலைப்பாடு), Baal Buddhi (சிறுபிள்ளைத் தனம்), Shakuni  (சகுனி), Jaichand, Khalistani (காலிஸ்தானி), Vinash Purush (நாசக்காரன்),  Khoon ki Kheti (இரத்தத்தை அறுவடை செய்பவர்), Nautanki (நாடகதாரி), Dindhora Peetna,  (சுய தம்பட்டம் அடிப்பவர்), Behri Sarkar (காதுகேளாத அரசு) and Nikamma  (உதவாக்கரை) போன்ற இந்தி வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜூம்லா ஜீவி, சம்ச்சா (கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்), சம்ச்சாகிரி

(கண்மூடித்தனமாக ஆதரவளிக்கும் போக்கு), பால புத்தி (குழந்தை புத்தி), தானாஷா (சர்வாதிகாரம்) உள்ளிட்டவை.

தடைசெய்யப்பட்ட ஆங்கில வார்த்தைகள்:  `ashamed', 'abused, 'betrayed', 'corrupt', 'drama', 'hypocrisy', 'bloodshed', 'bloody', 'cheated, 'chamcha', 'childishness', 'coward', 'criminal', 'crocodile tears', 'disgrace', 'donkey', 'eyewash', 'fudge', 'hooliganism', 'incompetent', 'mislead', 'lie', 'untrue.

 இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் ஒருவேளை பேசினால், அவை அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

‘சங்கி’ என்ற வார்த்தை மட்டுமே இந்த 1100 பக்கங்களில் ஓர் இடத்திலும் இடம்பெறவில்லை. ஜூம்லா என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 இலட்சம் போடுவோம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியை, இது வெறும் அரசியல் ஜூம்லா என்று வரையறுத்தவர்.

மேற்கண்ட பெரும்பாலான சொற்கள் அனைத்தும் ஓர் அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள். ஜனநாயகத்தில் விமர்சனம் என்பது மிகவும் அடிப்படை. ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு எப்படி எதிர்க்கட்சிகள் என்பது அவசியமோ, அதைப்போல ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விமர்சனம் என்பதும் அவசியம். ‘காங்கிரசில்லா இந்தியா’ என்பதிலிருந்து எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா ஒன்றுதான் இலக்கு என்று பாரதீய ஜனதா கட்சி அரசியல் செய்கிறது.

தற்போது சிறுபான்மை முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதி ஒருவர்கூட இல்லாத கட்சியாக தன்னை உருவாக்கியுள்ள பாஜக, எல்லா நிலைகளிலும் ஜனநாயகத்தைக் காவு வாங்கிக்கொண்டேயிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் வேண்டாம்; அவர்கள் முன்வைக்கும் விமர்சனமும் வேண்டாம் என்று அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டேயிருக்கிறது.

ஒர் எதேச்சதிகார, சர்வாதிகார அரசாகவே தன்னை கொஞ்சம்கூட வெட்கமின்றி கட்டமைத்துக் கொண்டேயிருக்கிறது. பத்து மாநிலங்களில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடித்தது பற்றிகூட கொஞ்சமும் வெட்கமடையவில்லை.

எதிரிகள், பிடிக்காதவர்கள் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று தொடங்கி, இப்போது என்ன பேச வேண்டும் என்றுகூட இவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால், இதுதான் இந்திய ஜனநாயகத்தின் கலிகாலம். எப்போதும் பாராட்டு நிறைந்த வார்த்தைகளே வேண்டும் என்றால் அது சர்வாதிகாரம் தானே. ‘நீரோ பிடில் வாசித்தார்’ என்று சொல்லாமல் ‘நீரோ சிம்பொனி இசைத்தார்’ என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். இவர்கள் மட்டுமே, சமூகத்திற்கும் நடைமுறைக்கும் பொருந்தாத வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்; ஆனால் அதனை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். மாநிலங்களவைக்கான நியமன உறுப்பினர்களைப் பற்றி சொல்லும்போது, ஓர் இசைஞானியையே சாதிப் பட்டியலில் பட்டியிலிட்டவர்கள், இப்போது வார்த்தைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

ஜனநாயகம் என்பது ஒரு வழிப்பாதை என்பதே ஆரிய மாடல். நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் விஸ்டா வேண்டும்; எப்போதாவது பறப்பதற்கு எப்போதும் எட்டாயிரம் கோடியில் ஒரு புதிய விமானம் வேண்டும்; உண்பதற்கு இறக்குமதி செய்யப்பட்ட காளான் வேண்டும் என்று ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் இவர்கள், இப்போது எதிர்கட்சிகள், ஆளும் கட்சியான தங்களைப் பற்றி, என்ன பேச வேண்டும் என்று எகத்தாளமாய் தீர்மானிக்கிறார்கள்.

1100 பக்கங்கள் கொண்ட இந்த அகராதி, பாஜக சர்வாதிகாரத்தின் எழுத்துப்பூர்வமான ஆவணம். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்மீது கைவைப்பார்கள் என்பதற்கான ஒரு சிறிய முன்னோட்டமே. திரிணாமுல் காங்கிரசின் எம்பி மஹூவா மொய்த்ரா சொல்வதுபோல, ‘மக்களவையில் எழுந்து நின்று, போலித்தனமான நடவடிக்கைகளுக்கு வெட்கப்படவேண்டிய திறமையற்ற அரசாங்கத்தால் இந்தியர்கள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள்; பேசக்கூடாது என்று சொல்கிறார்கள் போலும்’. தமிழக எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் சொல்வது போல, ‘இந்தச் சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. தங்கள் பெயர்களே போதுமானது’ என்று சொல்ல வருகிறார்களோ என்னவோ?.

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் சொல்வதுபோல், ‘பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும் அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க மன்னராட்சிமுறை நடக்கிறதா?.. ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது’.

ஜனநாயக இல்லமான நாடாளுமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லையெனில், நாட்டிலா ஜனநாயகம் இருக்கப்போகிறது?!.

Comment