No icon

ஜூலை 24ல், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் 2வது உலக நாள்

இம்மாதம் 24ம் தேதி ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாளை முன்னிட்டு, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, அந்நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இரண்டாவது பதிப்பு ஒன்றை, ஜூலை 14, வியாழனன்று வெளியிட்டுள்ளது.

“அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்” (தி.பா.92,14) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் இந்த இரண்டாவது உலக நாளன்று, உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், கர்தினால் ஆஞ்சலோ தெ தொனாத்திஸ் அவர்கள் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

உரோம் மறை மாவட்டத்திற்கு  திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் தெ தொனாத்திஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றும் அதே நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டிற்குத் தனது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவார்.

அதே ஜூலை 24ம் தேதி, கனடாவின் புனித அன்னா திருத்தலத்திற்குச் சென்று செபிக்கும் திருத்தந்தை, Iqaluit  நகரத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் இளையோர் மற்றும், வயது முதிர்ந்தோரைச் சந்திப்பார்.

மேலும், ஜூலை 24ம் தேதி, ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலியில் பங்குகொள்வது அல்லது, அந்நாளில் வயது முதிர்ந்தோரைச் சந்திப்பது ஆகிய இரு நிகழ்வுகள் வழியாக, அந்நாளில் சிறப்பிக்கப்படும் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாளில் பங்குகொள்ளலாம் என்று, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை பரிந்துரைத்துள்ளது.

இந்நாளைக் கொண்டாடுவதற்கு உதவியாக, மேய்ப்புப்பணி, மற்றும், திருவழிபாடு சார்ந்த கையேடுகளையும், சில பரிந்துரைகளையும் உலகின் மறைமாவட்டங்களுக்கு அனுப்பியுள்ள அத்திருப்பீட அவை, அந்நாளில் தனிமையில் இருக்கும் முதியோரைச் சந்திப்பவர்கள் மற்றும், அவர்களோடு இருப்பவர்களுக்கு, திருஅவை வழங்கும் நிறைபேறு பலன்கள் உண்டு எனவும் அறிவித்துள்ளது.

தனிமையில் இருக்கும் முதியோரைச் சந்திப்பது, இக்காலத்தின் இரக்கத்தின் பணியாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும் திருப்பீட அவை குறிப்பிட்டுள்ளது.

 

Comment