No icon

1

டெலிவிசா தொலைக்காட்சிக்கு தம் பணி, பதவி துறப்பு ஆகிய கேள்விகளுக்கு திருத்தந்தை வழங்கிய நேர்காணல்

"நான் பதவி விலகினால், உரோம் நகரின் முன்னாள் ஆயர் என்ற முறையில் அந்நகரிலேயே தங்கி இருப்பேன்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டெலிவிசா யுனிவிஷன் (Televisa Univision) என்ற மெக்சிகோ நாட்டு தொலைக்காட்சியின் ViX அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

உடல்நலம், தலைமைப்பணியைத் துறத்தலுக்குரிய வாய்ப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, உக்ரைன் போர், சிறாருக்கு எதிராக இடம்பெறும் பாலியல் முறைகேடுகள் போன்ற விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு டெலிவிசா யுனிவிஷன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ நாட்டு டெலிவிசா யுனிவிஷன் தொலைக்காட்சியின் மரிய அன்டோனியட்டா கொலின்ஸ்  மற்றும் வாலன்டினா அலாஸ்ராக்கி  ஆகிய இரு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப்பணித் துறப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, இந்நேரத்தில் ஆண்டவர் பணித்துறப்பு பற்றி என்னிடம் கேட்பதாக நான் உணரவில்லை, அவ்வாறு நான் உணர்ந்தால், அதற்கு ஆகட்டும் எனப் பதில்கூறுவேன் என்று கூறியுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் கர்தினால்கள் அவை இடம்பெறும் சமயத்தில், திருத்தந்தை 5ம் செலஸ்டினின் கல்லறை அமைந்துள்ள, இத்தாலிய நகரமான லா அக்குயிலாவுக்குச் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வதோடு தொடர்புபடுத்தி, அவர் தலைமைப்பணியைத் துறப்பார் என்ற வதந்திகள் அண்மை வாரங்களாக ஊடகங்களில் பரவிவருகின்றன.

திருத்தந்தை 5ம் செலஸ்டின் அவர்கள், 1294ம் ஆண்டில் தனது பாப்பிறை தலைமைப்பணியைத் துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரும் முன்மாதிரிகை, தான் தலைமைப்பணியைத் துறப்பது அவசியமா? என்பது குறித்து தீர்மானம் எடுக்க தனக்கு உதவும் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் பணியைத் துறந்தால், உரோம் ஆயர் என்ற முறையில், உரோம் புனித யோவான் இலாத்தரனில் தங்கியிருப்பேன், அர்ஜென்டீனா செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார். 

தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் கர்தினால்கள் அவைக்கு உரோம் நகருக்கு வந்தபோதே, புவனோஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் என, எனது ஓய்வு குறித்து தயாராகவே வந்தேன் என்றுரைத்த திருத்தந்தை,  ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவது, நோயாளர்களைச் சந்திப்பதே எனக்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைப் பெரிதும் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் தங்கியிருக்கும் மாட்டர் எக்லேசியாயி (Mater Ecclesiae) இல்லத்திற்கு மகிழ்வோடு சென்று அவரைச் சந்திக்கும்போதெல்லாம், அவர் தனது நன்மைத்தனம், மற்றும், இறைவேண்டலால் திருஅவையைத் தாங்கிப்பிடிக்கிறார் என்பதை உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புனித மற்றும், கூரியநோக்குடைய மனிதர் என்பதை, அவரை முதன்முதலில் சந்தித்தபோதே உணர்ந்தேன் என்றுரைத்த திருத்தந்தை, தனது உடல்நலம் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, முழங்கால் மூட்டுவலி குணமாகி வருவதாக நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

உலகில் துண்டு துண்டாக இடம்பெற்றுவரும் போர்கள், செப்டம்பரில் கஜகஸ்தானில் நடைபெறும் பல்சமய நிகழ்வில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களைச் சந்திக்கும் எண்ணம், பெருந்தொற்றின் எதிர்விளைவுகள், கருக்கலைப்பு விவகாரம் என, டெலிவிசா யுனிவிஷன் தொலைக்காட்சி முன்வைத்த மேலும் பல கேள்விகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் பதிலளித்துள்ளார்.

Comment