No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருப்பீட சீர்திருத்தங்கள், வருங்கால ஊழல்களைத் தவிர்க்க உதவும்

வத்திக்கானில் நிதியைக் கையாள்வது குறித்த விடயங்களில் தற்போது இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்கள், வருங்காலத்தில் நிதி சார்ந்த ஊழல்களைத் தவிர்க்க உதவும் என்று தான் நம்புவதாக, அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்,.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் Philip Pullela அவர்கள், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து, பல்வேறு தலைப்புக்களில் முன்வைத்த கேள்விகளுக்கு, திருத்தந்தை அளித்துள்ள பதில்கள், ஏற்கனவே மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை 7, இவ்வியாழன் மாலையில் வெளியிடப்பட்ட இப்பேட்டியின் நான்காவது பகுதியில், வத்திக்கானில் நிதி சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்கள் குறித்த தன் எண்ணங்களை திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டுள்ளார்..

வத்திக்கானில் நிதி கையாளப்பட்ட முறைகளில் இடம்பெற்றுள்ள ஊழல்கள், இனிமேலும் இடம்பெறாது என்பதில் நம்பிக்கை இருக்கின்றதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, அண்மை ஆண்டுகளில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்த, வத்திக்கானில் இடம்பெற்றுள்ள நிதி ஊழல்களைத் தடுத்துநிறுத்த, இச்சீர்திருத்தங்கள் உதவும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பீடச் சீர்திருத்தத்தில், பொருளாதார வல்லுநர்கள், நன்கொடையாளர்கள் மற்றும், நண்பர்களிடம் சிக்கிக்கொள்ளாதவர்கள் போன்றோரைக்கொண்டு பொருளாதாரச் செயலகம் உருவாக்கப்பட்டிருப்பது குறித்து திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இலண்டனில் ஆடம்பர கட்டடம் ஒன்று வாங்கப்பட்ட விவகாரத்தை திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார் என, பத்திரிகையாளர் Pullela அவர்கள் கூறியுள்ளார்.

Comment