No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் மறக்க இயலாத லாம்பெதூசா தீவுப் பயணம்

மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் கடுந்துயர்களின் அடையாளமாக விளங்கும், இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று அம்மக்களைச் சந்தித்த ஒன்பதாம் ஆண்டு, ஜூலை 08, வெள்ளியன்று நினைவுகூரப்படுகிறது.

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப் பணியில் முதல் பயணமாக, லாம்பெதூசா தீவுக்குச் சென்று, மத்தியதரைக் கடலில் உயிரிழந்த அனைத்து புலம்பெயர்ந்தோரின் நினைவாக, அக்கடலில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உலக அளவில் இடம்பெறும் புறக்கணிப்பு குறித்து அத்தீவில் உரக்க உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்த ஆண்டுகளில், எண்ணற்ற நிகழ்வுகளில், அடுத்திருப்பவரைப் புறக்கணிப்பது, அலட்சியமாக நோக்குவது, மற்றும், மனிதரை நிராகரிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிராக, தனது கண்டனங்களைத் தெரிவிப்பதற்கு, லாம்பெதூசா பயணமே பின்புலமாக இருந்தது.

உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், தன் மறைமாவட்டத்திற்கு வெளியே திருத்தந்தை மேற்கொண்ட முதல் பயணம், அவரது தலைமைத்துவப் பணியின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறலாம்.

ஒன்பது ஆண்டுகளுக்குமுன்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரையில், காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொலைசெய்தவுடன், உள்ளத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போல, கடவுள் அவனிடம், உன் சகோதரன் எங்கே? எனக் கேட்டு உரையாடியதைக் குறிப்பிட்டார். அதற்குப்பின்பு, திருத்தந்தை அதே உரையாடலை, பல நேரங்களில் குறிப்பிட்டு, அனைவரும் அது குறித்து சிந்திக்குமாறு அழைப்புவிடுத்து வருகிறார்.

வறுமையால் வாடி, போரால் நசுக்கப்பட்டு புலம்பெயர்ந்துள்ள உங்கள் சகோதரர்கள் எங்கே? என்ற கேள்வியை திருத்தந்தை நம் அனைவரிடமும் அடிக்கடி எழுப்பி, அம்மக்களுக்கு உதவவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment