No icon

Kuzhithurai Bishop resigns..

குழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்

புதுதில்லி ஜூன் 06. 2020 (நம் வாழ்வு). குழித்துறை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜெரோம்தாஸ் வறுவேல் ச.ச அவர்கள் அளித்த ராஜிநாமாவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களை அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை ஜூன் மாதம் ஆறாம் தேதி இந்திய நேரம் மதியம் 3.30 மணி அளவில் இந்தச் செய்தியை திருத்தந்தையின் இந்திய பிரதிநிதி மேதகு பேராயர் ஜியாம்பாட்டிஸ்டா டிகுவாத்ரோ அவர்கள் திருத்தந்தையின் உத்தரவின் பேரில் அறிவித்துள்ளார்.

 
விருப்ப பணி நிறைவுப் பெற்றுள்ள மேதகு ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் அவர்கள் படுவூர் என்னும் கிராமத்தில் அக்டோபர் 21, 1951 அன்று பிறந்தார்.  சலேசிய சபையில் சேர்ந்து ஜூன் 02, 1985 அன்று குருவாக அருள்பொழிவுச் செய்யப்பட்டார். கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பிப்ரவரி 24, 2015 அன்று திருநிலைப்படுத்தப்பட்டு பணிபொறுப்பு ஏற்றுக்கொண்டார். உடல் நலக் குறைவுக் காரணமாக அவர் விருப்பப் பணி நிறைவுப் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

குழித்துறை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், இதற்கு முன்பு புதிய ஆயர் நியமிக்கப்படும் வரை,  பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகச் செயல்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நான்கு மறைமாவட்டங்களுக்கு அப்போஸ்தலிக்க நிர்வாகிகள்

தமிழகத்தில் உள்ள குழித்துறை, திருச்சி, வேலூர் மற்றும் சேலம் மறைமாவட்டங்கள் தற்போது அப்போஸ்தலிக்க நிர்வாகிகளாக பல்வேறு ஆயர்களின் (வேலூர் தவிர)  நிர்வாகத்தின் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சேலம் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக தர்மபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களும், திருச்சி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களும், குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜூச.ச அவர்களின் தீடீர் மரணத்தின் காரணமாக அம்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக பேரருள்திரு.ஜான் ராபர்ட் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 18 லத்தின் ரீதி மறைமாவட்டங்களில் 4 மறைமாவட்டங்களுக்கு அப்போஸ்தலிக்க நிர்வாகிகள் உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

முடிவுக்கு வரும் சலேசிய சபையின் ஆயர்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் பணியில் இருந்த சலேசிய சபையைச் சேர்ந்த ஐந்து ஆயர்களில் இன்னும் ஒருவர் மட்டுமே பணி பொறுப்பில் இருக்கிறார். சென்னை மயிலை முன்னாள் பேராயர் மேதகு சின்னப்பா ச.ச பணி நிறைவுப் பெற்றுள்ளார். பணி நிறைவுப் பெற்ற தர்மபுரி முன்னாள் ஆயர் மேதகு அந்தோனி இருதயராஜ் சச அவர்களும் பணியில் இருந்த வேலூர் ஆயர் மேதகு சௌந்தரராஜூ ச.ச அவர்களும் அண்மையில் இறந்தனர். தற்போது விருப்ப பணி நிறைவுப் பெற்றுள்ள குழித்துறை முன்னாள் ஆயர் மேதகு ஜெரோம்தாஸ் வறுவேல் சச அவர்களும் சலேசிய சபையை சேர்ந்தவரே. தக்கலை சீரோ மலபார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மேதகு ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் ச.ச அவர்களும் சலேசிய சபையைச் சேர்ந்தவரே. இவர் மட்டுமே தற்போது தமிழகத்தில் உள்ள சலேசிய சபையைச் சேர்ந்த ஒரே ஆயர் ஆவார். மேதகு பேராயர் சின்னப்பா அவர்களும் மேதகு ஜெரோம்தாஸ் வறுவேல் அவர்களும் தற்போது ஓய்வில் உள்ளனர். தக்கலை சீரோ மலபார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மேதகு ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் அவர்கள் மட்டுமே சலேசிய சபையைச் சேர்ந்த பணியில் உள்ள தமிழகத்தில் உள்ள ஆயர் ஆவார். 

விருப்ப பணி நிறைவுப் பெற்றுள்ள மேதகு ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் சச  அவர்களுக்கு இறைவன் நல்ல உடல் உள்ள சுகம் தர வேண்டியும், அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள மதுரை பேராயரும் தமிழக ஆயர் பேரவையின் தலைவருமான மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் செபங்களையும் தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழான நம் வாழ்வு தெரிவித்து மகிழ்கிறது. 

Comment