No icon

New Saint for us - Venerable Melchiorre Maria de Marion Brésillac

புனிதராகப் போகும் தமிழகத்துடன் தொடர்புடைய வணக்கத்திற்குரிய ஆயர் மெல்கியோர் டி மரியயோன் பிரெஸ்ஸில்லியாக் வரலாறு

பிறப்பும் வளர்ப்பும்

ஆப்பிரிக்க மிஷனரி சொசைட்டியின் நிறுவனரான ஆயர் வணக்கத்திற்குரிய மெல்கியோர் டே மரியோன் பிரெஸ்ஸில்லாக் (Venerable Melchiorre Maria de Marion Brésillac)அவர்கள் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள காஸ்டல்நாடுரி (Castelnaudary -France) என்னுமிடத்தில் 1813 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி செல்வச் செழிப்புமிக்க, செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தார். 1789 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் புரட்சியின் காரணமாக இந்தக் குடும்பத்தின் செல்வாக்கு பாதிக்கப்பட்டிருந்த காலக்கட்டம்.  ஐந்து குழந்தைகளைக் கொண்ட இக்குடும்பத்தில் இவர்தான் மூத்த மகன் ஆவார். கனால் டு மிடி (Canal du Midi) என்னும் நிறுவனத்தின் ஆய்வாளராகவும் பொறியாளராகவும் இவர்தம் தந்தை பணியாற்றி வந்தார்.

கல்வியும் குருத்துவமும்

அவர்தம் தந்தையிடமிருந்து தொடக்கக்கல்வியைச் சிறப்பாக கற்றுத்தேர்ந்தார். 1832 ஆம் ஆண்டு இளங்குருமடத்தில் சேர்ந்த இவர், தமது மேல்நிலைக் கல்வியை கற்று முடித்தார். இறைவன் தம்மைக் குருத்துவ வாழ்விற்கு அழைக்கிறார் என்பதை இவர் உள்ளூற உணர்ந்து மகிழ்ந்தார். மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியைக் கற்று, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி 1838 ஆம் ஆண்டு ஒரு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இந்தியாவிற்கு வந்த மிஷனரி

குருவான பிறகு, அவர்தம் சொந்த நகரான காஸ்டல்நாடுரியில் உள்ள புனித மிக்கேல் ஆலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாக ஆயரால் நியமிக்கப்பட்டார். இப்படி ஓரிடத்தில் ஒரு நிலையான பணி என்பது சுகமானதுதான். இவ்விடத்திலேயே பணி செய்வதில் இவரால் மகிழ்ந்திருக்க முடியும். ஆனாலும் இறைவன் தம்மை ஒரு மிஷனரியாக மறைபணியாளராக பணியாற்றவே  அழைக்கிறார் என்பதை இவர் உணர்ந்தார். ஒரு மறைபணியாளராக கிறிஸ்துவை அறியாத பின்தங்கிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் தம் விருப்பத்தை அவர் தெரிவித்தபோது அவர்தம் மறைமாவட்ட ஆயரும் அவர்தம் தந்தையும் விரும்பவில்லை. ஆனாலும் தம்முடைய பிரெஸ்ஸில்லாக் தம்முடைய மிஷனரி வாழ்வில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர்தம் மறைமாவட்ட ஆயர் இவரது மறைபணி விருப்பத்திற்கு தம்முடைய இசைவைத் தெரிவித்தார். ஆனால் அவருடைய தந்தை இதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த நிலையில் 1841 ஆம் ஆண்டு தம்முடைய பங்குப் பணியிலிருந்து விடுபட்டு, பாரிஸ் வேதபோதக சபையில் சேர்ந்து தம்முடைய மறைபரப்புக்கான இறையழைத்தலை ஆழப்படுத்தினார். அவர் தந்தையைச் சந்தித்து, அவரிடமிருந்து தான் சென்றுவருகிறேன் என்று பிரியா விடை பெறாமலேயே பாரிஸ் வேதபோதக சபையில் (Missions Etrangeres de Paris – MEP) சேர்ந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கு ஒரு மிஷனரியாக மறைப்பணியாளராக அனுப்பப்பட்டார்.  ஜூலை மாதம் 24 ஆம் தேதி, 1842 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை அவர் வந்தடைந்தார்.

அவர்தம் மனவுறுதியும் தீர்மானங்களும்

இந்தியாவிற்கு ஒரு மிஷனரியாகப் புறப்படுவதற்கு முன்பு அவர் தியானத்தில் பங்கேற்று, பின்வரும் தீர்மானங்களை தமக்குத்தாமே இறைவனின் தூண்டுதலுடன் மேற்கொண்டார்.

•             உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒரு மிஷனரியாக நான் இருக்க வேண்டும்.

•             இறைவனின் பணியில் ஆழமாக வேரூன்றி தொடர்ந்து முன்னேற உதவும் எதனையும் அலட்சியம் செய்யக்கூடாது.

•             இறைவார்த்தையை அறிவிக்க கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

•             அந்தந்த நாட்டை பூர்வீகமாகக் கொண்டு உருவாகும் குருக்களுக்கு தனது முழு வலிமையைப் பயன்படுத்தி, கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் சாதகமாக்கி இறைவனின் அருள்துணையோடு தக்கப்பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் இவர்தம் மறைப்பணி

இந்தியாவில் குறிப்பாக நம் தமிழகத்தில் 1842 ஆம் ஆண்டு முதல் 1854 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் ஏறக்குறைய பனிரெண்டு ஆண்டுகளை ஒரு மிஷனரியாக செலவிட்டார். தொடக்கத்தில் ஒரு சில மாதங்கள் பாண்டிச்சேரியில் ஒரு தமிழாசிரியரிடமிருந்து நம் தாய்மொழியான தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் (curate of Salem)  மறைபரப்புப் பணியாளராக அவர் தம் பணிவாழ்வைப் பேரார்வத்துடன் தொடங்கினார்.  அதன் பிறகு பாண்டிச்சேரி மறைபரப்புத்தளத்திற்கு பூர்விகக் குருக்களை உருவாக்குவதற்காக நிறுவப்பட்ட இளங்குருமடத்தில் குருமாணவப் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த இளங்குருமடம்தான் இன்று பெங்களூரூ பாப்பிறை குருமடமாக புகழ்பெற்று விளங்குகிறது.

சாதியமுறையை எதிர்த்தவர்

இவர் மறைபணியாளராக பாண்டிச்சேரி வந்த நாள் முதலே இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் தீண்டாமை என்னும் சாதியமைப்பு முறையைக் கண்டு திகைப்புற்றார். மனம் வெதும்பினார். இச்சாதியக் கொடுமைகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் சமுதாய வாழ்வு தீர்மானிக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்தார். அவர் அறிவிக்கும் நற்செய்தி கடவுளின் முன்பு அனைவரின் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் திருஅவையோ இதனைக் கண்டும் காணாமல், பொருட்படுத்தாமல் செயல்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்; சினங்கொண்டார். இந்த சாதிய அமைப்பு முறையை அவர் கேள்விக்குள்ளாக்கினார்; ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்பையே எதிர்கொண்டார்.

கோவையில் ஆயராக.. அவர்தம் பணி

ஒரு மேய்ப்பராகவும் குருமட அதிபராகவும் அவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு அனைவரும் நன்றி பாராட்டினர். அவர்தம் நிர்வாகத் திறமையும் அறநெறிச் சார்ந்த சிந்தனையும் அனைவரையும் கவர்ந்தது. இந்தியாவிற்கு வந்து முதல் நான்கு வருடங்களில் இவர்தம் திறமையும் இந்திய மண்ணில் அவர் ஆற்றும் மறைபணி மீதான ஆர்வமும் மிகவும் பாரட்டுக்குரியதாக அமைந்தது. இந்த நிலையில் அவர் இணை அப்போஸ்தலிக்க பிரதிநிதியாக  (Pro-Vicar) நியமிக்கப்பட்டார். பின்னர்,1846 ஆம் ஆண்டு   கோயம்புத்தூர் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாக (Vicar Apostolic of Coimbatore, with the title of Bishop of Pruse)அதாவது ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.

மண்ணின் மைந்தர்களே.. மறைபணியாளர்களாக..

 தாம் தேர்ந்து கொண்ட விருவாக்கிற்கிணங்க, மண்ணின் மைந்தர்களையே அருள்பணியாளர்களாக உருவாக்கும்பொருட்டு, மறைமாவட்ட குருமடத்தை நிறுவினார். அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, அங்குச் சென்று குருமாணவர்களைப் பார்ப்பதிலும் . அவர்களுக்கு தியானத்தை வழிநடத்துவதிலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு ஊக்கவுரை வழங்குவதிலும் பேரார்வத்துடன் செயல்பட்டார்.  குருமாணவர்களும் இவரின் ஆன்மிக வாழ்வால் ஈர்க்கப்பட்டு, இவரது மறைபணி ஆர்வத்தால் தூண்டப்பட்டனர். 

சாதியத்தை எதிர்த்த மகாத்மா

இவர்தம் காலத்தில், கொங்குப் பகுதியில், சீரோ மலபார் வழிபாட்டு முறையை வழிபாடுகளில் பின்பற்றுவது குறித்தும், சாதிமுறையை கடைபிடிப்பது குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும் எந்த பழக்கவழக்கத்தை ஏற்றுக்கொள்வது, எதை விடுவது என்பதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அப்போஸ்தலிக்க பிரதிநிதியான இவர், எழுந்த கேள்விகளை நன்கு ஆராய்ந்து, கத்தோலிக்க திருஅவையின் திருப்பீடம் ஏற்றுக்கொண்ட நடைமுறைகளையும் அது விலக்கியுள்ள நடைமுறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து மந்தையை வழிநடத்த விரும்பினார். 

மறைபணிமீதான தீராத ஆர்வம்

இந்திய மண்ணிலிருந்து போதுமான அருள்பணியாளர்களை உருவாக்கி, அவர்களையே மறைபணியாற்ற வைத்து, உலகில் இன்னும் நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களுக்குச் சென்று மறைபணியாற்ற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். செல்லுமிடமெல்லாம் இதனையே வலியுறுத்தினார். இவரது இந்த புதுமையான, புரட்சிகரமான எண்ணம் அவர்தம் சக மிஷனரிகளுக்கு சற்றே வித்தியாசமாகவே தோன்றியது. ஏனெனில் மண்ணின் மைந்தர்கள் அறிவுரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் இன்னும் சற்றே மேம்பட வேண்டும் என்ற எண்ணம் அக்காலத்தில் சக குருக்களிடையே இருந்தது.

ஆயர்பணியை ராஜிநாமா செய்தார்

ஒன்பது ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றிய நிலையில், 1854 ஆம் ஆண்டு உரோமைக்குச் சென்று, அவர்களுக்கு ஆட்சேபணையில்லையெனில் தம்முடைய ராஜினாமாவை நேரிடையாக திருப்பீட அதிகாரிகளைச் சந்தித்து தர விழைந்தார். அவர் அன்புடன் வரவேற்ற திருத்தந்தையும் மறைபரப்பு பணிக்கழகத்தின் செயலரும் அவருடைய விண்ணப்பத்திற்கு  கவனமுடன் செவிசாய்த்தனர்.  இருப்பினும் மறைபரப்புத்தளத்தில் தற்போதுள்ள நிலையே தொடர்ந்தால் நல்லது என்று முடிவெடுத்து அதனை அவரிடம் தெரிவித்தனர். ஆயர்நிலையிலிருந்து ராஜிநாமா செய்துகொள்ள அனுமதிக்கும்படி அவர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டனர். இது ஆயர் டி பிரெஸ்ஸில்லியாக் அவர்களுக்கு வலி மிகுந்ததாகவே இருந்தது.  ஒரு மிஷனரியாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்ட நாளிலிருந்தே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். தம்மைத்தாமே ஆன்மபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு ஆழமாக செபித்தார். தமக்குத்தாமே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டார்.

இறைவா, நான் உம்முடைய குரலை நன்றாகக் கேட்டு, அதற்குச் செவிசாய்க்கிறேனா? உமக்கு கீழ்ப்படிவதில் நான் பற்றுறுதியோடு இருக்கிறேனா? இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் மறைபணியாற்றிய பிறகு, என்னுடைய கப்பல் பணத்தை நான் மேற்கொள்ளும்போது உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறேனா? இல்லை எனக்கு செவிசாய்த்து செய்கிறேனா?

அவர்தம் சகோதர சகோதரிகள் மற்றம் குடும்பத்தாரோடு சில காலம் செலவழித்தபிறகு, பாரீஸில் உள்ள பாரிஸ் வேதபோதக சபையில் தலைமை இல்லத்திற்குச் சென்றார். இதற்கிடையே கோயம்புத்தூர் ஆயர் நிலையிலிருந்து அவர்செய்த ராஜிநாமாவை உரோமைத் திருப்பீடம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது.

மீண்டும் ஒரு மிஷனரியாக புதுபிறப்பு

இருப்பினும் மறைபணிமீதான ஆர்வத்தால் இவர் பற்றியெரிந்தார். ஆகையால் விசுவாசப் பரம்புதல் சபைக்கு (மறைபரப்புப் பணிக் கழகத்தின்) செயலர் அவர்களுக்கு தாம் மீண்டும் ஒரு மிஷனரியாக, மறைபரப்புப் பணியாளராக செயல்பட தமக்குள்ள பேரார்வத்தை வெளிப்படுத்தி கடிதம் எழுதினார். தாம் இறக்கும் வரை ஒரு மிஷனரியாக இருக்க வேண்டும் என்ற அழைப்பதை அவர் ஆழமாக உணர்ந்தார்; நம்பினார். எனவே தன்னுடைய இரண்டாவது மிஷனரி வாழ்வை மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை நாடுகளில் தொடங்கிட தமக்குள்ள விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

கொள்கை அளவில் இதனை ஏற்றக்கொண்ட உரோமைத் திருப்பீடம் ஆனால், அவர் தனியொருவராக இந்தப் பணியை மேற்கொள்வதை விரும்பவில்லை. எனவே இந்த மறைபரப்புப் பணிக்கென ஒரு சபையை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தது.  பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி, 1856 ஆம் ஆண்டு ஒரு மிஷனரி கழகத்தை ஏற்படுத்த உரோமைத் திருப்பீடம் அனுமதியும் வழங்கியது. இருந்தபோதிலும் அவர் கண் முன் உள்ள பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. இந்த  அனுமதியைப் பெற்றுக்கொண்ட இவர், தமது பயணத்தின் இரண்டாவது பகுதியைத் தொடர்ந்தார். இந்த மறைபரப்புப் பணிக்கென போதுமான நிதி ஆதாரத்தையும் உருவாக்கி,  அருள்பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினார். பிரான்ஸ் நாடு முழுவதும் பயணித்து, தம் சபையில் சேரும்படி அருள்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைமக்களை ஆலயங்களில் சந்தித்து, வளரும்தம் சபைக்கென நிதி கொடை வசூல் செய்து தயாரானார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இறைவனின் அருட்துணையோடு இவர்தம் சபையானது படிப்படியாக வளரத் தொடங்கியது. அப்படி அவர்தம் சபையில் சேர்ந்த அருள்பணியாளர்களில் அகஸ்டின் பிளான்ங் (Fr.Augustine  Planque)அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இவரே பிற்காலத்தில் ஆயர் பிரெஸ்ஸில்லியாக் அவர்களின் மரணத்திற்கு பிறகு இச்சபையை வளர்த்தெடுத்தவர் என்பது மிகவும் பாராட்டத்தக்கது.

தோற்றுவிக்கப்பட்ட புதிய மிஷனரி சபை

 டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, 1856 ஆம் ஆண்டு, அன்னை மரியாவின் அமலோற்பவத் திருநாளன்று, பிரான்ஸ் நாட்டில் உள்ள லியோன் நகரத்தில் புகழ்பெற்று விளங்கும் போர்வியரே அன்னை (Shrine of Our Lady of Fourvière, Lyons, France)தாம் தேர்ந்துகொண்ட ஆறுபேர் அடங்கிய சின்னஞ்சிறு குழுவை வழிநடத்தினார். அங்கு அன்னை மரியாவிடம் அவர்களை ஒப்படைத்து, ஆப்பிரிக்க மறைபரப்பு பணியில் ஆர்வத்துடன் ஈடுபட இந்தச் சிறு குழுவை அர்ப்பணம் செய்தார். அது முதல் இந்த ஆப்பிரிக்க மிஷனரி சபையானது (Society of African Missions [SMA]) அமலோற்பவத் திருநாளை, டிசம்பர் 8 ஆம் தேதியை தம் சபை நிறுவப்பட்ட நாளாக கொண்டாடுகிறது. மூன்று அருள்பணியாளர்கள் அடங்கிய சிறு குழுவானது 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாடான சியாரா லியோனை (Sierra Leone)நோக்கி கப்பலில் புறப்பட்டது.

ஒரு மிஷனரியாகவே மரணம்

அதன் பிறகு, ஆயர் டி பிரெஸ்ஸில்லாக் தம்முடைய மிஷனரி பயணத்திற்கு தம்மைத் தயாரித்தார். சியாரா லியோனில் உள்ள ஃப்ரி டவுன் ( Freetown) என்னும் இடத்தை 1859 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி சியாரா லியோனின் முதல் ஆயராக ஓர் அருள்பணியாளரோடும் ஓர் அருள்சகோதரரோடும் வந்தடைந்தார்.  அவர் வந்தடைந்த ஆண்டுகளில் சின்னம்மை எனப்படும் நோய் தாக்கத்தால் கொத்து கொத்தாக ஆப்பிரிக்க மக்கள் மடிந்து வந்தனர். ஐரோப்பியர்களை மஞ்சள் காய்ச்சல் ((Yellow Fever)என்னும் கொள்ளைநோய் எளிதாக தாக்கியது. ஆகையால் ஆயர் அவர்களும் அவர்தம் குழுவினரும் வந்திறங்கிய நேரத்தில் எங்கும் மரண ஓலம் எதிரொலித்தது.  ஜூன் மாதம் 2 ஆம் தேதி, பல நாட்களாக நோய்வாய்ப்பட்டு துன்புற்று வந்த முதல் குழுவில் ஒருவர் இறந்தார். மூன்று நாட்கள் கழித்து, எதிர்பாராதவிதமாக திடீரென்று முதல் குழுவின் இரண்டாவது நபரும் இறந்தார். பனிரெண்டு நாட்களுக்குப் பிறகு அருள்சகோதரர்களில் ஒருவரும் பலியானார். இருந்த இன்னொரு அருள்சகோதரரும் பிரான்ஸ் நாட்டிற்கே திரும்பி விட்டார்.  தற்போது சியாரா லியோனில் ஆயர் டி பிரெஸ்ஸில்லியாக்கும் ஒரே ஓர் அருள்பணியாளர் மட்டுமே இருந்தனர்.  அருள்பணியாளர் ரேமண்ட் அவர்களும் மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த கையறுநிலையில் 1859 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி ஆயர் பிரெஸ்ஸில்லியாக் அவர்களும் மஞ்சள் காய்ச்சலின் காரணமாக தம் 45 ஆம் வயதில் மரணமடைந்தார்.  அருள்பணியாளர் ரேமண்ட் அவர்கள் மட்டுமே நோய்வாய்ப்பட்டு எஞ்சியிருந்தார். அவராலும் தமது சபையை நிறுவிய மறைந்த ஆயர் அவர்களின் அடக்கத் திருப்பலியை மேற்கொள்வதற்கோ அல்லது அவரது கல்லறையை கத்தோலிக்க முறைப்படி மந்திரிப்பதற்கோ முடியவில்லை. பிரிவினை சபையைச் சேர்ந்த ஒரு புரொட்டஸ்டான்ட் பாஸ்டர் ஒருவரால் இவர் ஃபிரி டவுன் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறையில் எஞ்சியவற்றை பிரான்ஸ் நாட்டில் லியோன்ஸ் நகர இந்த ஆப்பிரிக்க துறவறச் சபையின் சிற்றாலயத்திற்கு 1928 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கொண்டு சென்றனர். 

இவரைப் புனிதராக அறிவிப்பதற்கான தொடக்க நடைமுறைகள் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி இறை ஊழியர் மெல்க்கியோர் டி மரியோன் பிரெஸ்ஸில்லாக் அவர்களின் புண்ணிய வாழ்வை அங்கிகரித்து வணக்கத்திற்குரியவராக அறிவித்துள்ளார்.

(கத்தோலிக்கத் திருஅவையில் தகுதியுள்ள ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, முதல் நிலையில் இறை ஊழியராகவும் (Servant of God) பின்னர், வணக்கத்திற்குரியவராகவும் (Venerable) மூன்றாவது நிலையில் பேறுபெற்றவராகவும் (Blessed) நான்காவது நிலையில் புனிதராகவும் (Saint)  அறிவிக்கப்படுவார்)

வணக்கத்திற்குரிய ஆயர் மெல்கியோர் டி மரியயோன் பிரெஸ்ஸில்லியாக் அவர்களிடம் பரிந்துரை செபம்

இறைவா, ஆயர் மெல்கியோர் டி மரியயோன் பிரெஸ்ஸில்லியாக் அவர்களை உமக்குப் பணி செய்ய அழைத்தீரே.  உம்மை அறிவிக்கவும் அன்பு செய்யவும் நீரே அவரை இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் அனுப்பினீர். நீரே அவருக்கு வாழ்வையும் தேவையான அனைத்தையும் அளித்தீர். அவர்தம் வாழ்வும் போதனையும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு மறைபரப்புக்கான கடமையுணர்வைத் தூண்டுவதாக.  மறைபரப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்ட இந்த நற்பணியாளரின் புண்ணிய வாழ்வை எம் தாய்த்திருஅவை அங்கிகரிக்கும் பொருட்டு.  இவரது பரிந்துரையால் நாங்கள் கேட்கும் இந்த வேண்டுதல் வரங்களை எமக்கு அளித்தருளும். ( வேண்டுதல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும்)

இவற்றை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

வணக்கத்திற்குரிய ஆயர்  மெல்கியோர் டி மரியயோன் பிரெஸ்ஸில்லியாக் அவர்களின் பரிந்துரையால் புதுமைகள் நடைபெற்றவர்கள் பின்வரும் முகவரியைத் தொடர்புக் கொள்ளவும்.

Rev Fr Postulator SMA, Missioni Africane, Via della Nocetta 111, 00164 ROMA, ITALY Fax number: +39-06-66 16 84 90 Email: postulator @ smaroma.org

 

செய்தி : © நம் வாழ்வு

செய்தி மூலம் : https://sma.ie/sma-founder-moves-closer-to-canonisation/

https://sma.ie/founder-of-sma/

 

Comment