No icon

New Saint from Tamilnadu/Coimbatore

தமிழகத்தின் கோயம்புத்தூரில் அப்போஸ்தலிக்க பிரநிதியாகப் பணியாற்றிய இறைஊழியர்  உட்பட அருளாளர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஏற்பு

மே 27, 2020- நம் வாழ்வு: புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, அருளாளர்கள் மற்றும், வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள், இன்னும், இறைஊழியர்களின் புண்ணியப் பண்புகள் குறித்த விவரங்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், மே 26 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, விசுவாசப் பரப்பு கழகம் மற்றும், வாழும் செபமாலை கழகம் தொடங்கப்படுவதற்கு வித்திட்ட வணக்கத்துக்குரிய பாவுலினோ மரியா யாரிகோட் (Paolina Maria Jaricot) அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற ஒரு புதுமை உட்பட, மூன்று அருளாளர்கள் மற்றும், ஒரு வணக்கத்துக்குரியவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைகள், இரு மறைசாட்சிகள் மற்றும் ஓர் இறை ஊழியரின் புண்ணிய வாழ்வுப்  பண்புகள் குறித்த விவரங்களையும் சமர்ப்பித்தார்.

திருத்தந்தை இந்த விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து, அருளாளர்கள்  சிசாரே டே பஸ்  Cesare de Bus, கார்லே டி போக்கோல்டு  Carlo de Foucauld, மரியா டோமினிக்கா மன்டோவானி Maria Domenica Mantovani ஆகியோர் புனிதர்களாகவும், வணக்கத்துக்குரிய  பாவுலினோ மரியா யாரிகோட் Paolina Maria Jaricot,, மிச்சலே மெக்கிவின்னி   Michele McGivney ஆகிய இருவரும் அருளாளர்களாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு அனுமதியளித்துள்ளார்.

1799 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொல்லப்பட்ட, கசாமாரி  (Casamari) சிஸ்ட்டெர்ஷியன் துறவு சபையைச் சார்ந்த சிமோனே கார்டோன்  Simeone Cardon மற்றும், அவரோடு சேர்ந்த 5 பேர், 1980ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, எல் சால்வதோரில் கொல்லப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி கோஸ்மா ஸ்பெஸோட்டோ  Cosma Spessotto ஆகிய ஏழு மறைசாட்சிகளின் புண்ணியப் பண்புகளைத் திருத்தந்தை ஏற்றுள்ளார். இதன் வழியாக, அவர்கள் அருளாளர்கள் என அறிவிக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில், தமிழகத்தின் கோயம்புத்தூரில் அப்போஸ்தலிக்க பிரநிதியாகப் பணியாற்றிய இறைஊழியர் ஆயர் மெல்கியோர் மரியா டி மாரியோன் பிரெஸில்லாக் (Melchiorre Maria de Marion Brésillac) அவர்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகளையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆப்ரிக்க மறைபோதகச் சபையை ஆரம்பித்த ஆயர் பிரெஸில்லாக் அவர்கள், 1813ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிரான்ஸ் நாட்டின் காஸ்டல்நாவ்டாரியில் (Castelnaudary) பிறந்தார். இவர் 1859ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, ஆப்ரிக்காவின்  சியேரா லியோன் நாட்டில், ஃப்ரீடவடவுன்ஸ் (Freetownš) இறைவனடி சேர்ந்தார்.

Comment