No icon

பேரா.சி.ஜே.ரோஸ்

வீரிய விவசாயம் - மாற்று மேய்ப்புப் பணி

மலைவாழ் மானுடர் இருவர். தாயும், மகளும்,உயரமான மலையிலிருந்து அடிவாரத்திலுள்ளமருத்துவமனை நோக்கி வந்துகொண்டிருந் தனர். மகள் நிறைமாத கர்ப்பிணி. பேறுகால வலி அவளை ஆட்கொண்டது. தரையில் படுத்துவிட்டாள். என்ன செய்வது எனக் குழம்பினார் தாய். அவ்வழியாக வந்த ஓரிரு இளைஞரும் நிலைமையறிந்து செய்வதறியாது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். அங்கு வந்த இரு பெண்கள் பேறுவலியால் துடித்தவளுக்கு தங்களால் இயன்ற முதலுதவி செய்யத் தொடங்கினர். ஆனால் அங்கு கூடிய இளைஞர்களை விலகிச் செல்ல சொன்ன பிறகும், வேடிக்கை பார்ப்பதற்கு அவர்கள் அங்கேயே நிலை கொண்டனர்.

அப்பகுதியின் பங்குப் பணியாளரான  அருட்தந்தை ஜோசப் வடக்கன்  அவ்வழியாக வந் தார். நிலைமையை உணர்ந்தார். தனது அங்கியைகழற்றி நீள்வாக்கில் கீறி, இருபெண்களை இரு பக்கமும் பிடிக்கச் சொல்லி சிறு திரையை உருவாக்கி விட்டு, இளைஞர் பக்கம் சென்றார். சற்று நேரத்தில் ‘குவா குவா’ ஒலித்தது. இளம் தாயையும் குழந்தையையும் மருத்துவ மனையில் சேர்க்க இளைஞருடன் திட்டமிட்டார் அருட்தந்தை. இரு இளைஞர்கள் மலையேறி சற்று தொலை விலிருந்து ஒரு நார்கட்டிலை தூக்கி வந்தனர். கட்டில் உரிமையாளரும் அண்டை வீட்டினரும்உதவிக்கு உடன் வந்தனர். கட்டிலில் விரிக்கவும் குழந்தைக்கு போர்த்தவும் அருட்தந்தையின் அங்கி பயன்பட்டது.

தாய்-சேயை கட்டில் தாங்க, மலைவாழ்மானுடர் சூழ, மருத்துவமனைக்கு சென்றனர். அங்கி யின்றி, பேன்ட்-பனியனுடன் மருத்துவர் அறையில் உரையாடிக் கொண்டிருந்த அருட்தந்தையை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். உண்மையை அறிந்து வியந்தனர். தாய்-சேய் நலனில் மருத்துவ மனையினர்  அனைவருமே அக்கறைப்பட்டனர்.

கேரளாவின் திருச்சூர் மறைமாவட்டத்தில் நடந்த இந்நிகழ்வு அங்கு பணியாற்றிய  அருட்தந்தை ஜோசப் வடக்கனுக்கு தனது அருட் பணியின் முதன்மை இலக்கை துலக்கியது. அருட்பணி என்பது ஆலயத்தையும் பீடத்தையும் மட்டும் மையப்படுத்துவதல்ல. ஆலயத்தையும்  பீடத்தையும் மக்கள்-மைய வளர்ச்சிக்கு அடிப்படை யாக்குவதே சிறந்த அருட்பணி என அவர் உணர்ந்தார்.

ஆலய வளர்ச்சித் திட்டத்தை விட சமூகப் பிரச்சனையில் அனைவரும் இணைந்து உயர்வதே மேல், எனஇந்நிகழ்வில் தெளிவாயிற்று. ஒரு சமூகத்தைநெறிப்படுத்த இதுபோன்ற பொதுப்பிரச்சினை களை தொடுவது அருட்பணியின் தரத்தை உயர்த்துவதுடன் பரப்பையும் அதிகரிக்கும் என்பதை அருட்தந்தை தொட்டுணர்ந்தார். 

மலைப்பகுதியிலும் அடிவார கிராமங் களிலும் வாழ்பவர்கள் பல்வகை விவசாயிகள். சிறு, குறு நில விவசாயிகள் சிலரே. விவசாயக்கூலிகளே அதிகமானவர்கள். வாழ்வாதாரப் பிரச்சினைகள் அவர்களை வாட்டியது. விவ சாயிகள் வாழும் பகுதியில் அமைந்துள்ள பங்கின் அருட்தந்தை இவர்களிடம் இறங்கிச்சென்று பணியாற்ற ஆண்டவர் அழைத் திருப்பதை உணர்ந்தார்.

விவசாயத்தையே நம்பிப் பிழைக்கும்மக்களை மையப்படுத்தித் தனது அருட்பணியைஆற்ற அருட்தந்தை ஜோசப் வடக்கன் தீர்மானம் கொண்டார். இரண்டாம் வத்திக்கான்சங்க தயாரிப்புக் கருத்தரங்குகள் சிலவற்றில் அவர் பங்கேற்றபோது, அங்கு பகிரப்பட்ட சீர்திருத்த நெறிமுறைகள் அவரது புத்தாக்கப்பணிகளுக்கு உத்வேகமூட்டின.  விவிலியத் தில் புதைந்திருந்த இறைவார்த்தை அவர் இதயத்தில் ஒளி யேற்றியது:

“ஆண்டவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்; பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்; மலைகளில் புல்லை முளைக்கச்செய்கின்றார். கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் இரை கொடுக்கின்றார்.… உயர்தரக் கோதுமை வழங்கிஉன்னை நிறைவடையச் செய்கின்றார்.  தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது.… தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.” (திருப்பாடல் 147)

விவசாயத்தின் முதலும் முடிவும் ஆண்டவரின் ஆசியிலும் அருளிலும்தான் நடைபெறுகின்றன, என அருட்தந்தை மக்களுக்கு உணர்த்தத் தொடங்கினார். விவசாயிக்கு நேசக் கரம் நீட்ட ஆண்டவர் இருக்கும்போது அச்சமின்றி பயணிக்கலாம் என மறையுரை நிகழ்த்தினார். சாதி-மத வேறுபாடின்றி விவசாயிகள் ஓர் அணியாகத் திரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார். அதற்குப் பங்கு மக்கள் ஆதாரமாக செயலாற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்கள் வகுத்தார்.

முதலில் ஆலய வழிபாட்டில் சீர்திருத்தம் கொணர்ந்தார். வழிபாடு மக்களுடையது. அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகள் வழிபாட்டில் பிரதிபலிக்க வேண்டும் என் பதற்காக பிரச்சினைத்தெளிவு கூட்டங்கள் நடத்தினார். வழிபாட்டு பிரார்த்தனைகளை வாழ்க்கை பிரச்சினைகளின் குவியமாக அமைத்தார்.

மேலும், காணிக்கைப் பவனியின் நோக்கம் ஆலயத்திற்கு நிதி குவிப்பதற்கல்ல, மாறாக உள்ளவர்கள் - இல்லாதவர்கள் இடையே உள்ள இடைவெளியை அகற்று

வதாக அமைய வேண்டும் என அருட்தந்தை விரும்பினார். எனவே, காணிக்கைப் பொருள்களுடன் வருபவர்கள் பவனியின் ஒரு புறமும் அப்பொருள்களைப் பெற்று பயனடையஅழைக்கப்படுபவர்கள் மறுபுறமும் அணி வகுத்தனர். காணிக்கை ஒப்புக்கொடுத்தல் வேண்டலுக்குப்பின் பொருள்கள் பகிரப்பட்டன. அரிசி கொண்டு வந்தவர் இல்லாத வருக்கு பீடத்திற்கு முன் வழங்கினார். தேங்காயுடன் வந்தவர் இல்லாதவருக்கு அளித்தார். … இவ்வாறு காணிக்கைப் பவனி பொருள் பொதிந்தது. காணிக்கைப் பொருள்களின் ஏலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது.

பங்குத் தளத்தை பல நுண்தொகுதி களாகப் பிரித்து பிரச்சினைத்தெளிவு கூட்டங் கள் நடத்தினார். கிறிஸ்தவர்கள் அல்லாத விவசாயிகளும் பங்கேற்குமளவுக்கு நாளடைவில் தொகுதிகளை விரிவுபடுத்தினார். பிரச்சினைத்தெளிவு கூட்டங்களில் செயல் பாட்டு திட்டங்களும் உருப்பெற்றன. அருட்தந்தையின் சீர்திருத்த நோக்கும் செயல்பாடுகளும் விவசாயிகளை வெகுவாக கவர்ந்தன.

அவர் வெளியிட்ட ‘தொழிலாளி’ என்னும் வாரஇதழ் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிச்சமிட்டது. அவர்கள் ஒருங்கிணையவும் அது கருவியாக அமைந்தது. ஊர் மற்றும் வட்டார அளவுகளில் விவசாயிகள் மன்றங்களும் சங்கங்களும் அமைந்து பொறுப்பாளர்கள் தேர்வு பெற்றனர்.  மாவட்ட, மாநில அளவிலும் தலைவர்கள் தேர்வு பெற்றுப் பொறுப்பேற்றனர்.

தெளிவும் உணர்வும் பெற்ற வீர விவசாயிகளின் அமைப்பு நற்பணி மன்றமாக இல்லாமல், வலுவான அதிகாரமுள்ள அமைப்பாக விளங்குவதற்கு அது அரசியல் சக்தியாக பரிணமிக்க வேண்டுமென அருட்தந்தை உணர்ந்தார். அப்போதுதான் விவசாயிகளின் உணர்வுகளும் கோரிக்கைகளும் மதிக்கப் படும். விவசாயிகள் அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் குறைகளை எடுத்துக்கூறி உரிய நிவாரணம் பெற முடியும்.

இந்தத் தெளிவின் அடிப்படையில் விவசாயிகள் மன்ற-சங்க பொறுப்பாளர்களின் கூட்டம் 1962ல் நடைபெற்றது. முடிவில், விவசாயிகள் சங்கம் ‘கர்ஷகா தொழிலாளி பார்ட்டி’ (முகூஞ) என அரசியல் கட்சியாக பெயர் மாற்றம் பெற்றது. விவசாயி பி. வெல்லிங்டன் இக்கட்சியின் மாநிலத் தலைவராகவும் அருட்தந்தை ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின்

சாசனமும் இதரப் பொறுப்பாளர்களும் அறிவிக்கப் பட்டன. ‘தொழிலாளி’ வார இதழ் நாளிதழாக மலர்ந்தது. (இரண்டாம் வத்திக்கான் சங்கம் தொடங்கிய ஆண்டும் 1962 தான். நல்ல பொருத்தம்!)

விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்தது. விவசாயிகள் சிரமமில்லாமல் வீடு வசதி பெற கட்சியின் பெயரால் சுழல் நிதி ஏற்பாடாயிற்று. விவசாயிகளின் பிள்ளைகள் கல்வி வசதி பெறவும் விவசாயக் குடும்பங்களுக்கு மருத்துவ சேவை எட்டவும் கட்சியின் பெயரால் திட்டங்கள் உருவாயின.

விவசாயிகளின் எழுச்சி கிராமங்களிலும், மாவட்டங்களிலும், மாநிலத்திலும் புதிய மேம் பாட்டுணர்வை பாய்ச்சியது. சாதி-சமய எல்லைகள் கடந்து அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது.  தொழிலாளி கட்சி கேரள மாநிலத்தில் இயங்கிய தேசிய-மாநில அரசியல் கட்சிகளுடன் தோளோடு தோள் உரசுமளவுக்கு தனது உயர் நோக்காலும் கொள்கைகளாலும் ஆற்றலடைந்தது.

கேரள மாநிலத்தில் 1967 மார்ச்சில் நடைபெற்ற மாநில தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அமைக்கப்பெற்ற ஏழு கட்சிகள் கூட்டணியில் கர்ஷகா தொழிலாளி கட்சி முக்கிய அங்கம் வகித்து போட்டியிட்டது.  கூட்டணி அமோக வெற்றி பெற்று, தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. தொழிலாளி கட்சிதலைவர் விவசாயி பி. வெல்லிங் டன் சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பேற்றார். புதிய அரசின் உயர்மட்ட ஆலோசகருள் ஒருவராக அருட்தந்தை வடக்கன் நியமிக்கப்பட்டார். 1969 வரைஇக்கூட்டணி அரசு நீடித்தது.விவசாயிகள் சார்ந்த பிரச்சினை களையும் கோரிக்கைகளையும் அரசுக்கும் மாநிலத்திற்கும் முன் நிறுத்திய பெருமை தொழிலாளி கட்சியுடையது. 

அருட்தந்தை வடக்கனின் புரட்சிக் கணைகள் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் மழுங்கவில்லை. கர்ஷகா தொழிலாளி கட்சி அதிகார வளைப்பில் இல்லையெனினும், அக்கட்சியின் விழுதுகளின் வீச்சு தணியவில்லை. அதற்குக் காரணம் அக்கட்சியின் ஆன்மிக அடிப்படையே. ஆலய வழிபாடும் அருளுரைகளும் கட்சி வளர்ந்து பரிணமிக்க அடித்தளமாக அமைந்தன. ஆண்டவரின் பாடுகளையும் உயிர்ப்பையும் கொண்டாடும் திருப்பலி யில் கட்சியினரில் கத்தோலிக்க உறுப்பினர்கள் மிக்க தயாரிப்புடன் பங்கேற்றனர். கட்சி தலைவர் ப.வெல்லிங்டனை திருவனந்தபுரம் கார்மெல் துறவற ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பார்க்கலாம். ஆன்மீகத்திற்குக் கட்சியினர் அவ்வளவு ஈடுபாட்டினை அருட்தந்தை வளர்த்தினார்.

கட்சியின் செல்வாக்குச் சற்று சரிந்தபோது 1971ல் திருச்சூர் நகரில் தெக்கின் காடு மைதானத்தில் திருப்பலியுடன் கூடிய பொதுக் கூட்டம் நடத்தி வரலாறு படைத்தார். விவசாயக் குடும்பங்கள் குடிக்கு அடிமையாக நலிந்து போவதைக் கண்ட அருட்தந்தை மாநிலம் முழுதும் நடைபயணம் மேற்கொண்டு போதைக்கு எதிராக விழிப்புணர்வைப் பரப்பினார். 2002ல் தனது 83வது வயதில் அவர் உயிர் நீத்தாலும் விவசாயிகளில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

50க்கு மேற்பட்ட நூல்களை எழுதிய அருட்தந்தை வடக்கன் தன் வரலாறான ‘என்றெ குதிப்பும் கிடப்பும்’ (எனது உயர்வும் தாழ்வும்) நூலில் சிறக்கிறார்.

ஆன்மிகம் அரசியலையும் புரட்டும்!

மாற்று மேய்ப்புப் பணி காலத்தின் குரலாகும்.

Comment