No icon

குடந்தை ஞானி

புனித அன்னை தெரசாவின் பிறந்தநாளை அங்கீகரிக்க ஐ.நாவிடம் கோரிக்கை வலியுறுத்தல்

மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில், சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவரான ஆபிரகாம் மத்தாய், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "புனித அன்னை தெரசாவின் பிறந்தநாளை உலக இரக்க நாளாக கொண்டாட வேண்டும். ஏனெனில் புனித அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதையும் மானுட இரக்கத்திற்காக அர்ப்பணித்தவர். தெருக்களில் இருந்து கைவிடப்பட்டவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருந்து மற்றும் பிற அடிப்படை பராமரிப்புகளை வழங்கியவர். உலகெங்கிலும் துன்பப்பட்ட, தேவையில் இருந்த மனிதகுலத்திற்கு இரக்கத்தையும், கருணையையும், காட்டிய புனித அன்னை தெரசாவின் குணநலன்களை அங்கீகரிக்கும் வகையில் அவரின் பிறந்தநாளை உலக இரக்க நாளாக அறிவிப்பது மிகபொருத்தமாக இருக்கும். குறிப்பாக இன்றைய உலகில் இரக்கம், கவனிப்பு, பராமரிப்பு மற்றும் துன்புறும் மனிதகுலம் மீதான அக்கறை மிக வேகமாக மறைந்து வருகின்ற தருணத்தில், ஒடுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்ட மக்களின் நலனில் அக்கறையோடும், இரக்கத்தோடும் தன்னலமற்ற சேவையை புரிந்த அன்னை தெரசாவை கௌரவிக்கவும் வேண்டுமென நான் ஐ.நா.விடம் ஆர்வத்துடன் வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று பதிவு செய்திருந்தார்.

திரு. மத்தாய் ஜூன் 13 ஆம் தேதி, UCA செய்தி நிறுவனத்திடம், "இது காலத்தின் தேவையாகும். தன்னலமற்ற வாழ்க்கையை நடத்திய இரக்க சின்னங்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் நாட்களை ஐ.நா நிறுவி வருவது சிறப்பானது. உதாரணமாக 20 ஆம் நூற்றாண்டிலே ஜூலை 28 ஆம் தேதியை நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது. அதுபோல, 21 ஆம் நூற்றாண்டிலே புனித அன்னை தெரசாவின் தன்னலமற்ற சேவையை ஐ.நா அங்கீகரிக்கும்" என்று கூறினார். புனித அன்னை தெரசா 1910, ஆகஸ்ட் மாதம், 26 ஆம் தேதி, மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜேயில், அல்பேனிய கத்தோலிக்க பெற்றோர்களான நிக்கோலா மற்றும் டிரானாஃபைல் ஆகியோருக்கு பிறந்தார். 1929 ஆம் ஆண்டில் லொரேட்டோ சபை அருள்சகோதரியாக இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு வயது 19. நகரத்தின் சேரிகளில் மிகவும் வறியவர்களுக்கு சேவை செய்வதற்காக 1948 இல் அவர் சபையை விட்டு வெளியேறினார். 1950 - ல் அவர் புதிய சபையை ஆரம்பித்தார். இப்போது சுமார் 4,500 சகோதரிகளும், உலகெங்கிலும் உள்ள 136 நாடுகளில் 700 இல்லங்களும் இச்சபைக்கு உள்ளன.

Comment