No icon

குடந்தை ஞானி

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லியை தளமாகக் கொண்ட ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (UCF) எனும் தேசிய மதநல்லிணக்க உரிமைகள் குழுவானது, கிறிஸ்தவர்கள் மீது தொடரப்படும் பொய்வழக்கு கைதுகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை ஒன்றிய அரசாங்கமும், நீதித்துறையும் உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஐக்கிய கிறிஸ்தவ மன்றமானது (UCF), 2021 ஆம் ஆண்டில் 505 வன்முறை வழக்குகளும், 2022 ஆம் ஆண்டில் 207 வன்முறை வழக்குகளையும் மேற்கோள்காட்டி இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் (UCF) தேசிய தலைவர் மைக்கேல் வில்லியம்ஸ், "இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும் அவர்கள் விசாரணைகளை நடத்தவில்லை. ஒன்றிய அரசின் இத்துறைச்சார்ந்த அமைச்சர்கள் இதுபோன்ற துன்புறுத்தல்கள் எதுவும் நடக்கவில்லை என்று வாதாடுகின்றனர். ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் (UCF) தேசிய உதவி எண் 1800-208-4545 லிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மே மாதத்தில் மட்டுமே 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜனவரியில் 40, பிப்ரவரியில் 35, மார்ச்சில் 33, ஏப்ரலில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான வன்கொடுமைகள், ஆலயங்களை வலுக்கட்டாயமாக மூடுதல், ஞாயிறு வழிபாடுகளை சீர்குலைத்தல் என ஒவ்வொரு நாளும் நீண்டுகொண்டே இருக்கும் இந்நிலையை மாற்ற ஒன்றிய அரசாங்கமும், நீதித்துறையும் விரைந்து செயல்பட கேட்டுக்கொள்கிறோம்", என்று ஜூன் 13 ஆம் தேதி UCF செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Comment