No icon

குடந்தை ஞானி

ஒடிசா மாநிலத்தில் மூடப்பட்ட ஆலயம்

கிழக்கு இந்தியாவில் ஒடிசாவின் பத்ரக் கிராமப்புற காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெல்துவா கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை மாவட்ட நிர்வாகம் மூடுவதற்கு பிறப்பித்த ஆணைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 100 இறைநம்பிக்கையாளர்கள் இவ்வாலயத்தில் வழிபாட்டிற்காக கூடுவது வழக்கம். ஆனால், சில மதவாத அடிப்படைவாதிகள், இந்த கிறிஸ்தவ ஆலயம், மலைவாழ் மக்களை மதம் மாற்றும் இடமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது என்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மாவட்ட அதிகாரிகள் இப்புகாரை மேற்கோள்காட்டி இங்கு வழிபாடு செய்ய தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த வழக்கறிஞர் பிரதாப் சின்சானி, "அளிக்கப்பட்ட புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், மாவட்ட அதிகாரிகள் ஆலயத்தை திறப்பதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் தடை விதித்திருப்பது உண்மையாகவே வேதனையளிக்கிறது. பல ஆண்டுகளாக இவ்வாலயத்தில் வழிபாடு நடைபெறுகிறதேயன்றி, மதமாற்றம் நடைபெறவில்லை. சில மதவாத அடிப்படைவாதிகள் கிறிஸ்தவர்களைக் குறித்து வைத்து, வேண்டுமென்றே மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரச்சனையை உருவாக்குகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதுபோன்று தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ஒரு உட்பிரிவு மாஜிஸ்திரேட் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை," என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

1967 ஆம் ஆண்டில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட முதல் இந்திய மாநிலமாக ஒடிசா இருக்கிறது. ஆகஸ்ட் 2008 இல் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதி கொலை செய்யப்பட்டபோது, கந்தமாலில் கிறிஸ்தவ மறைபோதகர்கள், அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள், இறைமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

Comment