ஆகஸ்டு - 15
‘தளை’ உடைந்தது! ‘தாழ்நிலை’ அகன்றது!
ஆகஸ்டு 15-ஆம் நாள் என்றதும் நம் இந்தியத் தாய்த் திருநாட்டின் விடுதலைப் பெருநாள் கொண்டாட்டங்களும், நம் தாய்த் திரு அவையின் மரியன்னை விண்ணேற்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களுமே நம் கண்முன் வந்து நிற்கும்.
ஒன்று, அடிமையின் விலங்கொடிக்கப்பட்டு இம்மண்ணில் விடுதலைத் தளிர் துளிர்விட்ட நாள்; இரண்டு, ‘அடிமையின் தாழ்நிலையை இறைவன் கண்ணுற்று’ தம் தாய் மரியாவை இம்மண்ணகப் பிடியிலிருந்தும், அழிவிலிருந்தும் அவரது ஆன்மாவையும் உடலையும் காத்து, விண்ணக வாழ்வின் மகிமையில் பங்குபெற அன்னையை விண்ணகம் எடுத்துச் சென்ற மாபெரும் விழா!
ஆகஸ்டு 15, விடுமுறை நாள் என்ற எண்ணத்தைக் களைந்து, ‘வீர வணக்க நாள்’ என்றே பெருமை கொள்வோம். இந்திய மண்ணில் சூழ்ந்து கிடந்த அடிமை இருளைக் கிழித்துச் சுதந்திரப் பேரொளியை மக்கள் கண்ட பெருநாள் அது. விடுதலைத் தென்றல் நம் வீதிகளில் உலா வந்த நாள் அது! ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!’ விடுதலை அடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பாடிச் சென்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அக்கனவு நனவான ஆனந்தத் திருநாள் அது.
நம் முன்னோரின் வீரத்தை, தியாகத்தை, வெற்றியைக் கொண்டாடும் இந்நாளில் மூவர்ணக் கொடி கம்பத்தின் மேலே உயர்கின்றபோது, நம் எண்ணங்களும் உயரட்டும். உயர் இலட்சியமும், விடுதலை வேட்கையும் கொண்ட நம் முன்னோரின் கூட்டு முயற்சியும், வீழாத எழுச்சியும், அதனால் கிடைத்த வெற்றியும் நம் கண்முன் நிழலாடட்டும்.
இந்நாளில் விடுதலைக்காகத் தம்முயிரை வீரத்தியாகம் செய்த தியாகச் செம்மல்களை நினைவுகூர்வோம். ‘இந்தியா என் தாய்நாடு’ என்று பெருமைகொள்ளும் நாம், அதன் ஒப்பற்ற பற்றாளர்களாக எந்நாளும் வாழ்ந்திடுவோம்; பார் போற்ற உயர்ந்திடுவோம்! உண்மையான நாட்டுப் பற்று உள்ளவர்களாகச் சுய ஆதாயங்களைவிட, நாட்டின் நலனே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டவர்களாக வாழ்ந்திட உறுதிகொள்வோம்.
இந்திய மக்கள் நாம், விடுதலை வானில் சிறகடித்துப் பறக்க ஆசை கொண்டாலும் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் பண்பாட்டுக் கூறுகளால் இன்றும் கட்டுண்டவர்களாகவே இருக்கின்றோம். சிறகுகள் இருந்தும் அதை விரிக்க இயலவில்லை; பறக்க முடியவில்லை. இளைய தலைமுறை, எதிர்கால இந்தியாவின் உறுதிகொண்ட தூண்களான மாணவச் சமுதாயம் இப்பேருண்மையை இந்நாளில் உணர்ந்தாக வேண்டும்.
விடுதலை இந்தியாவைக் கண்ட ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தியின் கொள்கைகளும், வல்லரசு நாட்டைக் காண கனவு கொண்ட இளையோரின் ‘நேசத்தந்தை’ அப்துல் கலாமின் அறிவுரைகளும், அறவுரைகளும் நாளைய நவீன இந்தியாவைப் படைக்க நமக்கு வழிகாட்டட்டும். இந்தியத் திருநாட்டை மனித வளத்திலும், பொருளாதாரச் சிறப்பிலும், அறிவியல் முன்னேற்றத்திலும், சமத்துவ மேம்பாட்டிலும், ஒற்றுமைப் பண்பாட்டிலும் சிறந்த நாடாக உலக அரங்கில் அடையாளப்படுத்த இளைய தலைமுறை நாம் இந்நாளில் உறுதி ஏற்போம்.
எல்லாரும் எல்லாமும் பெற்று, இல்லாமை இல்லாமையாகும் நாட்டை உருவாக்குவோம்! நாட்டு வளங்கள் பகிரப்படவும், சீரிய நலன்கள் பேணப்படவும் வழி வகை செய்வோம். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்திய மாண்புடன் ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்னும் உரிமைக் குரலில் இனம், மொழி, மதம், சாதியம் கடந்து அனைவரும் ஒன்றாகக் கரம் கோர்த்து ஒன்றித்து வாழும் புதிய இந்தியாவைப் படைத்திடுவோம்! சமத்துவமும், சகோதரத்துவமும் கொண்ட மத நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்போம். ‘இந்தியா என் தாய்நாடு; இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்’ என்பது உறுதிமொழியாக மட்டும் நின்றுவிடாமல், நம் வாழ்வியல் மொழியாகவும், ஒவ்வோர் இந்தியனின் வாழ்வியலாக வும் மாறிட வகை செய்வோம்!
அவ்வாறே, அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நம்பிக்கையாளர்கள் யாவரும் தமது நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும், புடமிட்டுக் கொள்ளவும் வழிகாட்டுகிறது அன்னையின் இப்பெருவிழா. அருளின் பாதையைத் திறந்து அன்னை விண்ணகம் சென்றது, உயிர்த்த தனது மகனின் மாட்சியில் பங்கு பெறும் நம்பிக்கையை யாவருக்கும் விதைக்கிறது. இந்நிகழ்வு, நமது ஆன்மிக உறுதிப்பாட்டையும், புதிய வாழ்வின் விடியலுக்கான நம்பிக்கையையும் நமக்குத் தருகிறது. ஆகவேதான், திரு அவையின் மறைக்கல்வி வழிகாட்டி ஏடு, “மண்ணக வாழ்வு நிறைவுற்றபோது புனிதமிகு கன்னி மரியா, தன் மகனோடு ஏற்கெனவே பங்கு பெற்றிருக்கும் உயிர்ப்பின் மகிமையில் நிலைத்திருக்கும் வகையில், தனது உடலோடும், ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்; இது எல்லாத் திரு அவை உறுப்பினர்களுக்கும் விண்ணகப் பரிசு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது” என்றே குறிப்பிடுகிறது.
‘அடிமையின் தாழ்நிலையை கண்ணுற்ற இறைவன் எல்லாத் தலைமுறையும் போற்றும் வண்ணம்’ அன்னை மரியாவை மிகவே உயர்த்தியிருக்கிறார். இதனால் அன்னை மரியா நாசரேத்தூரின் திருக்குடும்பத்தைக் கடந்து, மூவொரு இறைவனின் திருக்குடும்பமும், புனிதர்களின் திருக்கூட்டமும், வானதூதர்களின் பெருந்திரளும் கூடியிருக்கும் விண்ணக ஆன்மிகக் குடும்பத்தில் ஒன்றிணையும் பேற்றினைப் பெறுகிறார்.
அன்னை என்பவள் உறவின் ஆதாரம்; உலகத்தின் எல்லா உறவுகளையும் துளிர்விடச் செய்தது இந்த உறவே. ஆகவேதான், உலகத்தில் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல் அம்மாவைக் குறிக்கும் சொல் என்பார்கள்! அவ்வாறே, நம் தாய் மரியா இந்த விண்ணேற்பு வாயிலாக மண்ணக உறவில் இருந்து, விண்ணக உறவுக்குப் பாலம் அமைக்கிறார். இந்த உறவுப் பாலம் தன் மகனை இணைத்து, தன் மகன் வழியாகத் தந்தையாம் கடவுளோடு இணைய அழைக்கிறது. ஆகவேதான், தூய லூயி டி மாண்ட்போர்ட், “மரியா - இயேசுவை அடைய எளிதான, இனிதான, உறுதியான வழி” (Mary is the easiest, sweetest and surest way to reach Jesus) என்கிறார். விண்ணகப் பயணத்திற்குப் பாதை அமைத்த அன்னை மரியாவைப் பின்பற்றி நாமும் விண்ணகப் பேரின்ப மகிமையில் பங்கு பெறுவோம். அவ்வாறே, விடுதலை இந்தியாவின் விழுமியங்கள் வாழ்வாக்கப்பட்டு இருளும் அடிமையும் களைந்து, ஒளியும் உரிமையும் நிறைந்த புதிய வாழ்வு மலர ஒன்றிணைவோம்! இந்நாளில் உறுதியேற்போம்!
ஒற்றுமை நம்மில் வளரட்டும்; புதிய இந்தியா மலரட்டும்!
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
Comment