No icon

நற்செய்தி அறிவிப்புப் பணி

ஆசிரியர் பக்கம்

என் இனிய நம்வாழ்வு வாசகப் பெருமக்களே!

பூமிப்பந்தின் ஒட்டு மொத்தப் பரப்பளவிலும், குறிப்பாக, இந்திய மண்ணிலும் மானுட ஏற்றத்திற்கான சமூகப் பணியில் கிறிஸ்தவ மறைப் பரப்புப் பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானது! போற்றுதற்குரியது! காலம் கடந்து இன்றளவும் நாம் பெருமைப்பட வேண்டியது. தனிமனித மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூக விடுதலைப் பணி என அனைத்துத் தளங்களிலும் கிறிஸ்துவின் உன்னத மதிப்பீடுகளை மனிதநேய எண்ணம் கொண்டு கிறிஸ்தவம் ஆற்றியுள்ள, இன்றும் ஆற்றிவரும் பணிகளும், முன்னெடுப்புகளும் பெரும் வியப்பூட்டுபவையே!

இத்தகைய மிகப்பெரிய சாதனைக்குப் பின்னால் மறைபரப்புப் பணியாளர்களின் உயர்ந்த இலக்கும், உன்னத மதிப்பீடுகளும், கடும் உழைப்பும், போராட்டமும், விடாமுயற்சியும் மறைந்திருப்பதை எள்முனையளவும் மறுக்க முடியாது. கிறிஸ்துவின் விடுதலை முழக்கத்தை இலக்காகச் சுமந்துஏழைகளுக்கு நற்செய்தி; சிறைப்பட்டோர்க்கு விடுதலை; ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு மற்றும் உடல், மன அமைதி இழந்தோர்க்கு புதுவாழ்வு” (லூக் 4:18) எனத் தணியாத தாகம் கொண்டு, மறைப்பணி வேட்கையில் உள்ளம் பற்றியெரிந்தோர் பலர். அவர்களின் வரிசையில் பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா அருள்சகோதரிகள் துறவறச் சபையைத் தோற்றுவித்த இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ S.J.அவர்களின் பணியும், வாழ்வும் குறிப்பிடத்தக்கவை. இம்மாபெரும் இறை ஊழியரின் கனவு மெய்ப்பட, அவருடைய எண்ணங்களை, மனநிலையை, உயிர் ஆற்றலை உள்வாங்கி, அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி உலகெங்கும் மறைப்பணி ஆற்றிவரும் கொன்சாகா அருள்சகோதரிகளின் பிறரன்புப் பணிகளை எண்ணிப் பெருமைகொள்ளும் இவ்வேளையில், உலகக் கத்தோலிக்கத் திருஅவையோடுநம் வாழ்வும்இணைந்து நெஞ்சார வாழ்த்துகிறது!

இறை ஊழியர் தந்தை மிக்கேல் அன்சால்தோ  S.J. அவர்களின் அருளாளர் பணிக்கான புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட ஆய்வின் நிறைவு விழா நினைவாக நம் வாழ்வில் வெளிவரும் இச்சிறப்பிதழ், பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா அருள்சகோதரிகளின் அர்ப்பண வாழ்வையும், சமூக ஈடுபாட்டையும், சமத்துவம் நோக்கிய விடுதலைப் பணிகளையும், நற்செய்தி அறிவிப்புப் பணிகளையும் அறிந்திடவும், இவற்றிற்கு வித்தாக இச்சபை நிறுவனரின் அருளாளர் பட்டத்திற்கான ஆய்வுப் படிநிலைகளையும் அறிந்திட உதவும் என நம்புகிறேன். நம் வாழ்வின் வாழ்த்துகளும், செபங்களும் உரித்தாகட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

 

Comment