No icon

‘ஊடகம்’

ஆசிரியர் பக்கம்

எழுத்துகளே உலகின் கூர்மையான

வலிமை மிகு ஆயுதம்.”

- சோவியத்தின் ஜோசப் ஸ்டாலின்

என் இனிய நம் வாழ்வு வாசகப் பெருமக்களே!

அன்புக்குரிய உங்கள் அருள்பணியாளன் இராஜசேகரன்.

ஒவ்வொரு மடலும் - உறவைச் சொல்லும்; உள்ளன்பைப் பகிரும்; உரிமையைக் காட்டும்; உடனிருப்பை உணர்த்தும்; உள்ளுணர்வை வெளிப்படுத்தும். எனது இந்த முதல் ‘ஆசிரியர் பக்கத்தை’ ஒரு மடலாகவே வரைந்து, உங்கள் வாசலை வந்தடைய விரும்புகிறேன். இவ்விதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

‘அறிமுகம் அவசியமா?’ என்ற கேள்வி என்னுள் எழுகிறது. இவ்விதழின் துணை ஆசிரியராக மற்றும் இணை ஆசிரியராகப் பயணித்த காலங்களில், எனது எழுத்துப் படைப்புகள் மேம்பட வாசகர் கடிதங்களால், நீங்கள் என்னைச் சிற்பியாய் செதுக்கியது நினைவலைகளில் நீங்காதிருக்கிறது. எனது வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பல குறிப்புகள் தந்து என்னை வளப்படுத்தி வார்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆகவே, அதற்கான நன்றியுடனும், அத்தகைய உரிமையுடனும், கடித உறவுடனே எனது எழுத்துப் பயணத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறேன்.

அரை நூற்றாண்டு கால வரலாற்றை நோக்கிப் பயணிக்கும் தமிழ்நாடு கத்தோலிக்கத் திருஅவையின் ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் இத்தருணத்தை எண்ணி மிகுந்த பேருவகை அடைகிறேன். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். கடந்து வந்த காலங்களில் இவ்விதழின் பெரும் வளர்ச்சிக்குப் பல ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்து, சிறப்புடன் வழிநடத்திச் சென்ற என் பெரும் மதிப்பிற்குரிய முன்னோடிகளை எண்ணிப் பார்த்து நன்றி கூறுகிறேன். தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியின் மேனாள் தலைவர்கள் - மதிப்பிற்குரிய ஆயர் பெருமக்களுக்கும், முதன்மை ஆசிரியர்கள், குறிப்பாக, அருள்முனைவர். வின்சென்ட் சின்னதுரை, அருள்முனைவர். மதுரை ஆனந்த், தந்தை தஞ்சை டோமி ஆகியோருக்கும் மற்றும் தற்போது இப்பணியிலிருந்து விடைபெறும் தந்தை குடந்தை ஞானி அவர்களுக்கும், துணை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும் மறைமாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றியை உள்ளன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய சமூகச் சூழலில் ‘ஊடகம்’ தவிர்க்க முடியாத ஆற்றல்மிகு தொடர்பு சாதனம். சமூகத்தையும், சாமானியரையும் இணைக்கும் உறவுத் தளத்தில் இது முக்கியமானதும், என்றும் தவிர்க்க முடியாததும் ஆகும். ‘ஊடகம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என்னும் கூற்றின் வழிநின்று, அகில உலக, ஆசிய, இந்திய மற்றும் தமிழ்நாடு திருஅவையின் சமூக, ஆன்மிக, அரசியல் மற்றும் வாழ்வியல் வழிகாட்டியாகவும், மானுட வளர்ச்சிக்கான ஏணியாகவும் ‘நம் வாழ்வு’ பயணிக்க வேண்டும் என்பதே எமது ஆவல். எம் முன்னோடிகள் விட்டுச் சென்ற காலச்சுவடுகளில் தடம் பதித்து, இவ்விதழ் தொடங்கப்பட்டதன் நோக்கமும், மேற்கொண்டிருக்கும் இலக்கும் சிறிதேனும் குன்றாமல் குறையாமல், காலத்தின் தேவை அறிந்து, கூரிய தொலைநோக்குப் பார்வையுடன் புதிய ஊடகத் தகவல் தொழில் நுட்பங்களை உள்வாங்கி, இதழின் பரவலுக்கான பல உத்திகளையும், அணுகுமுறைகளையும் உருவாக்கி, இன்னும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பம்.

சமூகப் பொறுப்புமிக்க இப்பணியில் யாம் அனைவரும் ஒன்றிணைந்து ‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!’ எனும் அறைகூவலுடன் இன்றே எழுத்துப் புரட்சி செய்திடுவோம்! நமது இறை நம்பிக்கை ஆழப்படவும், ஆன்மிகம் ஏற்றம் பெறவும், சமூகம் மாற்றம் பெறவும், தமிழ்க் கலாச்சார கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகள் வளர்ச்சி காணவும், இயற்கை நேயமும், மானுட நேசமும் கொண்ட நமது தொன்மையான வாழ்வியல் நெறிமுறைகள் மீட்டுருவாக்கம் பெறவும், இளையோர் புது விடியலுக்கான எழுச்சி பெறவும், காலத்தின் தேவையில், கள எதார்த்தத்தின் சூழலில் யாவரும் விசாலப் பார்வை கொண்டு சமூக-அரசியல் விழிப்புணர்வு பெறவும் இவ்விதழ் பயன்பட முனைந்திடுவோம்!

ஒட்டுமொத்த மனிதகுல மாண்பும், தனிமனித நலனும், சிறுபான்மையினரின் சமய உரிமைகளும், மற்றும் குறிப்பாக, நமது இருத்தலும் இயக்கமும் கேள்விக்குள்ளாகி, வாழ்வியல் நெருக்கடிகளை நாம் அன்றாடம் சந்திக்கும் இன்றைய அவலச் சூழலில் ‘நம் வாழ்வு’ கடவுள் நமக்கு அளித்த ‘உன்னதக் கொடை’ என்றே உணர்கிறேன்; இதை காலத்தின் கட்டாயத் தேவையாகவே கருதுகிறேன்.

நம் வாழ்வியலை வளப்படுத்தும் இச்சூழலில், நமது எண்ணங்களையும், கருத்தியலையும், நமது நம்பிக்கைக்கும், வாழ்வியலுக்கும் புறம்பான சமூக அவலங்களையும் அறநெறி வழிநின்று, மானுடத்திற்குப் புலப்படுத்தும் மேலான தளமாக, தமிழ்நாடு திருஅவையின் துணிவுமிக்கக் குரலாக இவ்விதழ் இன்னும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்; நமது உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்; நமது உடமைகள் காக்கப்பட வேண்டும்! பெருமை கொள்வோம் ‘இது நமது இதழ்! நமது குரல்!’ என்று. நம்பிக்கை கொள்வோம் ‘யாம் கொண்டோம், வலிமை மிகு ஆயுதம்’ என்றே!

இத்தகைய சூழலில், ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியை முன்னின்று வழிநடத்திச் செல்லும் இப்பெரும் பொறுப்பினை என்னிடம் வழங்கியுள்ள தமிழ்நாடு ஆயர் பெருமக்கள் அனைவருக்கும், சிறப்பாக, தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரும், இவ்வூடகப் பணிக்குழுவின் தலைவருமான பேராயர் மேதகு. ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘திறமையோடும், மனச்சான்று நிறைந்த கடமை உணர்வோடும், மிகுந்த நம்பிக்கையோடும் ஊடகங்களைப் பயன்படுத்தினால் நற்செய்தி அறிவிக்க பயனுள்ள பல வழிகளை அவை உருவாக்கித் தரும்’ (36வது உலகத் தொடர்பு நாள் செய்தி) என்ற திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுலின் கூற்றை உள்வாங்கிப் பயணிக்க விழைகிறேன்.

இக்கூர்முனை புரட்சிப் பயணத்தில், யாவரும் பன்முகத் தளங்களில் படிப்பினைகளை உள் வாங்கி, முழுமையான வளர்ச்சி கொண்டு புத்துலகம் படைத்திடப் புறப்படுவோம். தீமைகளைத் தவிர்த்து நன்மைகளை நமதாக்குவோம்.

உங்கள் பேராதரவுடன் ‘நம் வாழ்வு’ இன்றே வளரட்டும்! நமது வாழ்வும் நன்றே மலரட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment