No icon

தலையங்கம்

மூளைக்குள் மலம்

ஒவ்வொரு பள்ளிப் பாடநூலிலும் ‘தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல்’ என்று முதல் பக்கமே புதிய விடியல் சமுதாயத்தின் மையப் புள்ளி சிந்தனையாக அமைகிறது. “இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன், குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப் பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்” என்று ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு, காலை 11 மணி முதல் 11.02 மணி வரை மவுன அஞ்சலி செலுத்தி, தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழியையும் பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் நம் தமிழ்ச் சமூகம் தவறாமல் மேற்கொள்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்ட திட்டங்கள் தீண்டாமைக்கெதிராக நாட்டில் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் சமூக நோயான தீண்டாமைக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

பூலேக்களும், (நாராயண) குருக்களும், அண்ணல்களும், நாராயண் குருக்களும், பெரியார்களும் சீர்திருத்தம் செய்த போதிலும் சீரடையாத சமூகமாகவே இது நீடிக்கிறது. கத்தோலிக்கத் திரு அவையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகஸ்ட் 10 கறுப்புதினம், நவம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறு தலித் விடுதலை ஞாயிறு என்று திரு அவைக்குள் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை களைய போராடுகிறோம். சமூகத்திற்குள் மட்டுமல்ல; திரு அவைக்குள்ளும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இறையரசு-அக்கறையும் தேவைப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தீண்டாமை கறை போக்க ‘அக்கறை’ அமைப்புகள் அவசியப்படுகின்றன. சாதிவெறி முட்களின் முனைகள் பல்முனை போராட்டங்களின் விளைவாக மழுங்கடிக்கப்பட்டியிருக்கலாம்; ஆனால் அவற்றில் ஒட்டிள்ள விஷம் நீடிக்கிறது.

திருச்சி - இலால்குடி அருகே உள்ள திண்ணியத்தில் தலித்தின் வாயில் மலம் திணிக்கப்பட்டபோது தமிழகமே வெட்கி தலைகுனிந்தது. தமிழரின் தொண்டைக்குழிக்குள் கழிவுநீர் தேங்கியது போன்ற உணர்வு எல்லாருக்கும் ஏற்பட்டது. ஒரு சக மனிதனின் வாயில் திணிக்கப்பட்ட மலத்திற்கு துடிதுடித்த சமூகம், தற்போது ஓராயிரம் மக்களின் வாயில் தண்ணீரின் வழியாக மலம் திணிக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து போராடியிருக்க வேண்டாமா?

புதுக்கோட்டை வேங்கை வயல் இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர்த் தொட்டியில் அடையாளம் தெரியாத மனிதர்களால் மலம் கலக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லார் வாயிலும் மலம் திணிக்கப்பட்டது மரணத் தண்டனைக்குரிய ஒரு பெருங்குற்றம். தண்ணீர்த் தொட்டிக்குள் மலம் கழித்தவர்கள், இந்தச் சமூகத்திலிருந்து கழிக்கப்பட வேண்டியவர்கள். தண்ணீர்த் தொட்டிக்குள் மலம் கழித்தவர்களின் மூளைக்குள் மலம் கலந்திருக்கிறது. அல்லது e3மூளையே மலமாகி நாறி கிடக்கிறது.

வாழும்போது குடியிருப்புகளையும் பிரித்து, குடிக்கும்போது டீ குவளையையும் பிரித்து, குடிக்கும் தண்ணீர்த் தொட்டியையும் பிரித்து, பஞ்சாயத்துகளையும் ஊராட்சிகளையும் தொகுதிகளையும் தனித்தனியே பிரித்து, சாகும்போது இடுகாட்டையும் சுடுகாட்டையும் பிரித்து, கருவறை முதல் கல்லறை வரை இப்படி பிரித்து தீண்டாமையை திணிக்கும் இந்த கேடுகெட்ட சமூகத்தில், மண்டைக்குள் மலம் நிரம்பியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அடுத்தவன் வாய்க்குள் மலம் திணிப்பவர்களின் மூளைக்குள்தான் மலம் நிரப்பியிருக்கிறது. கல் மனம் படைத்தவர்கள் என்பதை இவர்களை மலம்மனம் படைத்தவர்கள் என்பதுதான் தகும். இவர்கள்தான் தீண்டத்தகாதவர்கள். தமிழின- மனித இன விரோதிகள்.

திருமாவளவனைத் தவிர அவ்வூரில் அடியெடுத்து வைக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக பிழைப்பு நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் சனநாயக பிச்சைக்காரர்கள்தான். வேங்கைவயலில் இந்த ஒற்றை சிறுத்தை மட்டுமே சிலிர்ப்பி கர்ஜிக்கிறது. கோமியத்தை விட சனாதனத்தை நேசித்து, குண்டுவெடிப்பு என்றாலே பயங்கரவாதம் என்று கதறும் காவிகள்கூட, சாதி என்று வந்துவிட்டால் சனாதனப் பொந்துக்குள் புகுந்துகொள்கின்றனர். திரு அவைத் தலைவர்கள்கூட தங்களின் தோழமையை எழுத்திலும் வெளிப்படுத்தவில்லை; செயலிலும் வெளிப்படுத்தவில்லை. காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தன்னை ஸ்காட்லாந்து யார்டு என்று இன்னொருமுறை நிரூபிக்காமல் தள்ளாடுகிறது.

அரசு இயந்திரமோ ‘ஆலய நுழைவை’ப் பற்றி அக்கறைபடுகிறதேயொழிய ‘மல நுழைவை’ப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவனை தொட்ட தொன்னூறுக்கும் வம்புக்கிழுக்கும் ராஜ்பவன்கூட ஆர்யபவனைப் போல வாயடைத்து (வாயில் வெங்காயமில்லாத வடை வைத்து) நிற்கிறது. பொதுப்புத்தியில் திணிக்கப்பட்ட தீண்டாமை, ஈராயிரம் ஆண்டுகளாக தின்று கொழுத்து பருத்து பெருகி பன்றியைப்போல குட்டிகளை ஈன்றுகொண்டேயிருக்கிறது. மண்டைக்குள் கொப்பளிக்கும் மலம், நகைமுரணாக ‘போசன வாய்’ வழியாகவே சமூகத்திற்குள் வெளியேறி கொண்டேயிருக்கிறது. ஆசனவாயை அது அறியாது போலும்.

ஏய் தமிழ்ச்சமூகமே! ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, அனைத்து உயிர்களையும் அன்புச் செய்யும் சமூகமாகவே நீ மீண்டும் உயிர் பெற வேண்டும். ‘என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதே உன் மானுடக் கொள்கையாக நீடிக்க வேண்டும். வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் பகுத்தறிவு மனம் உனக்கு எப்போதும் வேண்டும். சனாதன புல்லுருவியை, ஆர்ய மாயை நீ அப்புறப்படுத்தி, ‘மணிமேகலை’ வழியில் அமுதசுரபி வழி நின்று உன்னை நீயே புதுப்பிக்காவிட்டால் நீ வீழ்வது திண்ணம். சனாதனம் உன்னை விழுங்குவது திண்ணம்.

திண்ணியமும் இறையூரும் தமிழகத்தின் கருந்துளைகள். தமிழினத்தின் வேர்ப்பூச்சிகள். மூளைக்குள் மலம் நிறைந்தவர்கள் இருக்கிறவரை, தமிழினத்தின் வாய்க்குள் மலம் திணிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். வன்கொடுமையைவிட மிக மிகக் கொடூரமான, மனிதத்தன்மையற்ற நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல். காவல்துறையும் அரசு இயந்திரமும் தன்னார்வலர்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிச, திராவிட கொள்கைவாதிகளும் ஒருங்கிணைந்து தீண்டாமையின் கோர வடிவங்களை இன்றே வேரறுக்க வேண்டும். இனி நம் தொண்டைக்குழிகள் ஒருபோதும் மலக்குழிகளாகிவிடக் கூடாது. மூளையை மலத்தால் நிறைத்தவர்களால் மட்டுமே தொட்டிக்குள் மலம் கழிக்க முடியும்; தொண்டைக்குள் மலம் திணிக்க முடியும். கழுமரம்கூட இவர்களைச் சுமப்பது பாவம் என்று சரிந்துவிடும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை, தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திட வேண்டும். காக்கை குருவி நம் சாதியாவது இப்போதைக்கு வேண்டாம். ஆனால், செங்குருதி நிறைந்த சக மனிதன் என் சகோதரன் என்பது சாத்தியமாக வேண்டும்.

உங்கள் மூளைக்குள் ம..ல....மா? ம.. னி.. த..மா?

Comment