No icon

குடந்தை ஞானி

பூக்களை வெட்டும் கோடாரிகள்!

அண்மைக்காலமாகவே பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சென்னை, கோவை, திருச்சி, நீலகிரி, தஞ்சை என்ற பட்டியல் நீளும். பள்ளிகளே, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்த்தும் காமக் கூடாரங்களாகும்போது, எழுத்தறிவிக்கும் இறைவன் நிலையில் உள்ள ஆசிரியர்களே வக்கிரப் புத்தி நிறைந்து, காமக் கொடூரர்களாக தோன்றும்போது, எத்தனை போக்சோ சட்டங்கள் வந்தாலும் இவர்களைத் திருத்தமுடியாது என்றுதான் தோன்றுகிறது. பெண் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று எண்ணும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

பூக்களைக் காயப்படுத்தும் இந்தக் கோடாரிகளை  இந்தச்  சமுதாயத்திலிருந்து களையெடுக்காவிட்டால், குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளை, சுக்கு நூறாக உடைத்து, முறித்து, சுள்ளிகளாக அடுப்பில் வைக்காவிட்டால் நம் குழந்தைகளின் எதிர்காலம் இருண்டதாகவே தோன்றும். நம் சமுதாயத்தின் நீட்சியும் நீடிக்காது. இது என்றென்றைக்கும் ஒரு சமூகப் பாவமாகவே நிலைக்கும்.

பள்ளிகள் மட்டுமே பாலியல் சித்திரவதைக் கூடாரங்கள் என நாம் முத்திரை குத்திவிட முடியாது. நம்முடைய வீடுகளிலும்கூட காமப் பிசாசுகள் அலைந்து கொண்டிருக்கின்றன. பெற்ற மகளையே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் தந்தைகளும் உண்டு; தாயை இரண்டாந்தாரமாக அடைந்தபிறகு, அத்தாய்க்குப் பிறந்த பெண்பிள்ளைகளை பாலியன் வன்முறைக்குள்ளாக்கும் வக்கிர தந்தையர்களும் உண்டு. பேத்தி வயதில் இப்பெண் பிள்ளைகள் இருந்தாலும் மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிட்டுக்களைச் சிதைக்கும் தாத்தாக்களும் உண்டு. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கிய நிலையில் அத்துமீறும் வாலிப மாமாக்களும் உண்டு. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் அலைபாயும் வளரிளம் பெண் குழந்தைகளுக்கு வலைவிரிக்கும் வக்கிர வாலிபர்களும் உண்டு. ஆபாச வலைத்தளங்களுக்கு அடிமை சாசனம் எழுதியவர்களும் இங்கே உண்டு. ஆபாசப் படங்களைக்காட்டி, பாலியல் உணர்ச்சிகளைத்தூண்டி சுகம் காணும் அரசியல்வாதிகளும் உண்டு. அத்துமீறும் அருள்நிலையினரும் உண்டு. மருத்துவரும் உண்டு. ராணுவ வீரர்களும் உண்டு, விளையாட்டுத்துறையிலும் விதி மீறல் உண்டு. எல்லா நிலையினரும் எல்லா தரப்பினரும் இங்கே குற்றவாளிகளே! ஆன்லைன் வகுப்புகளில்கூட அத்துமீறி அசிங்கப்பட்ட ஆசிரியர்களும் உண்டு.

பச்சிளங்குழந்தைகளையும் பால்குடி மறவாத குழந்தைகளையும் கூட இந்த வக்கிர மனிதர்கள் விட்டு வைப்பதில்லை. இப்படி எல்லா நிலையினருக்கும் இருள் நிறைந்த பக்கங்கள் உண்டு. வெளியே சொன்னால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடுமே என்று மௌனியாகும் பெற்றோரும் இங்கே உண்டு. சமூக ஊடகங்களின் தாக்கம் நிறைந்த உலகில் இந்தச் சமூகப் பாவமும் நீக்க மற நிறைந்திருக்கிறது.

சமய நிறுவனங்களின் கட்டமைப்பில் இந்த சிறுகுழந்தைகளின் முக்கலும் முனகலும் வெளியே கேட்பதில்லை; அண்மையில் பிரெஞ்ச் திருஅவையில் குருக்கள் காலங்கலமாக நிகழ்ந்த அத்துமீறல்களுக்காக தாய்த்திருஅவை தலைகுனிந்து நின்றதையும் மறுப்பதற்கில்லை. திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் கூனி குறுகி மன்னிப்பு கேட்க தவறுவதில்லை. திருஅவையும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் இன்றும் துன்புறுகிறது.

மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ், மரணத் தண்டனை என்று கூட, சாட்டையைச் சுழற்றினாலும் இந்தச் சமூகத்தில் இந்த ஆணாதிக்க-காமவெறி அடங்க மறுக்கிறது. அதற்கு சாதி, இன, மொழி வேறுபாடு எதுவும் இல்லை. நீறு பூத்த நெருப்பாக அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் கண்கொத்தி பாம்பாக, கண்ணும் கருத்துமாக தங்கள் பெண் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தாய்க்கும் பெண் பிள்ளைக்குமான நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அன்றாட கருத்துப் பரிமாற்றமும் நம்பிக்கையும் இன்னும் வளர வேண்டும். இந்த நெருப்பு வளையத்தின் தீ, தங்கள் பெண் பிள்ளைகளைத் தீண்டாதவாறு ஒவ்வொரு பெற்றோரும் மாபெரும் பொறுப்புணர்வுடன் காத்திட வேண்டும். கொரோனா ஊரடங்கின்போது அதிகரித்து போக்சோ வழக்குகளே இந்த சமூக அவலத்தின் சாட்சியாக உள்ளது.

நர்சரி பள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை பாலியல் தொல்லை ஒரு சமூகப் பாவமாகவே காணக்கிடக்கிறதுவீட்டிற்கு அடுத்து பள்ளிகளில்தான் குழந்தைகள் அதிக நேரம்செலவிடுவதால், பள்ளி நிர்வாகம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரும் இரட்டைப் பொறுப்புணர்வுடன் இனி செயல்பட வேண்டும். ஒவ்வொரு தொடுதலும் ஓராயிரம் அர்த்தத்தைச் சொல்லும் என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். சாதி மட்டுமே சமுதாயப் பாவமன்று: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும்

சமூகப்பாவமே.

சமய நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், அனைத்து சமுதாய அமைப்புகளும் தங்களைத் தாங்களே சுய பரிசோதனைக்குள்ளாக்கி, தானாக முன்வந்து உரிய விதிமுறைகளை வகுத்து, கடைபிடித்து, சுய சுத்திகரிப்பை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அரசும் நீதிமன்றமும் மிகப்பெரிய பொறுப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் (பள்ளி, பங்கு, மறைமாவட்டம், கல்லூரி) பாலியல் வன்முறை நிகழாத வண்ணம் உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். அங்கு பணிபுரிகின்றவர்கள் விதிமுறைகளைக் கடைபிடிக்கவும் மீறினால் சுய பொறுப்பேற்கவும் ஒப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆணாதிக்க மன நிலையை அடியோடு வேரறுக்கவும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காமத்திற்கு கடிவாளமிட வேண்டும். காமுகர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

 இன்னும் எத்தனை தற்கொலைகளைத்தான் நாம் எதிர்கொள்வது? இன்னும் எத்தனை கடிதங்களைத்தான் கைப்பற்றி, கைப்பற்றி, விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்துவது? பெண்குழந்தைகளின் அழுகுரல் உங்கள் காதுகளில் எதிரொலிக்கவில்லையா? பார்க்காமல், கேட்காமல், பேசாமல் காந்தியின் குரங்கு பொம்மைகளாகவே நாம் இருந்தது போதும். இனியொரு விதி செய்வோம். இச் சமுதாய சதியை இன்றோடு வேரறுப்போம்.

பத்திரிகை தர்மம் கருதி, எவருடைய பெயரையும் இங்கே பயன்படுத்தவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆம்! அவர்கள் பெயரற்றவர்கள்; இந்தச் சமுதாயத்திற்கும் முகவரியற்றவர்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது சமுதாயப் பாவமே.

தயவுசெய்து பூக்களை, உங்கள் கோடாரிகளைக் கொண்டு கொய்திடாதீர்!

சமுதாயமே! கவனம்! எச்சரிக்கை!.

Comment