No icon

மையப்பொருள்: “துணையாளர்”

அன்பியக் கூட்டம் - 135

பாடல்: “தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர்”
தொடக்க வேண்டல்: படைப்பில் வெளிப்பட்ட ஆவியாரை எமக்குப் பரிசாக வழங்கிய தந்தையே இறைவா உமக்கே புகழும் வணக்கமும். ஆவியார் நிழலிட்டதால் மானிட வடிவேற்று அதே ஆவியாரை எமக்குத் துணையாளராக வழங்கிய இயேசுவே இறைவா உமக்கே புகழும் வணக்கமும். எங்களையும் உலகையும் புதுப்பித்து எமக்குத் துணையாளராக உடனிருக்கும் உன்னத ஆவியே இறைவா உமக்கே புகழும் வணக்கமும். இதோ உமது வழிநடத்துதலில் நாங்கள் தொடங்க இருக்கின்ற  எமது
---------------------------------------அன்பியத்திற்கு நிறைவாக ஆசிகளை வழங்கியருளும். உண்மைத் துணையாளர் யார்? அவர் நம் உடனிருந்து ஆற்றும் நலமான செயல்கள் எவை? நாம் எவ்வாறு பிறருக்குத் தூண்டாத் துணையாளராக விளங்க முடியும்? என்பன போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்கும் விதத்தில் உமது தூய ஆவியார் பெருவிழா நற்செய்தி வாசகத்தின் ஒளியில் எமது அன்பியக் கூட்டத்தில் சிந்திக்க இருக்கும் எமக்கு உறுதுணையாக வந்தருளும். இதில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் செயல்பாட்டுத் திட்டங்கள் நற்பயன் அளிக்கும் விதத்தில் அமையவும் அதன் வழியாக எங்கள் சமூக, ஆன்மிக, பொருளாதார வாழ்வு மேம்படவும் அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக -ஆமென்.
இறைவார்த்தை: யோவான் 14:15-16, 23-26
(இறைவார்த்தைப் பகிர்தலுக்கு உதவியாக ஒரு நிகழ்வு)
ஒருநாள் அந்தப் பேரூரில் ஒலிபெருக்கியில் தண்டரோசத்தமும் குரல் வழி அறிவிப்பும் இடம்பெற்றது. அதன்படி அன்று மாலை 6 மணியளவில் அந்த ஊரின் பொதுவெளியாகிய ‘ஆஸ்கர் ரொமேரோ திடலில்’ நடைபெறும் துணையாளர் பரிசுதிட்டத்திற்கு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர் என்ற அழைப்பு வெளிப்பட்டது. அத்துடன் ஒரு வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது. யாருக்கெல்லாம் துணையாளர் பரிசு தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாம் அங்கே வைக்கப்பட்டிருக்கும் சிறுபெட்டியில் தாங்கள் விரும்பும் அன்பளிப்பையும் வழங்க வேண்டும். அத்துடன் அருகில் உள்ள விண்ணப்பத்தில் தங்களது பெயரையும் அன்பளிப்பையும் குறித்த தகவலை எழுதிவிட்டு வரவேண்டும். அவரவரது நன்மனத்துக்கு ஏற்ப துணையாளர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மணி 7 ஆனது, துணையாளர் பரிசு வழங்குபவர் திடலுக்கு வந்தார். அங்கு அவரால் வைக்கப்பட்டிருந்த சிறுபெட்டிகளைத் திறந்து பார்த்தார். ஒரேயொரு பெட்டியில் தவிர வேறெதிலும் எக்காணிக்கைப் பொருளும் இல்லை. ஒரு பெட்டியில் மட்டும் ஏழை மாற்றுத் திறனாளி ஒருவர் ரூ.5000க்கான காசோலையை வழங்கியிருந்தார். அதில் நூறு மடங்காக ரூ.5 இலட்சம் ரூபாயை வைத்து விட்டுப் போய்விட்டார். இதைக் கேள்வியுற்ற அவ்வூர் மக்கள் வியப்பும் வெட்கமும் அடைந்தனர்.
சிந்தனை:
♦ முதல் மனிதன் ஆதாமின் துணையாளராக வழங்கப்பட்ட  மனைவி ஏவாள் பேயின்  தூண்டுதலால் தானும் கெட்டு தன் துணைவரையும் கெடுத்தது. (காண்.தொநூ 2:12 தொட)
♦ தூய ஆவியார் துணையாளர். அவர் படைப்பின் தொடக்கத்திலும், இயேசுவின் வாழ்விலும் செயல்பட்டார்.
♦ துணையாளரான தூய ஆவியார் நமது பங்களிப்புக்குத் தகுந்தபடி நமக்கு உதவியருள்வார்.
♦ நாம் தூய ஆவியாரை, நம்பி, ஏற்று நம்மில் தங்கச் செய்து அவரது வழிநடத்துதலுக்கு உட்படுவதற்கேற்ப நமக்கு வரங்களையும் வளங்களையும் வழங்குவார்.
♦ ¨தூய ஆவியாருக்கு எதிராகச் செய்யப்படும் எந்தச் செயலும் மறக்கப்பட, மன்னிக்கப்பட மாட்டா.
♦ தூய ஆவியாரின் வழிநடத்துதல் பற்றி முழுமையாக அறிய வாசிக்கவும். (1) கொடைகள் 1கொரி 12:4-11, (2) வரங்கள் 1கொரி 13:2,8  (3) வாழ்வியல் நலன்கள் எசா 11:2-5  (4) கனிகள் கலா 5:22, (5) கடமைகள் லூக் 4:18-19.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. திருப்பணியாளர்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட வாழ்வு  வாழ வேண்டுமென்று.
2. அன்பிய செயல்பாடுகளுக்கு தூய ஆவியாரின் ஞானம் பொழியப்பட வேண்டுமென்று.
3. தூய ஆவியாரின் கொடைகள் எல்லாருக்கும் புதுவாழ்வை வழங்க வேண்டுமென்று.
4. முடிந்தவரை எல்லாருக்கும் துணையாளராக இருக்கும் நல்லமனத்தை வழங்க வேண்டுமென்று.
திருப்பாடல்: 104: 24-34
பரிந்துரைக்கப்படும் செயல்திட்டங்கள்
1. ‘என்னில் தூய ஆவியாரின் ஆற்றல் உள்ளது’ என்பதை உணர்ந்த பொழுதுகள் என்ற தலைப்பில் பேச,   எழுதச் செய்தல்
2. நடைபெற வேண்டிய உள்ளாட்சிப் பணிகள் பற்றி குழுவாகச் சேர்ந்து ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்தல்.
நிறைவு வேண்டல்
ஆற்றலை வழங்கி உம்மைப் போற்றலைத் தொடரச் செய்யும் அன்பிறைவா, இன்று துணையாளராகிய தூய ஆவியாரைப் பற்றிய பல கருத்துக்களை எங்கள் உள்ளத்தில் பதியச் செய்த உமது பேரருளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். உமது ஆவியாரின் கொடைகள், வரங்கள், கனிகளைப் பெற்று எங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள அருள்தாரும். தூய ஆவியாரின் வழிநடத்துதலில் எங்கள் கடமைகளைத் திறம்படச் செய்ய எமக்கு என்றும் துணையாக  வாரும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக- ஆமென்.

Comment